சென்னை ஏரிகளில் ‘தெர்மாகோல்’ மிதக்க விடும் திட்டம் கைவிடப்பட்டது ஏன்?


சென்னை ஏரிகளில் ‘தெர்மாகோல்’ மிதக்க விடும் திட்டம் கைவிடப்பட்டது ஏன்?
x
தினத்தந்தி 24 April 2017 9:45 PM GMT (Updated: 24 April 2017 7:26 PM GMT)

வைகை அணையில் திட்டம் தோல்வி அடைந்ததால், சென்னை ஏரிகளில் தண்ணீர் ஆவியாவதை தடுக்க ‘தெர்மாகோல்’ மிதக்கவிடும் திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டு உள்ளது’ என்று அதிகாரிகள் கூறினார்கள்.

சென்னை,

மாநிலம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதால், குடிநீர் பயன்பாட்டுக்காக தமிழக அணைகள் மற்றும் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் வெப்பத்தால் ஆவியாகி வருகிறது. இதனை தடுப்பதற்காக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையில் உள்ள தண்ணீர் ஆவியாவதை தடுப்பதற்காக ரூ.10 லட்சம் மதிப்பில் ‘தெர்மாகோல்’ அட்டைகளை மிதக்க விடும் திட்டத்தை தொடங்கிவைத்தார்.

இந்த திட்டம் தொடங்கப்பட்டு சிறிது நேரத்தில் அட்டைகள் அனைத்தும் பலமாக வீசிய காற்றில் அடித்து செல்லப்பட்டதுடன், பெரும்பாலான அட்டைகள் உடைந்து கரை ஒதுங்கின. உடனடியாக பரிசல் மூலம் அனைத்து அட்டைகளும் சேகரிக்கப்பட்டு, மீண்டும் அணையின் நடுப்பகுதியில் கொண்டு மிதக்கவிடப்பட்டன. மீண்டும் அவை அனைத்தும் சேதமடைந்து கரை ஒதுங்கின. இந்ததிட்டம் வெற்றி பெற்றால் அனைத்து அணைகள் மற்றும் நீர்நிலைகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இந்த திட்டம் ஆரம்பத்திலேயே தோல்வியை தழுவியது. இதற்கிடையில் சென்னைக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் உள்ள தண்ணீர் ஆவியாவதையும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:–

அதிக முதலீடு

ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் 10 முதல் 15 சதவீதம் வரை ஆவியாவது என்பது இயற்கை தான். அதனை தடுக்க அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது அங்குள்ள ஏரிகளில் அதிக முதலீட்டில் கருப்பு நிறத்தில் ராட்சத ரப்பர் பந்துகள் மிதக்கவிடப்பட்டன. அதன்படி தண்ணீர் ஆவியாவது தடுக்கப்பட்டு திட்டம் வெற்றி பெற்றது. அதேபோன்று நம் மாநிலத்தில் உள்ள ஏரிகளில் ஓரிரு மாதங்களில் ஏற்படும் வெப்பத்தின் தாக்கத்திற்கு அதிகளவு முதலீடு செய்வது என்பது ஏற்புடையது அல்ல.

30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஏரிகளில் தாமரை இலை, அல்லி போன்றவை அடர்ந்து இருந்ததால் தண்ணீர் ஆவியாவது தடுக்கப்பட்டு வந்தது. ஆனால் அப்போது சுற்றுச்சூழலும் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை, ஏரிகளும் சுத்தமாக இருந்தது. ஆனால் தற்போது அணைகள், ஏரிகள் அருகிலேயே சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படும் பல்வேறு நிகழ்வுகள் நடக்கிறது. தண்ணீரில் நேரடியாக சூரிய ஒளி விழுந்தால் தான் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களில் இருந்து குடிதண்ணீரை சுத்தமாக பாதுகாக்க முடியும். ஆவியாவதை தடுத்தால் தண்ணீரை சுத்தமாக வைக்க முடியாது, தண்ணீரை சுத்தமாக வைக்க வேண்டும் என்றால் தண்ணீர் ஆவியாவதை தடுக்க முடியாது.

கைவிடப்பட்ட திட்டம்

வைகை அணையில் உள்ள தண்ணீர் ஆவியாவதை தடுப்பதற்காக தண்ணீரின் மேலே மிதக்கவிடப்பட்ட ‘தெர்மாகோல்’ அட்டைகள் பலத்த காற்றில் கிழிந்து போனது. ஒரு சில அட்டைகள் கரையோரம் ஒதுங்கியது. ஒரு சில ‘தெர்மாகோல்’ அட்டைகள் தண்ணீரில் மிதக்கவிடப்பட்டு சிறிது நேரத்தில் முட்டை போல் சிறிய சிறிய துண்டுகளாக மிதக்க ஆரம்பித்தன. இதனை மீன்களும், பறவைகளும் சாப்பிட்டால் இறக்க நேரிடும் நிலையும் ஏற்பட்டது.

தெர்மாகோலில் உள்ள ரசாயன பொருளால் குடிநீரும் வீணாவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே சென்னையில் உள்ள ஏரிகளில் தெர்மாகோல் மிதக்கும் திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story