போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனைவி கொலையில் கைதான மகன் பரபரப்பு வாக்குமூலம்


போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனைவி கொலையில் கைதான மகன் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 26 May 2017 9:42 PM GMT (Updated: 26 May 2017 9:42 PM GMT)

பரீட்சை முடிவை கேட்டு சண்டை போட்டதால் தாயை கொலை செய்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மனைவி கொலை வழக்கில் கைதான மகன் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

மும்பை,

மும்பை கார் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஞானேஷ்வர். இவர் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஷீனா போரா கொலை வழக்கை விசாரித்தவர் ஆவார். இவரது மனைவி தீபாலி(வயது42). கடந்த 23-ந்தேதி தீபாலி வீட்டில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது மகன் சித்தார்த்(21) மாயமாகி இருந்தார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இந்தநிலையில் சித்தார்த் நேற்று முன்தினம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கைது செய்யப்பட்டார். பின்னர் மும்பை கொண்டு வரப்பட்ட அவர், நேற்று பாந்திரா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். சித்தார்த்தை வருகிற 2-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

பரீட்சை முடிவால் சண்டை

இந்தநிலையில் தாயை கொலை செய்தது குறித்து சித்தார்த் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- நான் பாந்திராவில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வருகிறேன். நடந்து முடிந்த கல்லூரி செமஸ்டர் தேர்வை நான் எழுதவில்லை. இதுகுறித்து அறியாத எனது தாய் தீபாலி, என்னிடம் தேர்வு முடிவுகளை கேட்டு வந்தார்.

இதனால் எங்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த நான் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்ய முடிவு செய்தேன்.

குத்திக்கொலை

இந்தநிலையில் சம்பவத்தன்று என்னிடம் பரீட்சை முடிவை கேட்டு எனது தாய் தீபாலி சண்டைபோட் டார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த நான் தாய் என்றும் பாராமல் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து எனது தாயின் வயிறு, கழுத்தில் சரமாரியாக குத்தி படுகொலை செய்தேன். பின்னர் ரத்தக்கறை படிந்த ஆடைகளை மாற்றிவிட்டு வீட்டில் இருந்த ரூ.2 லட்சத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டேன். இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story