50 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்: அரசு டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் ஊர்வலம்


50 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்: அரசு டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 26 April 2017 11:15 PM GMT (Updated: 26 April 2017 8:54 PM GMT)

50 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அரசு டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் சென்னையில் நேற்று ஊர்வலமாக வந்தனர்.

சென்னை,

கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவ அலுவலர்களுக்கு முதுநிலை மேற்படிப்புகளில் வழங்கப்படும் 50 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு டாக்டர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள், பயிற்சி மருத்துவ மாணவர்கள் கடந்த 8 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்த அரசு டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து எழும்பூர் லேங்ஸ் தோட்டச்சாலை வரை நேற்று ஊர்வலமாக வந்தனர்.

அவர்கள் கையில் பதாகைகளை ஏந்தியவாறு மேற்படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அவசர சட்டம் இயற்றி அதை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பியவாறு வந்தனர்.

இதுகுறித்து ஊர்வலத்தில் கலந்து கொண்ட பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் கூறியதாவது:–

போராட்டம் தொடரும்

50 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ததை தவிர்த்து விட்டு, இதுதொடர்பாக அவசர சட்டம் இயற்றி மீண்டும் கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவ அலுவலர்களுக்கு முதுநிலை மேற்படிப்புகளில் வழங்கப்படும் 50 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். அதுதான் சரியான தீர்வு.

அதுவரை எங்களுடைய போராட்டம் தொடரும். இடஒதுக்கீட்டை ரத்து செய்வதால் கிராமப்புற பகுதிகளில் சேவை செய்யும் டாக்டர்களின் எண்ணிக்கை குறையும். இதனால் பொதுமக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எனவே இது எங்களுக்கான பிரச்சினை என்று பொதுமக்கள் நினைக்கக்கூடாது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story