மனதுக்குள் ஒத்திகை வேண்டாம்


மனதுக்குள் ஒத்திகை வேண்டாம்
x
தினத்தந்தி 25 Jun 2017 10:13 AM GMT (Updated: 25 Jun 2017 10:13 AM GMT)

வீட்டில் குப்பைகள் சேரவிடாமல் அப்புறப்படுத்திக்கொண்டே இருப்பதுபோல் மனதிலும் தேவையற்ற எதிர்மறை எண்ணங்கள் குவிந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வீட்டில் குப்பைகள் சேரவிடாமல் அப்புறப்படுத்திக்கொண்டே இருப்பதுபோல் மனதிலும் தேவையற்ற எதிர்மறை எண்ணங்கள் குவிந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அத்தகைய பலகீனமான எண்ணங்கள் மன அமைதியை குலைத்து விடும். எந்தவொரு செயலையும் தெளிவான மனநிலையுடன் தொடங்குவதற்கு இடையூறாக அமையும். அந்த செயலில் ஆழ்ந்த கவனத்தை செலுத்த முடியாமல் தடுமாற்றமடைய செய்துவிடும். இரவில் நிம்மதியான தூக்கமின்மைக்கும் வழி வகுத்துவிடும்.

எதிர்மறையான எண்ண ஓட்டத்துடனே செயல்படுபவர்கள் நள்ளிரவில் திடீரென்று விழித்துக் கொண்டு அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று சிந்திக்க தொடங்கி விடுவார்கள். எடுத்த காரியத்தை சிக்கலின்றி சுமுகமாக செய்து முடிக்க என்னென்ன செய்யலாம் என்று மனதுக்குள்ளேயே ஒத்திகை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். நன்றாக தூங்கி ஓய்வு எடுக்க வேண்டிய நேரத்தில் அப்படி ஒத்திகை பார்ப்பது தேவையற்ற மன குழப்பத்தையே தோற்றுவிக்கும். காலையில் எழுந்திருக்கும்போது உடலும், மனமும் சோர்ந்து போயிருக்கும். அன்றைய பொழுது புத்துணர்ச்சியின்றி தொடங்கும். எடுத்த காரியத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதிலும் தொய்வை ஏற்படுத்தி விடும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, புதிய பிரச்சினைகளை உருவாக்கி மன பாரத்தை அதிகப்படுத்திவிடும். ஆதலால் எதிர்மறை எண்ணங்கள் மனதில் குடிகொள்வதற்கு அனுமதிக்காதீர்கள்.

தொடர்ச்சியாக வேலைகளில் கவனம் செலுத்துபவர்கள் அதை பற்றியே நினைத்து மனதை வருத்திக்கொள்ள வேண்டியதில்லை. அது மன இறுக்கத்தை அதிகமாக்கி வேலைத்திறனை குறைத்து விடும். உங்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கு தடையாகவும் அமைந்து விடும். ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளை ஒரே காலகட்டத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்துடன் செயல்படுபவர்கள் கால அட்டணை தயாரித்து தனித்தனியே நேர மேலாண்மையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். மறுநாள் என்னென்ன வேலைகளை எல்லாம் முடிக்க வேண்டும் என்பது பற்றிய சிந்தனையை படுக்கை அறைக்குள் அனுமதிக்காதீர்கள். தூங்க செல்வதற்கு முன்பு அத்தகைய சிந்தனைகள் எழுந்தால் நோட்டில் குறிப் பெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் அதனை மறந்துவிட்டு நிம்மதியான தூக்கத்திற்கு மனதையும், உடலையும் ஆட்படுத்துங்கள். மறுநாள் குறிப்பெடுத்து வைத்திருப்பதை புரட்டி பார்த்து, கூடுதலான செயல் திட்டங்களையும் தீட்டுங்கள். அது திட்டமிட்டு செயல்படும் எண்ணங்களை விதைக்கும். எடுத்த காரியத்தை துரிதமாக செய்து முடிப்பதற்கும் வழி வகுக்கும். 

Next Story