வில்லியனூர் அருகே பழிக்குப்பழியாக நடந்த சம்பவம்: ரவுடி கொலையில் 9 பேர் கைது


வில்லியனூர் அருகே பழிக்குப்பழியாக நடந்த சம்பவம்: ரவுடி கொலையில் 9 பேர் கைது
x
தினத்தந்தி 26 April 2017 11:45 PM GMT (Updated: 26 April 2017 10:29 PM GMT)

வில்லியனூர் அருகே பழிக்குப்பழியாக ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

வில்லியனூர்,

புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள உருவையாறு பேட் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் ரவி (வயது 24). ரவுடி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சக்திகுமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த ஆண்டு சக்திகுமார் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ரவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால் ஊருக்குள் நுழைய ரவிக்கு போலீசார் தடை விதித்த இருந்தனர். இந்த தடைக்காலம் முடிவடைந்தநிலையில் நேற்று முன்தினம் ரவி ஊருக்கு வந்தார். தனது வீட்டில் இருந்து மெயின்ரோட்டுக்கு வந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு 5 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் ரவியை ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

தம்பி உள்பட 9 பேர் கைது

இந்த கொலை சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன், மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு தெய்வசிகாமணி, வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

இதுதொடர்பாக வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் சக்திகுமாரின் கொலைக்கு பழிக்குப்பழியாக அவரது தம்பி ராஜசேகரன் மற்றும் சக்திகுமாரின் கூட்டாளிகள் சேர்ந்து ரவியை கொலை செய்தது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடிவந்தனர். இந்தநிலையில் அவர்கள் வில்லியனூர் பகுதியில் பதுங்கி இருப்பாக தகவல் கிடைத்து போலீசார் அங்கு சென்று தேடினர். உருவையாறு பேட் பகுதியில் ராஜசேகரன், விக்கி, குருநாதன், வில்லியனூரைச் சேர்ந்த அய்யப்பன், கீர்த்தி, உருவையாறு பேட் பகுதியை சேர்ந்த பிரதீப், முத்துபாண்டி உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரவி கொலையால் உருவையாறுபேட் பகுதியில் தொடர்ந்து பதற்றம் இருந்து வருவதால் அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story