ஓடும் ரெயிலில் நடந்த கொள்ளை சம்பவத்தில் துப்பு கிடைக்கவில்லை


ஓடும் ரெயிலில் நடந்த கொள்ளை சம்பவத்தில் துப்பு கிடைக்கவில்லை
x
தினத்தந்தி 26 April 2017 10:00 PM GMT (Updated: 26 April 2017 8:43 PM GMT)

சேலத்தில் இருந்து சென்னை வந்த சேலம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் துவாரம்போட்டு ரூ.5¾ கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.

சென்னை,

ஓடும் ரெயிலில் துவாரம்போட்டு ரூ.5¾ கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 250 நாட்களுக்கு மேல் ஆகியும் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. செல்லாத நோட்டு என்பதால் இந்த வழக்கும் செல்லாக்காசு ஆகி விட்டதாக கருதப்படுகிறது.

ஓடும் ரெயிலில் கொள்ளை

சேலத்தில் இருந்து சென்னைக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு 9–ந்தேதி சேலம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கிழிந்த மற்றும் பழைய ரூபாய் நோட்டுகள் ரூ.342.75 கோடி கொண்டு வரப்பட்டது. சேலம் மண்டலத்திற்குட்பட்ட 5 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து இந்த ரூபாய் நோட்டுகள் 226 மரப்பெட்டிகளில் ‘சீல்’ வைக்கப்பட்டு ரெயிலில் கொண்டு வரப்பட்டது.

சேலத்தில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்ட அந்த ரெயில், சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு வந்தது. ஓடும் ரெயிலில் பணம் கொண்டு வந்த ரெயில் பெட்டியின் மேற்கூரையை வெட்டி துவாரம் போட்டு அதன் வழியாக புகுந்த கொள்ளையர்கள் 3 மரப்பெட்டிகளை உடைத்து ரூ.5¾ கோடியை கொள்ளையடித்து சென்றனர்.

போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி

இந்த கொள்ளை வழக்கு தமிழகம் மட்டுமன்றி இந்தியாவையே உலுக்கியது. நூதனமாக நடந்த இந்த கொள்ளை சம்பவம் போலீஸ் அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இச்சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும், சென்னை நகர போலீஸ் துணையோடு விசாரணை மேற்கொண்டனர்.

ரெயில் புறப்பட்ட சேலம் ரெயில் நிலையம் தொடங்கி, ரெயில் வந்தடைந்த எழும்பூர் ரெயில் நிலையம் வரை ரெயில் பாதையை ஆய்வு செய்து போலீசார் தடயங்களை சேகரித்தனர். ரெயில் பாதையை ஒட்டியுள்ள கிராமங்களிலும் முகாமிட்டு போலீசார் விசாரித்தனர்.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை

பின்னர் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வாலின் நேரடி மேற்பார்வையில் 4 போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. ரெயில் கொள்ளை சம்பவம் நடந்து 250 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இதுவரை இச்சம்பவத்தில் குற்றவாளிகள் பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இதுவரை சந்தேக நபர்கள் 5 ஆயிரம் பேரை பிடித்து விசாரித்தனர். மும்பைக்கு தனிப்படையினர் சென்று சுமார் 200–க்கும் மேற்பட்ட வடமாநில கொள்ளையர்கள் பற்றியும் விசாரணை மேற்கொண்டனர். வடமாநிலங்களில் ரெயில் கொள்ளையில் சம்பந்தப்பட்ட பழைய குற்றவாளிகள் பற்றியும் விசாரித்து விட்டனர். ஆனால் இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

செல்லாத நோட்டுகள்

கொள்ளையடிக்கப்பட்ட பணம் பெரும்பாலும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளாகும். மத்திய அரசு ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. எனவே அந்த பணம் செல்லாது என்பதால் இந்த வழக்கும் செல்லாக்காசாக ஆகிவிட்டது போன்ற தோற்றத்தில் தற்போது காணப்படுகிறது.

இந்த வழக்கைப்பற்றி சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளிடம் எப்போது கேட்டாலும், ‘விசாரணை நடத்துகிறோம், கொள்ளையர்களை பிடித்த உடன் தகவல் சொல்கிறோம்’ என்று ஒரே பதிலை திரும்ப திரும்ப கூறுகின்றனர். அநேகமாக இந்த வழக்கு புதைகுழிக்கு போய்விட்டதாகவே போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Next Story