சபாஷ் ஒரு சல்யூட்


சபாஷ் ஒரு சல்யூட்
x
தினத்தந்தி 25 Jun 2017 8:36 AM GMT (Updated: 25 Jun 2017 8:36 AM GMT)

இரண்டு போலீஸ் உயர் அதிகாரிகள் கைகுலுக்குவதும்– ஒருவரிடமிருந்து இன்னொருவர் பொறுப்பை ஏற்றுக்கொள்வதும்– இருவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதும், புது வி‌ஷயம் இல்லை.

ரண்டு போலீஸ் உயர் அதிகாரிகள் கைகுலுக்குவதும்– ஒருவரிடமிருந்து இன்னொருவர் பொறுப்பை ஏற்றுக் கொள்வதும்– இருவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதும், புது வி‌ஷயம் இல்லை. ஆனால் இப்படி கைகுலுக்கியதும், ஒருவரிடமிருந்து இன்னொருவர் பொறுப்புகளை ஏற்று வாழ்த்தியதும் கணவர்– மனைவியாக இருந்தால் புதுமைதானே! அப்படிப்பட்ட புதுமையான காட்சி அரங்கேறியது, கேரள மாநிலம் கொல்லம் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில்!

அந்த வித்தியாசமான போட்டோ இந்தியா முழுக்க ‘பிளாஷ்’ ஆக, அந்த தம்பதிக்கு சபாஷ் சொல்லி, பலரும் சல்யூட் அடிக்க நாம், அந்த புகழ் பெற்ற காவல் துறை ஜோடியின் பூர்வீகத்தை தேடினோம். தமிழ்நாடுதான். கணவர் சதீஷ் பினோ ஐ.பி.எஸ். கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிகோடு பகுதியை சேர்ந்தவர். மனைவி அஜிதா பேகம் ஐ.பி.எஸ். கோவையை சேர்ந்தவர். காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். மகப்பேறு கால விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிய மனைவியிடம், கணவர் பொறுப்புகளை ஒப்படைத்த காட்சிதான், இந்தியா முழுக்க பலரையும் கவர்ந்த அந்த அபூர்வ படம்.
                   
“சமீபத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கான பணி இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில் நாங்கள் இருவரும் இடம் பெற்றோம். கொல்லம் புறநகர் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த நான், என் கணவர் பொறுப்பு வகித்த கொல்லம் நகர போலீஸ் கமி‌ஷனராக மாற்றப்பட்டேன். அவரோ பத்தனம்திட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். பிரசவ விடுமுறை முடிந்து கொல்லம் நகர போலீஸ் கமி‌ஷனராக நான் பொறுப்பேற்ற போது, என் கணவரே என்னிடம் பொறுப்புகளை ஒப்படைத்தது புதுமையான அனுபவமாகவும், மறக்க முடியாத ஒன்றாகவும் அமைந்துவிட்டது’’ என புன்னகை ததும்ப பதில் அளித்தார், அஜிதாபேகம்.

சதீஷ் பினோவின் தந்தை பெயர் சத்தியதாஸ். அவர் கொச்சியில் மீன்வளத்துறை விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அஜிதா பேகத்தின் தந்தை சுல்தான், கோவையில் அரிசி வியாபாரிகள் சங்கத் தலைவராக இருக்கிறார். சதீஷ் பினோவும், அஜிதா பேகமும் 2008–ம் ஆண்டு ஐ.பி.எஸ். ‘பேட்ச்` அதிகாரிகள்.

கொல்லம் போலீஸ் கமி‌ஷனர் அஜிதா பேகத்துடன் நமது உரையாடல்!

சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதும் ஆர்வம் எப்படி வந்தது?


‘‘நான் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கல்லூரியில் பி.காம். பிசினஸ் மேனேஜ்மெண்ட் படித்தேன். பின்பு எனக்கு திருமணம் செய்யலாம் என்ற பேச்சு குடும்பத்தில் எழுந்தது. ஆனால் நான் எம்.பி.ஏ. படிக்க விரும்பினேன். அதை என் தந்தையிடம் சொன்னேன். அவர், என்னை அடுத்து என்ன படிக்க வைக்கலாம் என்பது பற்றி அவரது நண்பரிடம் ஆலோசித்திருக்கிறார். அவர் ‘எம்.பி.ஏ. படிக்க வைப்பதைக் காட்டிலும், தனக்குதெரிந்த பேராசிரியர் கனகராஜ் என்பவர் மூலம் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி பெறச் செய்து, அந்த தேர்வை எழுதச் சொல்லுங்கள்’ என்று கூறியுள்ளார்.

அதைக்கேட்டு வந்த என் தந்தை, சிவில் சர்வீசஸ் பணிக்கு என்னை படிக்கும்படி கூறினார். ஆனால் எனக்கு அப்போது அந்த தேர்வு பற்றி எதுவும் தெரியாது. அந்த பணியின் சிறப்புகளையும் நான் உணர்ந்திருக்கவில்லை. அந்த நேரத்தில், நான் படித்த கல்லூரி விழாவுக்கு நீலகிரி மாவட்ட கலெக்டராக பணியாற்றிய சுப்ரியா சாகு வந்திருந்தார். அவருடைய கம்பீரம், கனிவு, செயல்பாடு போன்றவைகளை பார்த்ததும் ‘நாமும் அவரை போன்று கலெக்டராக வேண்டும்’ என்ற ஆர்வம் உருவானது. உடனே சிவில் சர்வீசஸ் பயிற்சிக்கு தந்தையிடம் சம்மதம் தெரிவித்தேன். பேராசிரியர் கனகராஜிடம் அழைத்துச் சென்றார். அவர் என்னிடம் 3 மணி நேரம் பேசினார். பல்வேறு உதாரணங்கள் மூலமும், ஆளுமைகள் மூலமும் எனக்கு அந்த படிப்பின் சிறப்புகளை சொன்னார். அவரது பேச்சுதான் என் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது. அவர் இலவசமாக அளித்து வந்த சிவில் சர்வீசஸ் பயிற்சி மையத்தில் நான் 2–வது ‘பேட்ச்’சில் சேர்ந்து நம்பிக்கையோடு படித்தேன். முதல் முயற்சியிலே வெற்றி பெற்றேன்..’’

அது எப்படி சாத்தியமானது?

‘‘நான் நம்பிக்கையோடு படித்தேன். தேர்வை கண்டு பயம் கொள்ளவில்லை. அதனால் சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே எனக்கு வெற்றி கிடைத்தது. நான் எதிர்பார்த்தது ஐ.ஏ.எஸ். ஆனால் 169–வது இடம் என்பதால் ஐ.பி.எஸ். ஆனேன். எனக்கு எப்போதுமே போலீஸ் அதிகாரிகள் மீது மரியாதை உண்டு. சீருடைப்பணி எனக்குப் பிடித்தமானதும்கூட. இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பெடி, சந்தனமரம் கடத்தல் வீரப்பனை பிடித்த ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமார் ஆகியோரின் செயல்பாடுகள், பேட்டிகள் எனக்கு ஐ.பி.எஸ். பணியை ஆர்வமாக மேற்கொள்ள உத்வேகம் தந்தன.

ஐதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் பயிற்சி கல்லூரியில் பயிற்சியை முடித்தேன். பயிற்சி போலீஸ் சூப்பிரண்டாக ஜம்மு காஷ்மீரில் பணியாற்றினேன். அந்த அனுபவம் மறக்க முடியாதது. அப்போது எனது பெற்றோர் மீண்டும் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ். ஆகும்படி கூறினார்கள். நானும் எழுதினேன். அதிலும் எனக்கு ஐ.பி.எஸ்.தான் கிடைத்தது. இறைவன் நமக்கு கொடுத்தது இதுதான் என்று மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டேன். என் பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கிறேன்’’

உங்கள் காதல்  திருமணத்தை பற்றி...?

‘‘நானும், அவரும் ஐதராபாத்தில் பயிற்சி பெற்றபோது ஒருவரையொருவர் விரும்பினோம். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தபோது இருவீட்டிலும் சம்மதம் கிடைக்கவில்லை. பின்னர் நாங்கள் இருவரும் அவரவர் குடும்பத்தினரிடம் தொடர்ந்து பேசி திருமணத்துக்கு சம்மதம் பெற்றோம். பின்பு அனைவரின் ஒப்புதலோடும், ஆசீர்வாதத்தோடும் எங்கள் காதல் கலப்பு திருமணம் நடந்தது.

திருமணமான பிறகு 2012–ல் எனக்கும், என் கணவருக்கும் கேரள மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகளாக பணியாற்றும் வாய்ப்பு வந்தது. அதன்பிறகு கடந்த 5 ஆண்டுகளாக கேரளாவில் பணியாற்றி வருகிறோம். கேரளாவில் பெண்கள் எண்ணிக்கை அதிகம். அப்படிப்பட்ட மாநிலத்தில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியாக நான் பணியாற்றுவது எனக்கு பெருமையாக இருக்கிறது. எங்களுக்கு அர்ஹாண்ட் லயன் பினோ (வயது 5) என்ற மகனும், அர்ஷிதா அஜிதா பினோ என்ற 7 மாத மகளும் உள்ளனர்.

எனது தந்தை சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதச்சொல்லி, ஊக்கம் தராமல் இருந்திருந்தால் நான் சாதாரண குடும்ப பெண்ணாகத்தான் இருந்திருப்பேன். இங்கே என்னை சந்திக்க ஒவ்வொரு நாளும் பல்வேறு பிரச்சினைகளோடு மக்கள் வருகிறார்கள். என்னால் முடிந்த அளவுக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்கிறேன். எனக்கு இந்த பணி சந்தோ‌ஷத்தையும், மனநிறைவையும் தருகிறது. கேரள மக்களும் நான் பணியாற்றிய இடங்களில் எல்லாம் ஒத்துழைப்பு தந்து வருகிறார்கள்’’

உங்கள் பணிகளில் குறிப்பிடத்தக்கது?

‘‘நான் எந்த மாவட்டத்தில் பணியாற்றினாலும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பேன். திருவனந்தபுரம் மாநகர போலீஸ் துணை கமி‌ஷனராக பணியாற்றியபோது பள்ளி– கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுயபாதுகாப்புத் திட்டம் ஒன்றை 2014–ம் ஆண்டு செயல்படுத்தினேன். அந்த திட்டம் சிறந்த திட்டமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, மாநிலம் முழுவதும் காவல்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டத்தை கேரள  கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சந்தியா செயல்படுத்தி வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக இந்த திட்டத்துக்கு கேரள அரசு நிதி ஒதுக்கீடும் செய்து வருகிறது. இது
மக்களுக்கு பயன்மிக்க திட்டம். எனக்கும் மனநிறைவைத்தரும் திட்டம்’’  என்று கூறும் அஜிதாபேகம், கொல்லம் நகரத்தில் போக்குவரத்து நெருக்கடிகளை குறைப்பதற்கும், குற்றத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் அதிக முக்கியத்துவம் தருகிறார்.

சேவையில் அதிக ஆர்வம்காட்டும் இவர், பிரசவத்திற்கு முந்தைய நாள் வரை தனது துறை சார்ந்த பணிகளை கவனித்து வந்திருக்கிறார். பிரசவத்திற்கு பிறகு குழந்தையுடன் செலவிட தேவையான அளவு விடுமுறை எடுத்துள்ளார். பள்ளிப்பருவத்திலே தடகள வீராங்கனையாக ஜொலித்த அஜிதாபேகம் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும் உடலை கட்டுக்கோப்பாக பராமரிக்கிறார். அதற்காக தினசரி உடற்பயிற்சியை தனது வாழ்க்கைமுறையாக்கியிருக்கிறார். கணவர், மனைவி   இருவருமே போலீஸ் துறையில் இருப்பது ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படவும், பணியை சிறப்பாக செய்யவும் வாய்ப்பாக இருப்பதாகவும் சொல்கிறார்.

சதீஷ் பினோ சொல்கிறார்:

‘‘எனது தந்தை சத்தியதாஸ், எனது சிறுவயதில் இருந்தே நான் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி பெரிய அதிகாரியாக வரவேண்டும் என்று ஊக்கம் அளித்துவந்தார். நான் ஐ.பி.எஸ். அதிகாரியாக ஆவதற்கு முன் பல வேலைகள் கிடைத்தன. எனது தந்தை அந்த வேலைகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று கூறிவிட்டார். எனது தந்தையின் ஒரே விருப்பம் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி அதிகாரியாக வர வேண்டும் என்பதுதான். எனது பெரியம்மா மகன் அமல்ராஜ் ஐ.பி.எஸ். தற்போது கோவை மாநகர கமி‌ஷனராக பணியாற்றி வருகிறார். நான் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத அவரும் ஒரு காரணம்.

நான் பயிற்சிக்கு பிறகு மத்தியபிரதேச மாநிலம் போபால் மற்றும் உஜ்ஜைனி ஆகிய பகுதிகளில் உதவி சூப்பிரண்டாக பணியாற்றினேன். திருமணத்துக்குப்பிறகு கேரள மாநிலத்தில் நானும், என் மனைவியும் பணியாற்றி வருகிறோம். நான் மாணவப் பருவத்தில் இருந்தே கேரள மக்களுடன் தொடர்பில் இருக்கிறேன். அவர்களைப்பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். தங்களது உரிமை உள்ளிட்ட அனைத்து வி‌ஷயத்திலும் அதிக விழிப்புணர்வு கொண்டவர்கள். நன்றாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு உரிய மரியாதை கொடுப்பவர்கள்.

கொல்லம் நகர கமி‌ஷனராக நானும், புறநகர போலீஸ் சூப்பிரண்டாக அஜிதாபேகமும் ஒரே மாவட்டத்தில் இணைந்து பணியாற்றியபோது சட்டம்– ஒழுங்கை காப்பதிலும், குற்ற நடவடிக்கைகளை தடுப்பதிலும் தீவிரமாக செயல்பட்டோம். நான் பணி மாறுதலாகி என் மனைவியிடம் பொறுப்புகளை ஒப்படைத்தபோது அவரும் சக அதிகாரி என்ற எண்ணம்தான் எனக்கு ஏற்பட்டிருந்தது. நாங்கள் எங்கள் கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்’’ என்கிறார்.

இந்த அபூர்வ ஐ.பி.எஸ். தம்பதிகளுக்கு ஒரு சல்யூட்! 

Next Story