எழில் நகரில், குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


எழில் நகரில், குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 24 April 2017 10:00 PM GMT (Updated: 24 April 2017 7:29 PM GMT)

எழில் நகரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பூர்,

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட எழில் நகர், எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக குடிதண்ணீர் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட மாநகராட்சி குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதற்கிடையே ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அந்த பகுதிகளில் தினமும் லாரிகள் மூலம் குடிதண்ணீர் வினியோகம் செய்து வந்தனர். பின்பு இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட பின்னர் லாரிகள் மூலமும், மாநகராட்சி குடிநீர் குழாய்களிலும் தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை.

சாலை மறியல்

இந்த நிலையில் உடனடியாக தண்ணீர் வினியோகம் செய்யக்கோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் மற்றும் பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் என 150–க்கும் மேற்பட்டோர் நேற்று காலி குடங்களுடன் எழில் நகரில், கொடுங்கையூர்–மணலி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் எம்.கே.பி. நகர் போலீஸ் உதவி கமி‌ஷனர் அன்பழகன் தலைமையில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அதிகாரிகள் சமரசம்

ஆனாலும் சமரசம் அடையாத பொதுமக்கள் சாலையின் ஓரமாக நின்று போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் தொடர்ந்து மாநகராட்சிக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற மாநகராட்சி குடிநீர் வாரிய அதிகாரிகள் பொதுமக்களிடம் ‘சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதி அளித்தனர்.

இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் கொடுங்கையூர்–மணலி சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story