சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி போலி பணிநியமன ஆணை வழங்கிய பெண் அதிகாரி


சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி போலி பணிநியமன ஆணை வழங்கிய பெண் அதிகாரி
x
தினத்தந்தி 22 Jun 2017 10:30 PM GMT (Updated: 22 Jun 2017 2:47 PM GMT)

சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி 5 பெண்களிடம் ரூ.3½ லட்சம் பெற்றுக்கொண்டு கலெக்டர் பெயரில் போலி பணிநியமன ஆணை கொடுத்ததாக கலெக்டர் அலுவலக பெண் அதிகாரி மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

வேலூர்,

சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா, தங்கைகள் 4 பேர் உள்பட 5 பெண்களிடம் ரூ.3½ லட்சம் பெற்றுக்கொண்டு கலெக்டர் பெயரில் போலி பணிநியமன ஆணை கொடுத்ததாக கலெக்டர் அலுவலக பெண் அதிகாரி மீது புகார் செய்யப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சத்துணவில் வேலை

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த ஒலகாசி கிராமத்தை சேர்ந்தவர் சுகந்தி. இவர் சத்துணவுத்துறையில் அமைப்பாளர் வேலையில் சேருவதற்காக விண்ணப்பம் வாங்க வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அங்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) அலுவலகத்தில் கணக்கு அதிகாரியாக வேலை பார்க்கும் சசிகலா என்பவரை சந்தித்து விண்ணப்பம் கேட்டுள்ளார்.

அவருக்கு விண்ணப்பத்தை கொடுத்த சசிகலா எனக்கு அதிகாரிகளை தெரியும் நான் வேலை வாங்கித் தருகிறேன், தெரிந்தவர்கள் இருந்தால் அழைத்து வா என்று கூறியிருக்கிறார்.

உடனே ஊருக்கு சென்ற சுகந்தி, அய்யப்பன் என்பவருடைய மகள்களிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து அய்யப்பனின் மகள்கள் கலாராணி, கீதா, தீபா, சுமதி மற்றும் இவர்களுடைய உறவினர் மோனலிசா ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். அவர்களும் சத்துணவு அமைப்பாளர் வேலையில் சேர சம்மதம் தெரிவித்துள்ளனர்.

5 பேருக்கு பணிநியமன ஆணை

அதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலக அதிகாரி சசிகலாவை கடந்த ஏப்ரல் மாதம் சந்தித்துள்ளனர். அப்போது சத்துணவு அமைப்பாளர் வேலையில் சேர ஒவ்வொருவரும் தலா ரூ.67 ஆயிரமும், ஆசிரியை வேலைக்கு ரூ.2 லட்சத்து 30 ஆயிரமும் கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்துவிட்டு சென்றனர். பின்னர் கலாராணி, கீதா, சுமதி, மோனலிசா ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து தலா ரூ.67 ஆயிரம் கெடுத்ததாக கூறப்படுகிறது.

தீபாவுக்கு ஆசிரியை வேலை என்பதால் முதல்கட்டமாக ரூ.80 ஆயிரம் கொடுத்துள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்ட சசிகலா முதலில் கலாராணிக்கு கலெக்டர் கையெழுத்திட்ட பணிநியமன ஆணையை கொடுத்துள்ளார். பின்னர் சில நாட்கள் கழித்து மற்றவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியிருக்கிறார்.

அதிகாரியிடம் விசாரணை

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கிராமத்தில் சத்துணவு துறையில் பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பணியில் சேர சென்றபோது அவர்கள் கொண்டு சென்றது போலி பணிநியமன ஆணை என்பது தெரியவந்தது. உடனே அவர்கள் சசிகலாவை சந்தித்து கேட்டபோது பணத்தை திருப்பி தந்து விடுவதாக கூறியிருக்கிறார். ஆனால் சொன்னபடி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.

அதைத்தொடர்ந்து கடந்த 19–ந் தேதி நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் அவர்கள் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவை குடியாத்தம் போலீசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் நேற்று குடியாத்தம் போலீசார், பாதிக்கப்பட்ட பெண்களை அழைத்துக்கொண்டு விசாரணைக்காக கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சத்துணவு பிரிவுக்கு வந்தனர்.

அங்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கோதண்டம் மற்றும் போலீசார், பணம் பெற்றுக்கொண்டு போலி பணிநியமன ஆணை வழங்கியதாக கூறப்படும் சசிகலாவிடம் விசாரணை நடத்தினர். பணம் கொடுத்து ஏமாந்த பெண்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

கலெக்டர் அலுவலக அதிகாரியே பணம் பெற்றுக் கொண்டு கலெக்டர் பெயரில் போலி பணிநியமன ஆணை வழங்கிய இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல் மாத சம்பளம் கொடுத்த அதிகாரி

கலாராணிக்கு பணிநியமன ஆணை கொடுத்ததோடு சில நாட்கள் கழித்து அவருக்கு ஒருமாத சம்பளம் வந்திருப்பதாக கூறி கலெக்டர் அலுவலக அதிகாரி சசிகலா ரூ.6,500 மற்றும் பஸ் செலவு ரூ.2 ஆயிரம் வழங்கியிருக்கிறார். நான் வேலையில் சேரவில்லை எப்படி சம்பளம் வந்தது என்று கேட்டதற்கு பணிநியமன ஆணை வழங்கியதில் இருந்து பணியில் சேர்ந்ததாக கருதி சம்பளம் வழங்குவதாக சசிகலா கூறியிருக்கிறார்.

மேலும் வேலைக்கு பணம் கொடுத்தபோது கலாராணி ரூ.500 அதிகமாக கொடுத்து விட்டதாகவும், கலெக்டர் அலுவலக அதிகாரிகள் அதிகமாக வாங்க மாட்டார்கள் என்று கூறி 500 ரூபாயை சசிகலா திருப்பி கொடுத்ததாகவும் பணம் கொடுத்து ஏமாந்த பெண்கள் தெரிவித்தனர்.


Next Story