சீனாவை திரும்பிப் பார்ப்போம் எல்லை ராணுவ விவகாரம் வேறு.. எல்லைகடந்த வர்த்தகம் வேறு..


சீனாவை திரும்பிப் பார்ப்போம் எல்லை ராணுவ விவகாரம் வேறு.. எல்லைகடந்த வர்த்தகம் வேறு..
x
தினத்தந்தி 28 May 2017 9:55 AM GMT (Updated: 28 May 2017 9:55 AM GMT)

‘சீனப் பொருட்களை தடை செய்ய வேண்டும்’ என்பது நீண்ட கால முழக்கம். அது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை பார்ப்போம்!

‘சீனப் பொருட்களை தடை செய்ய வேண்டும்’ என்பது நீண்ட கால முழக்கம். அது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை பார்ப்போம்!

சின்னஞ்சிறு விளையாட்டுப் பொருட்கள் தொடங்கி, மிகப் பெரிய எலக்ட்ரானிக் பொருட்கள் வரை எல்லாவற்றிலும் சீன ஆதிக்கம் மேலோங்கி நிற்கிறது. அவர்கள் உற்பத்தியின் உச்சாணிக் கொம்பில் நின்று கொண்டிருப்பதுதான் அதற்கு காரணம். உழைப்பிற்கும், வர்த்தகத்திற்கும் முன்னிலை தருபவர்கள் சீனர்கள். அங்கே அரசியலும், தொழில் உலகமும் மோதிக் கொள்வதில்லை. அரசியல் தலையீடு இல்லாமல் அங்கே உழைப்பாளர் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

சாதாரண மக்கள் சீனப் பொருட்களை வாங்கிக் குவித்துக்கொண்டிருக்க, நம் நாட்டின் உயர் வர்க்கத்தினரும், பெரும் நிறுவனங்களும் சீனாவோடு மிகப்பெரிய அளவில் வர்த்தக தொடர்பு வைத்திருக்கின்றன. ரிலையன்ஸின் ‘ஜியோ’ சீனாவிடமிருந்து 4 லட்சத்து 35 ஆயிரம் புதிய 4ஜி சிம்கார்டுகளை இறக்குமதி செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த சிம்கார்டுகள் மற்ற கார்டுகளை விட விலை மலிவானவை. இவைகளை பயன்படுத்தச் சொல்லி நாடெங்கிலும் வெளிப்படையாக விளம்பரங்கள் வந்துகொண்டிருக்கின்றன. உங்கள் கையில் இருக்கும் போனிலும் அந்த சிம் இணைக்கப்பட்டிருக்கலாம்.

அதுமட்டுமல்ல டிராக்டர் உற்பத்தியில் இன்று வானளவு உயர்ந்து நிற்கும் இந்திய நிறுவனங்களில் ஒருசில சீனாவிடம் இருந்துதான் உதிரி பாகங்களைப் பெற்று வருகிறதாம். சீனாவின் தொழில் தயவை நம்பி இங்கு பல நிறுவனங்கள் வளர்ந்துகொண்டிருக்கின்றன.

நிலைமை அப்படி இருக்க, அடித்தட்டு மக்கள் பயன்படுத்தும் விலை மலிவான சீனப் பொருட்களை ஓரம் கட்ட வேண்டும் என்ற குரல் அவ்வப்போது ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஒலிக்கட்டும். அதை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு சில விஷயங்களை கருத்தில்கொள்ளவேண்டும்.

உலகின் மாவீரன் என்று போற்றப்பட்ட நெப்போலியன், சரித்திர காலத்தில் இங்கிலாந்தின் தயாரிப்புகளை புறக்கணிக்கச் சொன்னார். அவரது வீரம், பராக்கிரமம் எல்லாம் உலகறிந்ததுதான். அப்போது அவருடைய செல்வாக்கு உலகெங்கிலும் பரவி இருக்கத்தான் செய்தது. அவர் இங்கிலாந்தை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர்களுடைய செல்வாக்கை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தார். அதனால் அவர்கள் தயாரிக்கும் பொருட்களை வாங்க மறுத்து இங்கிலாந்தை ஓரம் கட்ட நினைத்தார். அப்போது பெரும்பாலான நாடுகள் இங்கிலாந்து தயாரிப்புகளை நம்பி ஏற்றுக் கொண்டன. அவை நெப்போலியனின் மூர்க்கத்தனமான பொருளாதார கொள்கையை ஏற்கவில்லை. அதனால் அவர்கள் நெப்போலியனுக்கு எதிரியாக மாறினார்கள். நெப்போலியன் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணமாக அமைந்துவிட்டது. மக்களின் விருப்பத்திற்கு எதிராக மன்னன் முடிவு எடுத்தாலும் அது பாதிப்புதான்.



இப்போது உலகில் பெரும்பாலான நாடுகள் சீனத்துப் பொருட்களை போட்டிப்போட்டு வாங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தியா மட்டும் பின்வாங்கினால் அது சரியான முடிவாக இருக்குமா என்று யோசிக்க வேண்டும். எல்லை தொடர்பான ராணுவ விவகாரம் வேறு. எல்லை கடந்த வர்த்தக உலகம் வேறு. இருக்கின்ற வளங்களைப் பயன்படுத்துவதும், இல்லாத பொருட்களை இறக்குமதி செய்வதும் உலகின் நியதிதான். இதில் தவறேதும் இல்லை.

நாம் இங்கிருந்து அங்கு ஏற்றுமதி செய்கிறோம். அவர்கள் அங்கிருந்து இங்கு இறக்குமதி செய் கிறார்கள். இரண்டுமே நடந்துகொண்டிருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், நாம் அனுப்பும் மூலப்பொருட்களே பெரும்பாலும் உற்பத்திப் பொருட்களாகி மீண்டும் நம் நாட்டிற்குத் திரும்புகின்றன.

சீனாவோடு ஒப்பிடும்போது நம் நாட்டில் சிறு தொழில்கள் மிகக் குறைவு. கிடைக்கும் மூலப் பொருட்களை வைத்து தேவையான தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் தொழில்வளம் இங்கே குறைவாக உள்ளது.

சீனாவில் மக்கள் தொகை அதிகம். உழைப்பாளி களும் அதிகம். சீனாவில் இல்லத்தரசிகள் என்ற பெயரில் யாரும் வெட்டியாக இருப்பதில்லை. வயது வித்தியாசமில்லாமல் உழைக்கிறார்கள். உழைப்புதான் அவர்களுடைய செல்வம். கிடைக்கும் மனித சக்தியை சீனா முறையாக பயன்படுத்திக் கொள்கிறது. ஏராளமான தயாரிப்புகளை உருவாக்கி, உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கிறது.

சீனாவில் தொழிலதிபராவது எளிது. எந்த தொழிலை ஆரம்பித்தாலும் அரசு அதற்கு முறையான பயிற்சி அளிக்கிறது. எல்லாத் தொழிலும் பெரிய தொழிற்சாலைகளைத் தேடிப் போகாமல் சிறு-குறு தொழில்களாகவே நடைபெறுகிறது. இதனால் தயாரிப்பு செலவு குறைவு.

நம் நாட்டில் தொழில் தொடங்க படாதபாடு பட வேண்டி இருக்கிறது. ஏகப்பட்ட விதிமுறைகள். இவற்றையெல்லாம் கடைப்பிடித்து லைசென்ஸ் பெற அலையாய் அலைந்து திரிய வேண்டும். அலைச்சலும், அதிகாரிகளின் எதிர்பார்ப்பும் தொழிலை ஆரம்பிக்கவே பயமாக இருக்கும். சீனாவில் இப்படியெல்லாம் கெடுபிடிகள் கிடையாது. தொழில் தொடங்குவது எளிமையாக்கப்பட்டதுதான் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். அரசாங்க அலுவலக ‘டென்ஷன்’ எல்லாம் சீனர்களுக்கு கிடையாது.

சீனாவில் ‘இவூ’ என்றொரு நகரம் இருக்கிறது. இதற்கு தொழில் நகரம் என்று பெயர். உலகின் எல்லா பகுதிகளிலிருந்தும் ஏற்றுமதி ஆர்டர்கள் அங்கு பெறப்படுகிறது. எவ்வளவு சிறிய ஆர்டர் என்றாலும், மெகா ஆர்டர் என்றாலும் அங்கே பெற்றுக் கொள்கிறார்கள். எல்லோருடைய தேவைக்கும் அதிக மரியாதை தரப்படுகிறது. ஆர்டர்கள் தொழில் முனைவோருக்கு பிரித்துக் கொடுக்கப்படுகிறது. எந்த தொழில் முனைவோரும் ஆர்டர் தேடி அலைய வேண்டியது இல்லை. எல்லா நேரத்தையும் உழைப்பிற்காக மட்டுமே செலவிடுகிறார்கள்.

மேலும் அந்நாட்டின் வளர்ச்சிக்கு மற்றுமொரு முக்கிய காரணம், கல்வி. 1980-ம் ஆண்டில் 65 சதவீத மக்கள் கல்வியறிவு பெற்றவராக இருந்தார்கள். இந்தியாவில் அப்போது 37 சதவீதம் மட்டுமே இருந்தது. சீனாவில் வேலை செய்யும் பெண்கள் 74 சதவீதம். இந்தியாவில் 34 சதவீதம் மட்டுமே. இங்கு படித்தவர்கள் அனைவரும் வெளிநாட்டில் வேலை தேடி பறந்துவிடுகிறார்கள். சீனாவில் சொந்தமாக தொழில்தொடங்கி முன்னேற்றம் காண்பவர்களே மிகுதி.

சீனாவில் அரசியலும், தொழில் வளர்ச்சியும் எப்போதும் மோதிக் கொள்வதில்லை. அரசியல் விவாதங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் தொழில் வளர்ச்சிக்குத் தான் முதலிடம். தொழிலாளர்களுக்கு எந்த நஷ்டமும் வந்துவிடக்கூடாது என்பதில் தான் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். உண்ணாவிரதம், போராட்டம், யூனியன் கூட்டம், ஊர்வலம், கடையடைப்பு எதுவும் அங்கே எளிதில் நடப்பதில்லை.

சீனா உலகெங்கிலும் தன் வர்த்தகத்தை விரிவுபடுத்தி உறுதியாக கால்பதித்திருக்கிறது. நாம் சீனப் பொருட்களை தடை செய்வதால் சீனா பின்தங்கிவிடப் போவதில்லை. மாறாக உற்பத்தி என்ற மிகப்பெரிய பாரத்தையும் சேர்த்து நாம் சுமக்க வேண்டி இருக்கும்.

பல எலக்ட்ரானிக் சாதனங்கள் சிறியவையி லிருந்து, பெரிய பொருட்கள் வரை சீனத் தயாரிப்புதான். நாம் மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் சீன தயாரிப்புதான். சீனாவில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதை நிறுத்துங்கள், என்று சொன்னால் மின்சார உற்பத்தி முடங்குவதிலிருந்து, பல பெரிய நிறுவனங்களும் வீழ்ந்துவிடும். ஒவ்வொரு துறையிலும் வீழ்ச்சி ஏற்படும். அதை சரிசெய்ய நெடுங்காலம் பிடிக்கும்.

மொத்தத்தில் சீனா உலகின் மிகப்பெரிய வர்த்தக நாடு. ஏராளமான பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. நாம் அந்த அளவிற்கு முன்னேறவே இன்னும் முயற்சிக்கவில்லை. மற்றவர்கள் திறமையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நம் நாட்டு பாதுகாப்பை எல்லையோடு நிறுத்திக் கொள்ளவேண்டியதுதான். தொழில் உலகில் காண்பிக்க வேண்டுமென்றால் அடிப்படை மாற்றம் அவசியம் தேவை. 

Next Story