சென்னையில் பயங்கரம் தாய்–மகள் படுகொலை


சென்னையில் பயங்கரம் தாய்–மகள் படுகொலை
x
தினத்தந்தி 26 April 2017 10:15 PM GMT (Updated: 26 April 2017 8:45 PM GMT)

சென்னையில் தாய்–மகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டை கே.பி.கோவில் தெருவை சேர்ந்தவர் ஹேமலதா (வயது 51). பொதுப்பணித்துறையில் பணியாற்றி வந்த இவருடைய கணவர் சண்முகம் ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு பாலமுருகன் என்ற மகனும், ஜெயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். பாலமுருகன் பொறியியல் பட்டதாரி. தரமணியில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். மகள் ஜெயலட்சுமி சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று ஹேமலதா வீட்டின் கதவு சாத்திய நிலையில் இருந்தது. இரவு 8 மணியளவில் அவரது வீட்டுக்கு உறவினர் சிலர் வந்தனர். அவர்கள் சாத்திய கதவை திறந்து பார்த்தபோது, அங்கே ஹேமலதா மற்றும் அவரது மகள் ஜெயலட்சுமி ஆகியோர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அவர்களை யாரோ கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சைதாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார் கொலை செய்யப்பட்ட தாய், மகள் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளி யார்?

போலீஸ் கமி‌ஷனர் கரண்சின்கா உத்தரவின் பேரில், கூடுதல் கமி‌ஷனர் சங்கர், இணை கமி‌ஷனர் அன்பு ஆகியோர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. வீடு முழுவதும் சுற்றி வந்த மோப்ப நாய், தெருவில் சிறிது தூரம் ஓடி நின்றது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொலை செய்யப்பட்ட வீட்டின் சுவர் மற்றும் பொருட்களில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

இது குறித்து கூடுதல் கமி‌ஷனர் சங்கர் கூறும்போது, ‘4 தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை தேடி வருகிறோம். நகைக்காக படுகொலை நடந்தது போல் தெரியவில்லை. கொலை செய்யப்பட்டவரின் மகன் பாலமுருகன் காணாமல் போய் இருக்கிறார். அவரின் செல்போனும் ஆப் செய்யப்பட்டுள்ளது. எனவே அவர் மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது. இந்த படுகொலைகள் பகலிலேயே நடந்து இருக்கலாம் என்று கருதுகிறோம்’ என்று தெரிவித்தார். தாய்–மகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story