முழு அடைப்பு போராட்டம்: போலீஸ் பாதுகாப்புடன் ரெயில்கள் ஓடும்


முழு அடைப்பு போராட்டம்: போலீஸ் பாதுகாப்புடன் ரெயில்கள் ஓடும்
x
தினத்தந்தி 24 April 2017 10:45 PM GMT (Updated: 24 April 2017 7:31 PM GMT)

முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் போலீஸ் பாதுகாப்புடன் ரெயில்கள் இன்று ஓடும். ரெயில் நிலைய வளாகத்தில் போராட்டம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள், விவசாய சங்கங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தால் பஸ் போக்குவரத்து பாதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. இதுகுறித்து ரெயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரெயில் போக்குவரத்து பாதிக்கக் கூடாது என்பதிலும், பயணிகள் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலும் ரெயில் நிலையங்கள் தீவிர பாதுகாப்பு வளையத்தில் செயல்படும். தமிழகம் முழுவதும் வழக்கத்தைவிட 5 மடங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். போலீஸ் பாதுகாப்புடன் ரெயில்கள் ஓடும்.

கடும் நடவடிக்கை

முக்கியமாக சென்னை சென்டிரல், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் தலா 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதுதவிர ரெயில் நிலையத்தின் அனைத்து நுழைவு வாயில்களிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

கண்காணிப்பு கேமராக்களை தீவிரமாக கண்காணிப்பதற்காக கட்டுப்பாட்டு அறையில் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்படுவார்கள். ரெயில் நிலைய வளாகத்தில் போராட்டம் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story