அச்சுறுத்தல் இருப்பதால் மத்திய அரசு அனுமதி: ஓ.பன்னீர்செல்வத்துக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு


அச்சுறுத்தல் இருப்பதால் மத்திய அரசு அனுமதி: ஓ.பன்னீர்செல்வத்துக்கு ‘ஒய்’  பிரிவு பாதுகாப்பு
x
தினத்தந்தி 24 April 2017 11:30 PM GMT (Updated: 24 April 2017 7:35 PM GMT)

ஓ.பன்னீர்செல்வத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதால் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பினை மத்திய அரசு வழங்கியுள்ளது. மத்திய ரிசர்வ் படையினர் உடனடியாக பணியை தொடங்கினர்.

சென்னை,

முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி (அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா), சசிகலா அணி (அ.தி.மு.க. அம்மா) என 2 ஆக உடைந்தது. முன்னாள் முதல்–அமைச்சர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒரு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தலைமையில் ‘ஷிப்டு’ அடிப்படையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அவர் எங்கு சென்றாலும் போலீசாரும் பாதுகாப்புக்காக உடன் சென்றனர். இந்த நிலையில் சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் அரசு பங்களா மீது சில தினங்களுக்கு முன்பு கல்வீசி தாக்கப்பட்டது. இதேபோல தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீடு, போடி நாயக்கனூரில் உள்ள அவருடைய எம்.எல்.ஏ. அலுவலகமும் கல் வீசி தாக்கப்பட்டது.

அச்சுறுத்தல்

ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊருக்கு சென்றபோது, அவருடைய கார் மீதும் கல் வீசி தாக்குதல் நடந்தது. இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த டாக்டர் மைத்ரேயன் எம்.பி. புதுடெல்லியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். அப்போது, ஓ.பன்னீர்செல்வத்துக்கு தொடர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்து விளக்கி கூறினார்.

மேலும் அவருக்கு துணை ராணுவப்படை பிரிவு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க கடந்த 2–ந் தேதி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு

அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு நேற்று முதல் வழங்கியுள்ளது. துணை ராணுவப்படை என்று அழைக்கப்படும் மத்திய ரிசர்வ் படை பிரிவை சேர்ந்த 12 பேர் பாதுகாப்பு பணிக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். சென்னை போயஸ் கார்டன் அருகே வீனஸ் காலனியில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் துப்பாக்கி ஏந்தியவாறு அவர்கள் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வீட்டின் உள்ளே ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். ஒரு ‘ஷிப்டு’க்கு 4 பேர் என்ற அடிப்படையில் 3 ‘ஷிப்டு’கள் அவர்கள் துப்பாக்கி ஏந்தியவாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாதுகாப்பு வழங்குவார்கள். ஓ.பன்னீர்செல்வம் எங்கு சென்றாலும் துணை ராணுவப்படையினரும் உடன் செல்வார்கள்.

Next Story