சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு : 22 கல்குவாரிகளில் உள்ள தண்ணீரை விரைவில் பயன்படுத்த திட்டம்


சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு :  22 கல்குவாரிகளில் உள்ள தண்ணீரை விரைவில் பயன்படுத்த திட்டம்
x
தினத்தந்தி 26 April 2017 10:45 PM GMT (Updated: 26 April 2017 8:48 PM GMT)

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 22 கல்குவாரிகளில் உள்ள தண்ணீரை விரைவில் பயன்படுத்த திட்டமிட்டு இருப்பதாக பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை,

சென்னைக்கு குடிநீர் வினியோகம் செய்யும் ஏரிகளில் நாளுக்கு நாள் நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு முறையான குடிநீர் வினியோகம் என்பது கேள்வி குறியாகிவிட்டது. ஏரிகளில் இருந்து பெறப்படும் சொற்ப அளவு தண்ணீருடன், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 300 விவசாய கிணறுகளில் இருந்து தினசரி 45 முதல் 70 மில்லியன் லிட்டர் தண்ணீரும், நெய்வேலியில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து தினசரி 45 முதல் 70 மில்லியன் லிட்டர் தண்ணீரும் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.

அத்துடன் மாமல்லபுரம் செல்லும் சாலையில் உள்ள நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக மாற்றும் நிலையத்தில் இருந்து தினசரி 100 மில்லியன் லிட்டர் கடல் நீர் குடிநீராக மாற்றப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மாற்றுவழிகள்

இதுபோதுமானதாக இல்லாததால் மாற்று வழிகளை தேடி அதிகாரிகள் அலைய தொடங்கி உள்ளனர். குறிப்பாக போரூர் ஏரியின் கிழக்கு பகுதியில் 12 அடி ஆழத்துக்கும், மேற்கு பகுதியில் 6 அடி ஆழத்துக்கும் தண்ணீர் இருப்பு உள்ளது. அதேபோல் சென்னையின் புறநகர் பகுதியான மாங்காட்டில் 22, திருநீர்மலையில் 3, பம்மல் 3, நன்மங்கலத்தில் 3 என 31 கல்குவாரிகளில் தண்ணீர் எடுக்க திட்டமிடப்பட்டது. அதில் உள்ள தண்ணீரும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இவற்றில் இருந்து தண்ணீரை எடுத்து பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:–

ஏரிகளை நம்பி பயனில்லை

சென்னைக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பூண்டி ஏரியில் இருக்கும் 74 மில்லியன் கன அடி தண்ணீரில் தினசரி வினாடிக்கு 15 கன அடி தண்ணீர் வீதம் குடிநீர் தேவைக்காக திறந்துவிடப்படுகிறது. அதேபோல் புழல் ஏரியில் உள்ள 481 மில்லியன் கன அடி தண்ணீரில் வினாடிக்கு 85 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள 330 மில்லியன் கன அடி தண்ணீரில் வினாடிக்கு 66 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது. சோழவரம் ஏரி முற்றிலும் வறண்டுவிட்டது. சென்னை மாநகருக்கு தினசரி 18 முதல் 20 மில்லியன் கன அடி தண்ணீர் தேவைப்படுகிறது.

இந்த 3 ஏரிகளிலும் சேர்த்து 885 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதில் ஏரிகளின் கீழ்ப்பகுதியில் இருக்கும் 250 மில்லியன் கன அடி தண்ணீரை எடுத்து பயன்படுத்த முடியாது. மீதம் இருக்கும் 635 மில்லியன் கன அடி  தண்ணீர் மட்டுமே எஞ்சி உள்ளது. இதை வைத்துக் கொண்டு 38 நாள் வரை தண்ணீர் தேவையை பூர்த்தி செய்துவிட முடியும் என்று நம்புகிறோம். மீதம் உள்ள நாட்களுக்கு தேவையான குடிநீருக்காக இனி ஏரிகளை நம்பி பயனில்லை. பலன் தரும் மாற்றுவழிகளைத்தான் தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

22 கல்குவாரிகளில் தண்ணீர்

குறிப்பாக 31 கல்குவாரிகளில் உள்ள தண்ணீரை ஆய்வுக்கு அனுப்பியதில் 22 கல்குவாரிகளில் உள்ள தண்ணீரை பயன்படுத்தலாம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த தண்ணீரை விரைவில் பயன்படுத்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். நெய்வேலி சுரங்கத்தில் இருந்து பெறப்படும் தண்ணீர் வீராணம் குழாய் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.

 அந்த குழாயின் கொள்ளளவை விட குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே நெய்வேலியில் இருந்து அனுப்பப்படுவதால் போதிய அளவு தண்ணீர் இந்த குழாய்கள் மூலம் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதில், முழு கொள்ளளவில் தண்ணீர் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் போரூர் ஏரியில் இருந்து தினசரி 45 லட்சம் லிட்டர் வீதம் 60 நாளைக்கு குடிநீர் எடுப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறோம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Next Story