குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை: துக்கம் தாங்காமல் கணவரும் ரெயில்முன் பாய்ந்து சாவு


குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை: துக்கம் தாங்காமல் கணவரும் ரெயில்முன் பாய்ந்து சாவு
x
தினத்தந்தி 24 Jun 2017 11:00 PM GMT (Updated: 24 Jun 2017 6:08 PM GMT)

மகன் பிறந்த நாளை கொண்டாடுவதில் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். கணவரும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை.

திருவொற்றியூர், 

திருவொற்றியூர் சரஸ்வதி நகர் மெயின் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல்(வயது 35), ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி நிர்மலா(30). இவர்களுக்கு இளந்திரையன் (5) என்ற மகன் உள்ளான். மகன் பிறந்தநாளை தனது தாய் வீட்டில் கொண்டாட வேண்டும் என நிர்மலா கூறினார். அதற்கு சக்திவேல் மறுத்ததால் கணவன்–மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

பின்னர் சக்திவேல் வெளியே சென்றுவிட்டார். இதில் மனம் உடைந்த நிர்மலா, வீட்டில் டி.வி.யை சத்தமாக வைத்து மகனை பார்க்கச் சொல்லிவிட்டு, அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

கணவர் கதறல்

நிர்மலாவின் உடல், பிரேத பரிசோதனைக்கு பிறகு நேற்று முன்தினம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மனைவியின் உடலைப் பார்த்து சக்திவேல் கதறி அழுதார். பின்னர் இறுதிச்சடங்குகள் நடைபெற்று முடிந்தது.  

மனைவி இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் சக்திவேல் நேற்று முன்தினம் இரவு முழுவதும் அழுதுகொண்டே இருந்தார். தாய் வீட்டில் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று கூறியதற்காக தன்னையும், மகனையும் அனாதையாக்கிவிட்டு சென்றுவிட்டாளே என உறவினர்களிடம் கூறி கதறினார்.

ரெயில் முன் பாய்ந்தார்

இந்த நிலையில் நேற்று காலை திருவொற்றியூர் பூம்புகார் நகர் அருகே சக்திவேல் மின்சார ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதில் அவரது தலை துண்டானது. மனைவி இறந்த துக்கம் தாங்காமல் அவர் இந்த விபரீத முடிவை எடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் சக்திவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

அனாதையான மகன்

மகன் பிறந்தநாளை சந்தோ‌ஷமாக கொண்டாட இருந்த நேரத்தில், இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் கணவனும், மனைவியும் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனால் ஒன்றும் அறியாத அவர்களது 5 வயது மகன் பெற்றோரை இழந்து அனாதையாக நிற்பது வேதனையை ஏற்படுத்தியது.

Next Story