ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி படுகொலை: சொத்து ஆவணங்கள் கொள்ளையா?


ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி படுகொலை: சொத்து ஆவணங்கள் கொள்ளையா?
x
தினத்தந்தி 25 April 2017 12:15 AM GMT (Updated: 24 April 2017 7:05 PM GMT)

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி படுகொலை: 10 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்- சொத்து ஆவணங்கள் கொள்ளையா?

கோத்தகிரி,

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் புகுந்து, காவலாளியை கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தது. இதில் மற்றொரு காவலாளி படுகாயம் அடைந்தார். சொத்து ஆவணங்களை கொள்ளையடிக்க இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோடநாடு எஸ்டேட்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 850 ஏக்கர் தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டுக்கு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் இயக்குனர்களாக உள்ளனர்.ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோதும், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் ஓய்வுக்காக அடிக்கடி இங்கு சென்று வந்தார். முதல்- அமைச்சராக இருந்தபோது அவர், அங்கிருந்து கொண்டே அரசு நிர்வாகத்தையும் வழி நடத்தி உள்ளார்.

சொகுசு பங்களா

கடந்த 1992-ம் ஆண்டில் வாங்கப்பட்ட இந்த எஸ்டேட்டில் தேயிலை, கொய்மலர் ஆகியவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். எஸ்டேட்டின் மையப்பகுதியில் 5 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் பிரமாண்ட சொகுசு பங்களா உள்ளது.

இதில் 12 நுழைவு வாயில்கள் மற்றும் 93 அறைகள் உள்ளன. பங்களாவில் காணொலி காட்சி மூலம் திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் வசதி மற்றும் ஹெலிகாப்டர் வந்து இறங்குவதற்கான தளம், படகு இல்லம், மினி தியேட்டர், கண்ணாடி மாளிகை, எஸ்டேட்டை சுற்றி பார்க்க பேட்டரி கார் வசதிகள் உள்ளன.

சொத்து குவிப்பு வழக்கு

இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 14-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சொத்து குவிப்பு வழக்கில் கோடநாடு எஸ்டேட்டும் இணைக்கப்பட்டதால் அபராத தொகைக்காக அந்த எஸ்டேட் பறிமுதல் செய்யப்படலாம் என்ற நிலை இருந்து வந்தது. இருந்தபோதிலும் எஸ்டேட்டில் வழக்கமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இங்கு காவலாளிகளாக நேபாளம் மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த 14 பேர் உள்ளனர். இவர்களுக்கு உள்ளேயே தங்க குடியிருப்புகள் உள்ளன.

இதில் நேற்று முன்தினம் இரவு எஸ்டேட்டின் 10-வது நுழைவு வாயிலில் நேபாள நாட்டில் உள்ள பகலூர் மாவட்டம் திம்புகார் கிராமத்தை சேர்ந்த ஓம் பகதூர் (வயது 50) என்பவரும், 8-வது நுழைவு வாயிலில் நேபாளத்தை சேர்ந்த கிருஷ்ண பகதூர் (38) என்பவரும் பணியில் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 கார்களில் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் எஸ்டேட்டுக்கு வந்தது. 10-வது நுழைவு வாயில் பகுதியில் அந்த கும்பல், கார்களை நிறுத்தி விட்டு, திடீரென அத்துமீறி உள்ளே நுழைய முயன்றது. இதனை சற்றும் எதிர்பார்க்காத ஓம் பகதூர், அந்த கும்பலை தடுத்து நிறுத்தி நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டுள்ளார்.

கொலை

உடனே அந்த கும்பல் ஓம் பகதூரை தாக்கியது. திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து போன காவலாளி கீழே விழுந்தார்.உடனே அந்த ஆசாமிகள்,அவரது கை, கால்களை நைலான் கயிற்றால் கட்டி, வாயில் பிளாஸ்திரி போட்டு ஒட்டினர். இதனால் அவர் எதுவும் பேச முடியாமல் திணறினார். அத்துடன் நின்று விடாமல் அந்த கும்பல் மற்றொரு நைலான் கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையில் சத்தம் கேட்டு 8-வது நுழைவு வாயிலில் இருந்த மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூர் அங்கு ஓடிவந்தார். அவரையும் தாக்கியதுடன் அவரது கையை கத்தியால் வெட்டினர். இதில் அவர் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார்.இதைத்தொடர்ந்து அந்த கும்பல் பங்களாவில் உள்ள அறைகளுக்குள் சென்றது. அப்போது வெளியில் தொழிலாளர்கள் சத்தம் கேட்கவே, அந்த கும்பல் சிறிது நேரத்தில் அங்கிருந்து காரில் ஏறி தப்பி சென்று விட்டது.

உடலை கைப்பற்றினர்

இது குறித்து சக தொழிலாளர்கள் கோடநாடு எஸ்டேட் நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் உடனே கோத்தகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய காவலாளி கிருஷ்ண பகதூரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஓம் பகதூர் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கோடநாடு பகுதி கோத்தகிரி ஆஸ்பத்திரி எல்லைக்குட்பட்டது இல்லை என்பதால், அங்குள்ள மருத்துவர்கள், ஒம் பகதூர் உடலை கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சொத்து பத்திரங்கள்-ஆவணங்கள்

தொடர்ந்து கோவை சரக டி.ஐ.ஜி. தீபக் தாமோர், மேற்கு மண்டல ஐ.ஜி. பாரி, நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் அங்குள்ள காவலாளிகளிடம் விசாரணை நடத்தினர். 10-க்கும் மேற்பட்ட போலீஸ் நாய் வரவழைக்கப்பட்டன. அந்த நாய்கள் எஸ்டேட்டில் அங்கும், இங்கும் ஓடின. யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.கோடநாடு எஸ்டேட் காவலாளியை மர்ம கும்பல் கொலை செய்து வெறிச்செயலில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மர்ம கும்பல் அ.தி.மு.க.கட்சியின் முக்கிய ஆவணங்கள், ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்து பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை கொள்ளைடித்து சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து போலீசார் பல கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் காவலாளி கிருஷ்ண பகதூர் அளித்த வாக்கு மூலம் அடிப்படையில் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் மீது ஆயுதத்துடன் வருதல் (449 பிரிவு), தடுத்து நிறுத்துதல் (342 பிரிவு), கொலை முயற்சி (307 பிரிவு), கொள்ளை முயற்சி (396 பிரிவு) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் பின்னணி காரணமா?

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக பதவி ஏற்ற தினகரனிடம் இரட்டை இலைசின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக புகாரின் பேரில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கோடநாடு எஸ்டேட் காவலாளி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இதில் ஏதேனும் அரசியல் பின்னணி உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயங்கியதால் இறந்ததாக நினைத்து என்னை விட்டு விட்டனர், படுகாயம் அடைந்த காவலாளி பேட்டி

கோடநாடு எஸ்டேட்டில் மர்ம கும்பலால் ஓம் பகதூர் என்கிற காவலாளி கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் படுகாயம் அடைந்தார். அவர் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கூறியதாவது:-

அலறல் சத்தம்

நான் கோடநாடு தேயிலை எஸ்டேட்டில் உள்ள 8-ம் எண் கொண்ட நுழைவு வாயிலில் (கேட்) இரவில் பணி புரிந்தேன். இதற்கு அருகில் உள்ள 9-ம் எண் கொண்ட கேட்டில் ஓம்பகதூர் பணிபுரிந்தார். அதன் அருகிலேயே 10-ம் எண் கொண்ட கேட்டும் உள்ளது. 9 மற்றும் 10-ம் எண் கொண்ட கேட்டுகளில் கண்காணிப்பு பணியை ஓம்பகதூர் மட்டுமே மேற்கொண்டார். பெரும்பாலும் இங்கு இரவு நேரத்தில் யாரும் வரமாட்டார்கள். இந்த நிலையில் அதிகாலையில் ஓம்பகதூரின் அலறல் சத்தம் கேட்டது. இதனால் ஓடி சென்று அங்கு பார்த்தேன்.

என்னை விட்டுவிட்டனர்

அப்போது 5 அல்லது 7 நபர்கள் ஓம்பகதூரை தாக்கி கொண்டு இருந்தனர். அவர்களை தடுக்க முயன்றேன். அப்போது என்னை அவர்கள் தாக்கினர். மேலும் என் கைகளில் கத்தியால் வெட்டினர். இதனால் மயக்கம் அடைந்து விழுந்தேன். நான் இறந்து விட்டதாக அவர்கள் கருதி, என்னை விட்டு விட்டு சென்று விட்டனர். நான் மயங்க வில்லை என்றால் என்னையும் கொலை செய்து இருக்கலாம். நான் பிழைத்தது கடவுள் செயல். பின்னர் மயக்கம் தெளிந்து மற்ற கேட்டுகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தேன். இதனை தொடர்ந்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதற்குள் அந்த கும்பல் தப்பிச்சென்று விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story