ஜனாதிபதி தேர்தலில் பலப்பரீட்சை


ஜனாதிபதி தேர்தலில் பலப்பரீட்சை
x
தினத்தந்தி 25 Jun 2017 8:03 AM GMT (Updated: 25 Jun 2017 8:08 AM GMT)

இந்திய ஜனாதிபதி ... 125 கோடி மக்களில் முதல் குடிமகன் என்ற அந்தஸ்து ... உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் உயர்ந்த பதவியை அலங்கரிப்பவர் என்ற பெருமை...

ந்திய ஜனாதிபதி ...

125 கோடி மக்களில் முதல் குடிமகன் என்ற அந்தஸ்து ...

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் உயர்ந்த பதவியை அலங்கரிப்பவர் என்ற பெருமை...

எல்லாவற்றுக்கும் மேலாக நாற்காலி பயம் இல்லாத ஒரே பதவி.

தற்போது ஜனாதிபதியாக இருக்கும் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பதற்காக வருகிற ஜூலை மாதம் 17-ந் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.

உலகின் வல்லரசான அமெரிக்காவில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலுக்கும், நம் நாட்டில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. அமெரிக்காவில் மக்கள் நேரடியாக ஓட்டுப்போட்டு ஜனாதிபதியை தேர்ந்து எடுக்கிறார்கள்.

ஆனால் நம் நாட்டில் ஜனாதிபதி தேர்தலில் மக்களுக்கு எந்த பங்களிப்பும் கிடையாது. பாராளுமன்ற இரு சபைகளின் உறுப்பினர்களும், மாநில சட்டசபைகளின் உறுப்பினர்களும் மற்றும் டெல்லி, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேச சட்டசபைகளின் உறுப்பினர்களும் ஓட்டுப்போட்டு ஜனாதிபதியை தேர்ந்து எடுக்கிறார்கள்.

அலங்கார பதவி என்று கருதப்பட்டாலும், நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்படும் சூழ்நிலையில், ஜனாதிபதியின் முடிவு மிகவும் முக்கியமானதாக இருக்கும். குறிப்பாக பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லாத போது, ‘துருப்புச் சீட்டு’ ஜனாதிபதியின் கையில்தான் இருக்கும். புதிய அரசு அமைக்க யாரை அழைப்பது? என்பதை அவர்தான் தீர்மானிப்பார். மாநில அரசுகள் கலைப்பு விவகாரத்திலும் ஜனாதிபதியின் முடிவு முக்கியத்துவம் பெறும். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றால்தான் அவை சட்டவடிவம் பெறும்.

எனவே ஜனாதிபதி நாற்காலி அலங்கார பதவி என்று கூறப்பட்டாலும், அதிகாரம் மிக்க பதவி என்பதுதான் உண்மை.

இந்த முறை, ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில மாதங் களுக்கு முன்பே, வேட்பாளர் தேர்வுக் கான பூர்வாங்க வேலைகளை எதிர்க்கட்சிகள் தொடங்கி விட்டன. இந்த தேர்தலில் பலத்த போட்டியை ஏற்படுத்தி ஆளும் பாரதீய ஜனதாவுக்கு கடும் நெருக்கடியை கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்த காங்கிரஸ், எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ் உள்ளிட்ட தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

2019-ம் ஆண்டில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக, ஒரு வலுவான மெகா கூட்டணியை அமைக்கும் வாய்ப்பாக இந்த ஜனாதிபதி தேர்தலை காங்கிரஸ் கருதியது.

பாரதீய ஜனதா அரசு பலத்துடன் இருப்பதால் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ அந்த கட்சியை வீழ்த்த முடியாது என்று கருதும் எதிர்க்கட்சி தலைவர்கள் காங்கிரசின் இந்த முயற்சிக்கு பக்கபலமாக இருந்தனர்.

ஜனாதிபதி தேர்தலை சந்திப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் முன்கூட்டியே தயாரான போதிலும், வேட்பாளர் தேர்வில் அவசரம் காட்டவில்லை. பாரதீய ஜனதா யாரை வேட்பாளராக நிறுத்துகிறது என்று பார்த்துவிட்டு, நமது வேட்பாளரை அறிவிக்கலாம் என்று ஒரு குழப்பமான மனநிலையிலேயே இருந்தார்கள்.

எதிர்க்கட்சிகளின் முகாம் இப்படி இருக்க, தங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் வேட்பாளர் தேர்வில் பாரதீய ஜனதா அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை.

மத்தியில் எந்த கட்சி ஆட்சிப்பொறுப்பில் இருந்தாலும் தங்களுக்கு சாதகமான ஒருவர் ஜனாதிபதி இருக்கையில் அமருவதையே அந்த கட்சி விரும்பும். அதே நிலைப்பாட்டில்தான் பாரதீய ஜனதாவும் இருந்தது.

இதனால் ஜாடிக்கு ஏற்ற மூடியாக யார் இருப்பார்? என்று ஜனாதிபதி நாற்காலிக்கு பொருத்தமான வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் பிரதமர் மோடி, அமித்ஷா போன்ற பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் ஈடுபட்டனர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத்தை ஜனாதிபதி ஆக்கவேண்டும் என்று கூட்டணி கட்சியான சிவசேனா தெரிவித்த யோசனையை பாரதீய ஜனதா கண்டுகொள்ளவில்லை. மேலும் மோகன் பகவத்தும் ஜனாதிபதி பதவியின் மீது அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.

மத்திய அரசில் முக்கிய பொறுப்பு எதையும் வகிக்காமல், தாமரை இலை தண்ணீர் போல் பட்டும் படாமலும் இருக்கும் மூத்த தலைவர் அத்வானி, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று முதலில் கூறப்பட்டது. பாரதீய ஜனதாவில் ஓரங்கட்டப்பட்டு இருக்கும் சத்ருகன் சின்கா எம்.பி.யும் அத்வானிக்கு ஆதரவாக கொடி பிடித்தார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு விட்டதால், அத்வானியை பாரதீய ஜனதா முற்றிலுமாக ஒதுக்கிவிட்டது.

பாரதீய ஜனதாவின் வேட்பாளர் தேர்வில் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், முன்னாள் மத்திய மந்திரி முரளி மனோகர் ஜோஷி, ஜார்கண்ட் மாநில கவர்னர் திரவுபதி முர்மு, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்ட சிலரின் பெயர்களும் அடிபட்டன. ஆனால் யாரும் எதிர்பாராத ஒருவர் வேட்பாளர் ஆகிவிட்டார்.

ஒரே நாள் இரவில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து நாட்டு மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்த பிரதமர் மோடி, ஜனாதிபதி வேட்பாளர் தேர்விலும் மற்றவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க தவறவில்லை.

பீகார் மாநில கவர்னரும், தலித் வகுப்பை சேர்ந்தவருமான ராம்நாத் கோவிந்தை அவரும், பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷாவும் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்தனர். இதை பாரதீய ஜனதாவில் உள்ள பல தலைவர்கள் கூட எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்.

ஜார்கண்ட் மாநில கவர்னராக இருக்கும் ஒடிசாவைச் சேர்ந்த திரவுபதி முர்முவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராம்நாத் கோவிந்தை வேட்பாளராக அறிவித்தது எதிர்க்கட்சிகள் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மிகவும் எளிமையானவரான ராம்நாத் கோவிந்த் இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காதவர்.

பாராளுமன்றத்திலும், மாநில சட்டசபைகளிலும் எதிர்க்கட்சிகளை விட தங்களுக்கு அதிக ஆதரவு இருப்பதால் பாரதீய ஜனதா தெம்புடன் இருக்கிறது. ராம்நாத் கோவிந்துக்கு கிட்டத்தட்ட 63 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி மாளிகையை நோக்கிய ராம்நாத் கோவிந்தின் பயணம் எளிதாகிவிட்ட நிலையில், தங்கள் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய கட்டாய நிலை எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டது. கடந்த வியாழக்கிழமை சோனியா காந்தி தலைமையில் கூடி ஆலோசித்த அவர்கள், பாராளுமன்ற முன்னாள் சபாநாயகரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவருமான மீரா குமாரை வேட்பாளராக நிறுத்துவது என்று முடிவு செய்தனர்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 72 வயதான மீரா குமார் முன்னாள் துணை பிரதமர் ஜெகஜீவன்ராமின் மகள் ஆவார். மத்திய மந்திரியாகவும் பணியாற்றி இருக்கிறார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் சசாரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். இவரும் தலித் வகுப்பை சேர்ந்தவர்தான்.

பாரதீய ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் தலித் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் அதே வகுப்பை சேர்ந்த மீரா குமாரை எதிர்க்கட்சிகள் களம் இறக்கி உள்ளன.

ஆக ஜனாதிபதி தேர்தலில் ஒரே வகுப்பை சேர்ந்தவர்கள் மோதுகிறார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் எம்.பி.க்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் அளிக்கும் வாக்குகளின் மொத்த மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 903. இதில் பதிவாகும் வாக்குகளில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மற்றும் கூடுதலாக ஒரு வாக்கு பெறுபவர் வெற்றி பெறுவார்.

பாராளுமன்றத்தில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக எம்.பி.க்கள் இருக்கின்றனர். மேலும் பெரும்பாலான மாநிலங்களில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெறுவதால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே அதிக வாக்குகள் உள்ளன. அந்த கூட்டணிக்கு 5 லட்சத்து 37 ஆயிரத்து 683 ஓட்டுகள் உள்ளன. இன்னும் 11,769 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்தால் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்று விடுவார்.

பாராளுமன்றத்தில் பாரதீய ஜனதா, காங்கிரசை அடுத்து அ.தி.மு.க. தான் மூன்றாவது பெரிய கட்சியாக விளங்குகிறது. அ.தி.மு.க.வின் இரு அணிகளும் பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து உள்ளன.

சசிகலா தலைமையிலான அ.தி.மு.க. (அம்மா) அணியில் 37 எம்.பி.க்களும், 123 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இவர்களுடைய மொத்த ஓட்டுகள் 47,844.

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணியில் 12 எம்.பி.க்களும், 12 எம்.எல்.ஏ.க்களும் இருக்கிறார்கள். இவர் களுடைய மொத்த ஓட்டுகள் 10,608.

அந்த வகையில், அ.தி.மு.க.வின் இரு அணிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுகளை சேர்த்தால் மொத்தம் 58 ஆயிரத்து 984 வாக்குகள் உள்ளன.

தற்போது ராம்நாத் கோவிந்துக்கு அ.தி.மு.க.வின் இரு அணிகள், சரத்யாதவின் ஐக்கிய ஜனதாதளம், பிஜூ ஜனதாதளம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளிப்பதால் அவரது வெற்றி கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது.

இந்த சூழ்நிலையை வைத்துப் பார்க்கும் போது, எதிர்க்கட்சிகள் என்னதான் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் பாரதீய ஜனதாவுக்கு கொஞ்சம் நெருக்கடியை கொடுக்க முடியுமே தவிர, அக்கட்சி வேட்பாளரின் வெற்றியை தடுத்து நிறுத்த முடியாது என்றே தோன்றுகிறது.

ஓட்டு மதிப்பு எவ்வளவு?

மக்களவையில் 543 பேர், மேல்-சபையில் 233 பேர் என பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் ஓட்டுப்போட தகுதி பெற்ற மொத்தம் 776 எம்.பி.க்கள் உள்ளனர். (டெல்லி மேல்-சபையில் உள்ள நியமன உறுப்பினர்களுக்கு ஓட்டுப்போடும் உரிமை கிடையாது)

மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டசபைகளில் மொத்தம் 4,120 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதாவது மொத்தம் 4,896 பேர் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப்போடுவார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் ஒரு எம்.பி. போடும் ஒட்டின் மதிப்பு 708. இது மாநிலத்துக்கு மாநிலம் மாறாது. எந்த மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.யானாலும் அவருடைய ஓட்டின் மதிப்பு 708 தான்.(ஒட்டுமொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையான 5 லட்சத்து 49 ஆயிரத்து 495-ஐ, மொத்த எம்.பிக்களின் எண்ணிக்கையான 776 என்ற எண்ணால் வகுத்தால் வரும் எண் 708),

ஆனால் எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். உதாரணமாக இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேசத்தில் ஒரு எம்.எல்.ஏ.யின் ஓட்டு மதிப்பு 208. தமிழ்நாட்டில் ஒரு எம்.எல்.ஏ.யின் ஓட்டு மதிப்பு 176. சிக்கிம் மாநில எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்புதான் மிகவும் குறைவானது. அங்கு ஒரு எம்.எல்.ஏ. போடும் ஓட்டின் மதிப்பு வெறும் 7 தான்.

ஒரு மாநிலத்தின் மக்கள் தொகை மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்த மாநில எம்.எல்.ஏ.யின் ஓட்டு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஒட்டுமொத்த எம்.பிக்களின் ஓட்டு மதிப்பு 5 லட்சத்து 49 ஆயிரத்து 408. ஒட்டுமொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் ஓட்டு மதிப்பு 5 லட்சத்து 49 ஆயிரத்து 495.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர் இந்திய குடிமகனாகவும், 35 வயது பூர்த்தியானவராகவும் இருக்க வேண்டும்.

ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரின் பெயரை 50 எம்.பி.க்கள் முன்மொழிய வேண்டும். 50 எம்.பி.க்கள் வழிமொழிய வேண்டும். வேட்பாளர் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகை ரூ.15,000.

ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுச்சீட்டு முறையே பயன்படுத்தப்படும். எம்.பி.க்களுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் வாக்குச் சீட்டுடன் பிரத்யேக பேனா வழங்கப்படும். ஓட்டுப்போடுவதற்கு அவர்கள் அந்த பேனாவைத்தான் பயன்படுத்த வேண்டும். வேறு பேனாவை பயன்படுத்தி வாக்கு அளித்தால், அந்த ஓட்டு செல்லாதது ஆகிவிடும்.

யார் இந்த ராம்நாத் கோவிந்த்?

ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் 71 வயதான ராம்நாத் கோவிந்த் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். தலித் வகுப்பைச் சேர்ந்த இவர் டெல்லி ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் வக்கீலாக பணியாற்றி இருக்கிறார். டெல்லி மேல்-சபையில் பாரதீய ஜனதா எம்.பி.யாக 12 ஆண்டுகள் பதவி வகித்து உள்ளார். பாரதீய ஜனதாவின் கொள்கை முடிவுகளில் முக்கிய பங்கு வகிக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்பதோடு, அக்கட்சியின் தலைவர் அமித்ஷாவுக்கும் நெருக்கமானவர்.

தனது மாணவ பருவத்தில் பிற்படுத்தப்பட்டோர், தலித், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மை மக்களின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளார்.

ராம்நாத் கோவிந்த் பாரதீய ஜனதாவிலும் பல்வேறு அமைப்புகளிலும் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ள போதிலும் அதிரடி அரசியலில் நாட்டம் இல்லாதவர் என்பதால், செய்திகளில் அவரது பெயர் பரபரப்பாக அடிபட்டது இல்லை. ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலம் ஆகிவிட்டார்.



ஜனாதிபதி தேர்தல் துளிகள்

* 1952-ல் முதல் ஜனாதிபதி தேர்தல் நடந்த ஆண்டிலேயே பாராளுமன்றத்துக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.

* நாட்டின் முதல் ஜனாதிபதியான டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1957-ல் நடந்த தேர்தலில் 2-வது முறையாக ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்டார். இருமுறை ஜனாதிபதியான பெருமை பெற்றவர் இவர் ஒருவரே.

* 1962-ல் தென் இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் முதன் முதலாக ஜனாதிபதி ஆனார்.

* 1967-ல் ஜனாதிபதியான ஜாகீர் உசேன் தனது பதவி காலத்திலேயே மரணம் அடைந்தார். இவர்தான் குறைந்த காலம் ஜனாதிபதி பதவி வகித்தவர்.

* 1969-ல் நடந்த ஜனாதிபதி தேர்தல் காங்கிரசில் இந்திராகாந்திக்கும் அவரது எதிர்ப்பாளர்களுக்கும் இடையேயான தேர்தலாக அமைந்தது. இந்த தேர்தலில் வி.வி.கிரி வெற்றி பெற்றார். ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் குறைந்த வாக்குகள் (87,967) வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் இவர்தான்.

* 1974-ல் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட பக்ருதீன் அலி அகமது பதவியில் இருந்தபோதுதான் நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

* 1977-ல் நடந்த ஜனாதிபதி தேர்தல் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் எழுச்சியை காட்டுவதாக அமைந்தது.

* சங்கர்தயாள் சர்மா ஜனாதிபதியாக இருந்த போது ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக 3 பிரதமர்கள் பதவி ஏற்றார்கள்.

* 1997-ல் ஜனாதிபதியான கே.ஆர்.நாராயணன் முதல் தலித் ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றார். இவரது பதவி காலத்தில்தான் பாரதீய ஜனதா முதன் முதலாக மத்தியில் ஆட்சி அமைத்தது. ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் இவர்தான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் (9 லட்சத்து 5 ஆயிரத்து 659) வெற்றி பெற்றார்.

* 2002-ல் நடந்த தேர்தலில் ஏவுகணை விஞ்ஞானியான அப்துல் காலம் ஜனாதிபதி ஆனார். இவர் மக்களின் ஜனாதிபதி என்ற புகழை பெற்றார்.

* 2007-ல் ஜனாதிபதியான பிரதீபா பட்டீல் இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி ஆவார்.



Next Story