முகநூலில் பழக்கமானவருக்கு பெற்றோரின் ஆபாச படத்தை சிறுவன் அனுப்பியதால் விபரீதம்


முகநூலில் பழக்கமானவருக்கு  பெற்றோரின் ஆபாச படத்தை சிறுவன் அனுப்பியதால் விபரீதம்
x
தினத்தந்தி 26 May 2017 9:27 PM GMT (Updated: 26 May 2017 9:27 PM GMT)

முகநூலில் பழக்கமானவருக்கு பெற்றோரின் ஆபாச படத்தை சிறுவன் அனுப்பியதால் விபரீதம் எற்பட்டு உள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு நகரில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளான். அவன் பள்ளி ஒன்றில் படித்து வருகிறான். தங்களது மகனுக்கு அந்த தம்பதியினர் விலை உயர்ந்த செல்போனை வாங்கி கொடுத்திருந்தார்கள். மேலும் இணையதள வசதியையும் அதில் ஏற்படுத்தி கொடுத்திருந்தனர். இதுதவிர தங்களது மகனுக்கு அந்த தம்பதியினர் முகநூலில் கணக்கும் (பேஸ்புக் அக்கவுண்ட்) தொடங்கி கொடுத்திருந்தார்கள். இதனால் அந்த சிறுவன் எப்பொழுதும் முகநூலிலேயே மூழ்கி கிடந்தான்.

அப்போது அந்த சிறுவனுக்கு, முகநூலில் தேஜல் படேல் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் முகநூலில் சிறுவனும், தேஜல் படேல் என்பவரும் ஏராளமான தகவல்களை பரிமாறி பழகி வந்தனர். இதற்கிடையே, தேஜல் படேல் தனது முகநூலில் இருந்து சிறுவனின் முகநூலுக்கு ஆபாச படங்களை அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இதனை அந்த சிறுவன் பார்த்துள்ளான். பின்னர் அந்த சிறுவனிடம் தான் அனுப்பியது போல, நீயும் ஏதாவது ஆபாச படங்களை அனுப்ப வேண்டும் என்று தேஜல் படேல் கேட்டுள்ளார்.

ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்

தேஜல் படேலுக்கு ஆபாச படம் அனுப்ப வேண்டும் என்று எண்ணிய அந்த சிறுவனுக்கு விபரீத யோசனை உதித்தது. அதாவது, தனது பெற்றோர் நெருக்கமாக இருப்பதை ரகசியமாக படம் பிடித்து அதனை தேஜல் படேலுக்கு அனுப்ப முடிவு செய்தான். அதன்படி அவனுடைய பெற்றோர் இரவு நேரத்தில் நெருக்கமாக இருப்பதை சிறுவன் ரகசியமாக படம் பிடித்ததாக தெரிகிறது. பின்னர் தனது பெற்றோரின் ஆபாச படத்தை அந்த சிறுவன் தேஜல் படேலின் முகநூலுக்கு அனுப்பி வைத்துள்ளான். மேலும் அந்த ஆபாச படம் தனது பெற்றோருடையது என்பதையும் தேஜல் படேலிடம் சிறுவன் கூறியுள்ளான்.

அதன்பிறகு தேஜல் படேல் முகநூல் மூலமாகவே சிறுவனிடம் நைசாக பேசி அவனுடைய பெற்றோரின் செல்போன் நம்பரை வாங்கியுள்ளார். இந்த நிலையில், சிறுவனின் பெற்றோரை தொடர்பு கொண்ட அவர், உங்களது ஆபாச படம் என்னிடம் உள்ளது, அந்த படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க ரூ.1 கோடி கொடுக்க வேண்டும், இல்லையெனில் அந்த படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டியுள்ளார்.

போலீசில் புகார்

அதே நேரத்தில் அந்த ஆபாச படத்தை உங்களது மகன் தான் முகநூலில் தனக்கு அனுப்பி வைத்ததாக அவர் சிறுவனின் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த தம்பதி, உடனே தங்களது மகன் வைத்திருந்த செல்போனை வாங்கி பார்த்தனர். அப்போது தான், தாங்கள் நெருக்கமாக இருக்கும் ஆபாச படத்தை தேஜல் படேல் என்பவருக்கு சிறுவன் அனுப்பி வைத்தது தெரியவந்தது.

பின்னர் நடந்த சம்பவங்களை கூறி பெங்களூரு சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவு போலீசில் அந்த தம்பதியினர் புகார் கொடுத்தனர். சிறுவனுடன் முகநூலில் பழக்கமான தேஜல் படேல் யார்? என்பது தெரியவில்லை. அவர் போலியான தகவல்களை கொடுத்து முகநூலில் கணக்கு வைத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

13 வயது சிறுவனுக்கு அவனுடைய பெற்றோர் விலை உயர்ந்த செல்போன் வாங்கி கொடுத்ததுடன், முகநூலில் கணக்கு தொடங்கி கொடுத்ததால், தற்போது அவர்கள் விபரீதத்தையும், அவமானத்தையும் சந்திக்க நேரிட்டுள்ளது. இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story