இமயத்தில் இணைந்த காதல் ஜோடி


இமயத்தில் இணைந்த காதல் ஜோடி
x
தினத்தந்தி 25 Jun 2017 10:01 AM GMT (Updated: 25 Jun 2017 10:01 AM GMT)

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரிந் திருப்பதோடு அங்கு தங்கள் இல்லற வாழ்க்கையையும் தொடங்கி ஆனந்தம் அடைந் திருக்கிறது ஒரு காதல் ஜோடி.

வரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரிந் திருப்பதோடு அங்கு தங்கள் இல்லற வாழ்க்கையையும் தொடங்கி ஆனந்தம் அடைந் திருக்கிறது ஒரு காதல் ஜோடி. அவர்கள் பெயர் அஸ்வதி ரவீந்திரன்-ரதீஷ் நாயர். இருவரும் மலையேற்றம் செய்வதில் ஆர்வம் மிகுந்தவர்கள். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக நண்பர்களுடன் சேர்ந்து மலையேற்ற பயிற்சி மேற்கொண்டபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று மலையேற்றம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்கள்.

அது இருவருக்கும் இடையே நெருக்கத்தை அதிகப்படுத்தி, காதல் பயணத்திற்கு வழித்தடம் அமைத்து கொடுத்திருக்கிறது. இருவரும் இல்லற வாழ்க்கையில் இணைய முடிவெடுத்தபோது, தங்கள் திருமணம் மலையேற்ற பந்தத்துடன் இணைந்ததாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார்கள். அப்போதுதான், இமயமலையில் அமைந்துள்ள உயரமான எவரெஸ்ட் சிகரத்திற்கு மலையேற்றம் சென்று அங்கு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் உதித்திருக்கிறது.

இருவரும் பெற்றோரிடம் தங்கள் காதலுக்கு சம்மதம் வாங்குவதை விட, எவரெஸ்ட் சிகரத்தில் திருமணம் செய்து கொள்வதற்கான சம்மதத்தை பெற கடுமையாக போராடி இருக்கிறார்கள். முதலில் கடும் எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறார்கள். எனினும் இருவரும் மலையேற்ற சாகச விரும்பிகளாக இருப்பதால் இருவீட்டாரும் அரை மனதுடன் சம்மதித்திருக்கிறார்கள்.

இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.அஸ்வதி எர்ணாகுளத்தில் உள்ள கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிகிறார். ரதீஷ் துபாயில் வேலை பார்த்து வருகிறார். பெற்றோரின் சம்மதத்தை பெற்றதும் தங்களுடைய நெருங்கிய நண்பர்கள் மூன்று பேருடன் நேபாளத்திற்கு புறப்பட்டு சென்றிருக்கிறார்கள். அங்கிருந்து எவரெஸ்ட் உச்சியை அடைவதற்கு மலையேற்ற பயணத்தை தொடங்கியிருக்கிறார்கள். 10 நாள் பயணத்திற்கு பிறகு எவரெஸ்டை அடைந்தவர்கள் அங்கு கேரள கலாசாரத்தை பிரதிபலிக்கும் திருமண உடை அணிந்து திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறார்கள். அது பற்றி அஸ்வதி சொல்கிறார்:

“எவரெஸ்ட் சிகரத்தை அடைவது சிரமமான மலையேற்ற பயணம். பெற்றோரிடம் சம்மதம் வாங்குவது அதைவிட கடினமான விஷயமாக இருந்தது. அவர்களிடம் போராடி சம்மதம் பெற்றபிறகு எவரெஸ்ட் பயணத்திற்கு என்னை தயார்படுத்தவும் சிரமப்பட வேண்டியிருந்தது. அங்கு சிரமமின்றி சுவாசிப்பது கடினமான விஷயம் என்பதால் மூச்சுப்பயிற்சி எடுத்தேன். ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்தும் உடலை தயார்படுத்திக்கொண்டேன். அவை எவரெஸ்ட் சிகர பயணத்தை எளிமைப்படுத்தியது.

சிகரத்தை அடைந்ததும் கேரள கலாசார உடை அணிந்து இல்லற வாழ்க்கையில் கரம் கோர்த்தோம். எங்களுடன் வந்தவர்கள் தேசிய கொடியை உயர்த்தி பிடித்து உற்சாகப்படுத்தினார்கள். எங்களுடைய திருமணம் பனிகள் படர்ந்த மலைகளுக்கு மத்தியில் நடந்திருப்பது மறக்க முடியாத அனுபவம். அதனை விவரிக்க வார்த்தைகளே இல்லை. அந்த சமயத்தில் அங்கு கடும் உறைபனி நிலவியது. ஆனால் உணர்ச்சிபூர்வமான அந்த தருணத்தில் பனிப்பொழிவு பற்றிய எண்ணமே எழவில்லை” என்கிறார். 

Next Story