படப்பிடிப்புக்கு சென்று திரும்பிய துணை நடிகை - டிரைவர் பலி


படப்பிடிப்புக்கு சென்று திரும்பிய துணை நடிகை - டிரைவர் பலி
x
தினத்தந்தி 26 May 2017 11:30 PM GMT (Updated: 26 May 2017 6:38 PM GMT)

ஓசூரில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் படப்பிடிப்புக்கு சென்று திரும்பிய துணை நடிகை மற்றும் டிரைவர் பலியானார்கள். மற்றொரு துணை நடிகை படுகாயம் அடைந்தார்.

நின்ற லாரி மீது மோதியதில் கார் நொறுங்கி கிடப்பதை படத்தில் காணலாம். துணை நடிகை அனுஷா சிங் - டிரைவர் ஹரிகிருஷ்ணன்

ஓசூர்,

இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

லாரி மீது கார் மோதல்

கர்நாடக மாநிலம், யஷ்வந்த்பூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணா சிங். இவரது மகள் அனுஷாசிங் (வயது 20). பெங்களூரு அருகே உள்ள கெங்கேரி எம்.ஏ.புரா பகுதியை சேர்ந்தவர் பவானி (20). துணை நடிகைகளான இவர்கள் இருவரும், துபாயில் நடந்த தமிழ் திரைப்பட படப்பிடிப்பில் நடித்து விட்டு, நேற்று முன்தினம் இரவு சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர்.

பின்னர் அங்கிருந்து வாடகை காரில் பெங்களூருவுக்கு புறப்பட்டனர். சென்னை மீனம்பாக்கம் அண்ணா தெருவை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (29) என்பவர் காரை ஓட்டி சென்றார். நேற்று அதிகாலை 5.30 மணியளவில் ஓசூரில், தளி ஜங்ஷன் மேம்பாலத்தில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது மேம்பாலத்தில் இருந்து வேகமாக கீழே இறங்கிய கார், தர்கா தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது.

2 பேர் பலி

இந்த விபத்தை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கார் அருகில் சென்று பார்த்தபோது காரின் முன்பகுதியில் அமர்ந்திருந்த துணை நடிகை அனுஷாசிங் மற்றும் டிரைவர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது.

காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மற்றொரு துணை நடிகை பவானி, படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதையடுத்து உடனடியாக அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் பவானி அனுமதிக்கப்பட்டார்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் சிப்காட் போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். டிரைவர் ஹரிகிருஷ்ணன் அதிவேகமாக காரை ஓட்டி வந்ததுடன், தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story