3 மாநகராட்சி தேர்தல் முடிவு பன்வெலில் பா.ஜனதா அமோக வெற்றி


3 மாநகராட்சி தேர்தல் முடிவு பன்வெலில் பா.ஜனதா அமோக வெற்றி
x
தினத்தந்தி 26 May 2017 9:52 PM GMT (Updated: 26 May 2017 9:52 PM GMT)

மராட்டியத்தில் நடந்து முடிந்த 3 மாநகராட்சி தேர்தலில், பன்வெல் மாநகராட்சியில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது.

மும்பை, 

மராட்டியத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புதிய மாநகராட்சியாக பன்வெல் மாநகராட்சி உதயமானது. 78 வார்டுகளை கொண்ட பன்வெல் மாநகராட்சி தனது முதல் தேர்தலை கடந்த 24-ந் தேதி சந்தித்தது. பன்வெல் மாநகராட்சியுடன் தானே மாவட்டத்தில் உள்ள பிவண்டி-நிஜாம்பூர், நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகாவ் மாநகராட்சிகளுக்கும் தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் 55 சதவீத வாக்குகள் பதிவாகின. 3 மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

பன்வெலில் பா.ஜனதா

பன்வெல் மாநகராட்சியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பா.ஜனதா வேட்பாளர்கள் முன்னிலை பெற்றனர். பல வார்டுகளில் அந்த கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இறுதி நிலவரப்படி 51 இடங்களில் பா.ஜனதா வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

இதன் மூலம் பன்வெல் மாநகராட்சியை பா.ஜனதா தனித்து கைப்பற்றி உள்ளது. பன்வெல் மாநகராட்சியை அதிகாரம் செலுத்த தேர்வு செய்யப்பட்ட முதல் கட்சி என்ற பெருமையும் அந்த கட்சிக்கு கிடைத்து இருக்கிறது.

இதற்கு அடுத்தபடியாக பி.டபிள்யூ.பி.ஐ. கட்சி வேட்பாளர்கள் 23 வார்டுகளில் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

சிவசேனாவுக்கு பூஜ்ஜியம்

பா.ஜனதா தலைமையிலான மாநில கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி பன்வெல் மாநகராட்சி தேர்தலை தனித்து சந்தித்தது. ஆனால் அக்கட்சி வேட்பாளர்கள் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. இது அந்தகட்சிக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் அக்கட்சி தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இதேபோல காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களும் பன்வெல் மாநகராட்சி தேர்தலில் சோபிக்கவில்லை. அந்த கட்சிகள் தலா இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கின்றன.

பன்வெல் மாநகராட்சி தேர்தலில் பெற்ற இந்த அமோக வெற்றியை பா.ஜனதா தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

இன்னிசை வாத்தியங்களை இசைத்தபடி உற்சாகமாக ஆட்டம் போட்டும் மகிழ்ந்தனர்.

பிவண்டியில் காங்கிரஸ்

பிவண்டி-நிஜாம்பூர் மாநகராட்சி தேர்தலில் தற்போது மாநகராட்சியை அதிகாரம் செலுத்தி வரும் காங்கிரஸ் கட்சி மீண்டும் கைப்பற்றி இருக்கிறது. மொத்தம் உள்ள 90 வார்டுகளில் 47 இடங்களை கைப்பற்றி பிவண்டி- நிஜாம்பூர் மாநகராட்சியை மீண்டும் தக்க வைத்து கொண்டது.

இந்த வெற்றியை காங்கிரசார் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இங்கு பா.ஜனதா தோல்வியை தழுவியது. அந்த கட்சிக்கு 19 இடங்கள் மட்டுமே கிடைத்தது.

சிவசேனா வேட்பாளர்கள் 12 வார்டுகளில் வெற்றி பெற்றனர். தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

மாலேகாவில் இழுபறி

பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய, சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாலேகாவ் மாநகராட்சி தேர்தலில் காங்கிரசின் கை ஓங்கி உள்ளது. அந்த மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி இருக்கிறது. மொத்தம் உள்ள 84 வார்டுகளில் அந்த கட்சி வேட்பாளர்கள் 28 இடங்களில் வெற்றி பெற்றனர்.

இந்த மாநகராட்சியில் பா.ஜனதா கட்சி படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. பா.ஜனதா சார்பில் களம் இறக்கப்பட்ட 77 பேரில் 45 பேர் முஸ்லிம் வேட்பாளர்கள். ஆனால் பா.ஜனதா வெறும் 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதே நேரத்தில் சிவசேனா கட்சி 13 இடங்களை கைப்பற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

மாலேகாவ் மாநகராட்சியை தற்போது தங்கள் வசம் வைத்திருக்கும் தேசியவாத காங்கிரஸ், எம்.எம்.ஐ. கட்சிகள் 27 இடங்களில் மட்டுமே வெற்றி வாகை சூடியுள்ளன. இதில், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 20 வார்டுகள் மட்டுமே கிடைத்தன. 37 வார்டுகளில் போட்டியிட்ட எம்.ஐ.எம். கட்சிக்கு 7 வார்டுகள் மட்டுமே கிடைத்து உள்ளது. இதனால் மாலேகாவ் மாநகராட்சியை கைப்பற்றுவதில் இழுபறி ஏற்பட்டு உள்ளது. 

Next Story