149 ஆண்டுகளுக்கு முன்பு புலியுடன் போரிட்டு இறந்த ரெயில் என்ஜின் ஓட்டுனரின் கல்லறை


149 ஆண்டுகளுக்கு முன்பு புலியுடன் போரிட்டு இறந்த ரெயில் என்ஜின் ஓட்டுனரின் கல்லறை
x
தினத்தந்தி 29 April 2017 11:30 PM GMT (Updated: 29 April 2017 8:39 PM GMT)

149 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்: புலியுடன் போரிட்டு இறந்த ரெயில் என்ஜின் ஓட்டுனரின் கல்லறை போத்தனூரில் கண்டு கொள்ளாமல் கிடக்கும் அவலம்

கோவை

அது....1868–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10–ந்தேதி. கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் இருந்து கோவை போத்தனூருக்கு அந்த காலத்து நீராவி என்ஜின் ரெயில், தனக்குரிய நிலக்கரி புகையை அள்ளி வீசி புறப்பட்டது. இதனை அப்போதைய ஆங்கிலேயர் ஜான் வில்சன் (வயது 29) என்பவர் ஓட்டிக்கொண்டு வந்தார். அவருடன் 3 பயர் மேன்கள் பணியில் இருந்தனர். அந்த ரெயில் பாலக்காட்டை தாண்டி, வாளையாறு பகுதியை நெருங்கியபோது அடர்ந்த வனப்பகுதி குறுக்கிட்டது. இதனால் எதிர்பாராத விதமாக வனவிலங்குகள் ஏதேனும் தண்டவாளத்தை தாண்டும் என்பதால், ரெயிலின் வேகத்தை மிதமாக்கினார் ஓட்டுனர் ஜான் வில்சன்.

புலியுடன் போராடினார்

இந்த நிலையில் தண்டவாளத்தையொட்டி உள்ள வனப்பகுதியில் வாட்டசாட்டமாக படுத்திருந்த ஒருபுலி ரெயிலின் சத்தம் கேட்டு கண்விழித்து எழுந்து ரெயில் வரும் தண்டவாளத்தை நோக்கி வந்தது. எதுவும் கிடைக்காத நிலையில் மனிதர்களை வேட்டையாட முடிவு செய்து, அந்த புலி ரெயில் என்ஜின் முகம்பார்த்து காத்திருந்தது. அருகே அந்த ரெயில் என்ஜின் முகம் தென்பட்டது. உஷார் அடைந்த புலி உர்..உர் என்ற தனது உத்வேகத்துடன் ஒரே பாய்ச்சலாக பாய்ந்தது திறந்து கிடந்த என்ஜின் பெட்டிக்குள். இதனை சற்றும் எதிர்பார்க்காத 3 பயர் மேன்களும் அங்கு கொட்டி வைத்திருந்த நிலக்கரி பெட்டிக்குள் போய் படுத்துக்கொண்டனர். ஆனால் நிர்க்கதியாக நின்றிருந்த ஓட்டுனர் ஜான் வில்சனை அந்த புலி கடித்து குதறியது. இருந்தாலும் அந்த புலியுடன் அவர் முடிந்தவரை போராடினார். ஆனால் அந்த வீரப்போரில் புலியின் கையே ஓங்கியது. இதற்கிடையில் அங்கு தக, தகவென எரிந்து கொண்டிருந்த பாய்லரின் தீ சுவாலை புலியை பயமுறுத்தவே, வந்த வேலையை திருப்தியாக செய்யாமல் புலி, வந்த வாசல் வழியாக கீழே குதித்து வனத்துக்குள் ஓடி மறைந்தது. ஆனால் ஆக்ரோ‌ஷமான புலியின் தாக்குதலில் தாக்கு பிடிக்க முடியாமல் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். உடனே ரெயில் நிறுத்தப்பட்டது. உடன் பணிபுரியும் பாய்லர்கள், அவரை மீட்டு போத்தனூரில் உள்ள ரெயில்வே ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்த்தனர். இருந்தபோதும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். இந்த சம்பவம் நடந்த 149 ஆண்டுகள் ஆகிறது. இதனை தொடர்ந்து அவரை போத்தனூர் ரெயில் நிலைய பகுதியிலேயே அடக்கம் செய்தனர்.
கல்லறை

அந்த கல்லறை போத்தனூர் ரெயில்நிலைய பகுதியில் சுண்ணாம்பு பூசிய கற்களால் தற்போதும் பளிச்சிடுகிறது. அதில் உள்ள கல்வெட்டில், அவர் புலி தாக்கி இறந்ததும், தேதியும் ஆங்கில வாக்கியத்தில் எழுத்தப்பட்டுள்ளது. புலியால் இறந்த ஓட்டுனர் மற்றும் குடும்பத்தினர் கல்லறைக்கு அருகே ரெயில்வே அலுவலர் குடியிருப்பில் வசித்துள்ளனர். அவர்கள் வசித்து வந்த வீடு இன்றும் உள்ளது. கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் கல்லறை திருநாள் என்று வரும்போது, அவரது கல்லறைக்கு அவரது வம்சாவளிகள் வந்து, மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி கொளுத்தி வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அந்த கல்லறைப்பக்கம் யாரும் வருவதில்லை. இதனால் அந்த கல்லறை திருநாளன்று அருகில் உள்ளவர்கள்தான் தங்களால் முடிந்த நிலையில், அந்த கல்லறையை சுத்தப்படுத்தி அஞ்சலி செலுத்துகின்றனராம். புலிகள் வாழ்ந்த வாளையாறின் வரலாற்றை கூறும் ஜான் வில்சனின் வீரத்தை பறைசாற்றும் அவரது கல்லறை கண்டு கொள்ளாமல் அவலநிலையாக கிடக்கிறது என்பது உண்மை நிலை.

ஜன்வில்சன் சுறுசுறுப்பான என்ஜின் ஓட்டுனர்

இது குறித்து ஓய்வு பெற்ற ரெயில் என்ஜின் ஓட்டுனர் ஆங்கிலோ இந்தியன் எக்பர்ட் டி.மாண்டே கூறியதாவது:–

அந்த காலத்து நீராவி ரெயில் என்ஜினில் வலது பக்கத்தில் பாய்லர் இருக்கும். என்ஜின் இருக்கும் பகுதியில் கதவுகள் கிடையாது. ஓட்டுனர் உட்கார்ந்து கொண்டே ரெயில் என்ஜினை இயக்க முடியாது. நின்றுகொண்டேதான் இயக்கமுடியும். அங்கு 3 பேர்கள் மட்டுமே நின்று கொள்ள முடியும். ரெயில் என்ஜின் ஓட்டுனருக்கு உதவியாக ஏ கிரேடு, பி கிரேடு என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்ட பயர் மேன்கள் (நிலக்கரி அள்ளி போடுபவர்கள்) இருப்பார்கள். 8 டன் வரை நிலக்கரி எடுத்து செல்லப்பட்டு வந்தது. புலி புகுந்த ரெயில் என்ஜினும் மேற்கண்டவாறு இருந்தது.

பொதுவாக வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த வாளையாறு பகுதியில், ரெயில்கள் வரும்போது மெதுவாக செல்வது வழக்கம். அதுபோன்று அந்த ரெயில் வேகம் குறைந்து வந்தபோது, தண்டவாளத்தின் அருகே நின்றிருந்த ஒரு புலி, என்ஜின் பகுதி கதவு இல்லாமல் இருந்ததால், பாய்ந்து வந்து என்ஜின் ஓட்டுனரை தாக்கியபோது போராடி உள்ளார். இதற்கிடையில் அங்குள்ள பாய்லரில் தீ சுவாலைகள் கிளம்பியதை கண்டு, புலி அங்கிருந்து காட்டுக்குள் பாய்ந்து சென்று விட்டது.

இந்த நிலையில் புலி தாக்கியதால், படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த ஓட்டுனரை, அங்கிருந்த 2 பயர்மேன்கள் மீட்டு, போத்தனூர் ரெயில்வே ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இறந்து போன அவரது குடும்பம் போத்தனூரில் வசித்து வந்தனர். ரெயில்வே குடியிருப்பில் இருந்துள்ளனர். அவரது இறப்புக்கு பிறகு குடும்பத்தினர் தங்களது சொந்த நாட்டுக்கு சென்று விட்டனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அவரது குடும்பத்தை பற்றிய முழுமையான விவரங்கள் இன்னும் தெரியவில்லை. அந்த காலத்தில் ஆங்கிலேய என்ஜின் ஓட்டுனர்கள் அனைவரும் சுறுசுறுப்பு நிறைந்தவர்கள். அந்த வரிசையில் இறந்துபோன ஜான் வில்சனும் இருந்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கல்லறையை நினைவுச்சின்னமாக்க வேண்டும்

இது குறித்து வரலாற்று ஆய்வாளரும், முன்னாள் தபால்துறை அதிகாரியுமான நா.ஹரிகரன் கூறியதாவது:–

அந்த காலகட்டத்தில் வாளையாறு பகுதியில் ரெயிலின் வேகம் மணிக்கு 15 மைல் வேகத்தில் இயக்கப்பட்டது. மின் வசதிகள் இல்லாத அந்த காலகட்டத்தில் வாளையாறு பகுதியில் சிரமத்துடன் ரெயிலை இயக்கி வந்து உள்ளனர். அந்த வழியாக செல்லும் போது, ரெயில்வே பாதை அருகில் ஆங்காங்கே சிறுத்தைப் புலிகளை காண முடிந்ததாக பல ரெயில் என்ஜின் ஓட்டுனர்கள் கூறி உள்ளனர். ஆரம்பத்தில் ஆங்கிலேயர்கள் ரெயில் என்ஜின் ஓட்டுனர் பணியில் இருந்தனர். அதனை தொடர்ந்து ஆங்கிலோ இந்தியர்கள்தான் அப்பணியில் அதிகமாக ஈடுபட்டுள்ளனர். அந்த காலகட்டத்தில் ரெயில்வேயில் முக்கிய இடமாக விளங்கிய போத்தனூரில் ஆங்கிலேயர்கள் அதிகளவில் வசித்து வந்துள்ளனர். அவர்களின் வம்சாவளிகள் இன்னும் போத்தனூர் பகுதியில் உள்ளனர்.

இந்தியாவில் பல வனப்பகுதியில் ரெயில்கள் சென்று வருகின்றன. சில நேரங்களில் வன விலங்குகள் ரெயிலின் மீது மோதி பாதிப்புகள் ஏற்பட்டு இறப்பதும் வாடிக்கையாக இருந்துள்ளது. ஆனால் இந்தியாவில் ரெயில் பயணம் தொடங்கிய 15 ஆண்டுகளில், முதன் முறையாக புலி தாக்குதலில் பலியானவர் ஆங்கிலேய ரெயில் என்ஜின் ஓட்டுனர் ஜான் வில்சன்தான். அந்த காலகட்டத்தில் அவருக்கு போத்தனூரில் கல்வெட்டு வைத்து, அப்போதைய ஆங்கிலேய ரெயில்வே நிர்வாகத்தினர் கல்லறை எழுப்பி உள்ளனர். ஆகவே தமிழகத்தில் பல்வேறு பகுதியில் உள்ள புராதன சின்னங்களை பாதுகாப்பது போல், போத்தனூர் ரெயில்வே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அந்த கல்லறையை ரெயில்வே நிர்வாகம் நினைவு சின்னமாக பராமரித்து பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story