விடை தெரியும் முன்பே, விலகிச் செல்கிறதா? நியூட்ரினோ ஆய்வு திட்டம்


விடை தெரியும் முன்பே, விலகிச் செல்கிறதா? நியூட்ரினோ ஆய்வு திட்டம்
x
தினத்தந்தி 25 Jun 2017 6:14 AM GMT (Updated: 25 Jun 2017 6:13 AM GMT)

நியூட்ரினோ என்பது, சூரியனில் இருந்தும் இந்த பேரண்டத்தின் மற்ற விண்மீன்களில் இருந்தும் வெளிப்படும் நுண்துகள்.

நியூட்ரினோ ஆய்வால் அறிவியல் வளர்ச்சி அடையுமா? ஆபத்து ஏற்படுமா? அணுக்கழிவுகளை கொட்டுவதற்கு திட்டமா? என்ற கேள்விகளுக்கு விடை தெரியும் முன்னே இதற்கான ஆய்வு மையம் அமைக்கும் திட்டம் தமிழகத்தை விட்டு செல்ல தயாராகி வருகிறது. நியூட்ரினோ என்பது, சூரியனில் இருந்தும் இந்த பேரண்டத்தின் மற்ற விண்மீன்களில் இருந்தும் வெளிப்படும் நுண்துகள். இவை எந்த பொருளையும் ஊடுருவிச் செல்லக்கூடியவை. பூமியை குறுக்கும், நெடுக்குமாக ஒவ்வொரு வினாடியும் கோடானுகோடி நியூட்ரினோக்கள் ஊடுருவிச் சென்று கொண்டு இருக்கின்றன.

நியூட்ரினோ ஆய்வில் வெற்றிபெற்றால் பிரபஞ்சம் எப்படி உருவானது? என்பதை கண்டறிய வாய்ப்பு இருப்பதாகவும், எக்ஸ்ரேயை விட ஆயிரம் மடங்கு பயனை பெறமுடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நியூட்ரினோவை ஆய்வு செய்யும் திட்டத்தை பல்வேறு நாடுகள் தொடங்கி உள்ளன. 1986-ம் ஆண்டிலேயே ஜப்பான் இதற்கான ஆய்வை தொடங்கிவிட்டது. கனடா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளும் நியூட்ரினோ ஆய்வில் ஈடுபட்டுள்ளன.

தமிழ்நாட்டில் தேனி மாவட்டம், போடி அருகே பொட்டிப்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலை நியூட்ரினோ ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்டது.

ஒரே கல்லால் ஆன இந்த மலை இத்திட்டத்திற்கு மிகவும் உகந்தது என்று கூறப்பட்டது. இந்த மலையை குடைந்து உள்ளே ஆய்வு மையம் அமைக்க திட்டமிடப்பட்டது.

முதற்கட்டமாக ரூ.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மலையை சுற்றி 4.7 கிலோமீட்டர் சுற்றளவுக்கு வேலி அமைக்கப்பட்டதுடன், 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டியும் கட்டப்பட்டது.

இந்த திட்டத்திற்கு விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மேற்கு தொடர்ச்சி மலையில் இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை வழங்கிய அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதற்கிடையே இந்த ஆய்வு மையம் அமைக்கும் திட்டம் ஆந்திராவுக்கு செல்ல உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

இந்த ஆய்வு திட்டத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான விவேக்தாடர் என்பவர் சமீபத்தில் இந்த திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையில், ‘தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் பணி இன்னும் கைவிடப்படவில்லை. சுற்றுச்சூழல் துறை அனுமதி குறித்து தமிழக அரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம். ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்கள் நியூட்ரினோ திட்டத்தை தங்கள் மாநிலங்களில் செயல்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றன’ என்று கூறினார்.

இந்த திட்டம் ஆந்திராவுக்கு செல்லும் என்ற தகவல் விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்து இருந்த நிலையில், தமிழகத்தில் இந்த திட்டம் கைவிடப்படவில்லை என்ற அறிவிப்பு விவசாயிகள் வயிற்றில் புளியை கரைத்து உள்ளது. இதே நேரத்தில் இந்த திட்டம் ஆந்திராவுக்கு செல்வதற்கே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த வக்கீல் வெற்றிச்செல்வனிடம் கேட்டபோது, பொட்டிப்புரத்தில் இந்த திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு உள்ளதால் மீண்டும் செயல்படுத்த வாய்ப்புகள் குறைவு. இந்த திட்டம் ஆந்திராவுக்கு செல்வது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வரவில்லை’ என்றார்.

ஆந்திராவுக்கு இந்த திட்டம் செல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதால் தமிழகத்தை விட்டு வழியனுப்பி வைக்க எந்த நேரத்திலும் விவசாயிகள் தயாராக உள்ளனர். ஆந்திராவுக்கு செல்லும் இந்த திட்டம் வெற்றிபெற்றால், அந்த வெற்றி தமிழகத்தை விட்டுச் சென்றதாகவும், ஒருவேளை ஆபத்தில் முடிந்தால் விலகிச் சென்று விட்டதாகவும் பிற்காலத்தில் நினைக்கத் தோன்றும்...!

-கதிர்மாயா, தேனி.

Next Story