புதுமையில் ஒரு பழமை: மீண்டும் காதலுக்கு தூது போகின்றன கடிதங்கள்


புதுமையில் ஒரு பழமை: மீண்டும் காதலுக்கு தூது போகின்றன கடிதங்கள்
x
தினத்தந்தி 25 Jun 2017 10:27 AM GMT (Updated: 25 Jun 2017 10:27 AM GMT)

இந்திய மக்கள் வாழ்க்கையில் ‘கடிதம்’ ஒரு முக்கிய இடத்தை பிடித்திருந்த காலம் ஒன்று இருந்தது. நவீன தொழில்நுட்ப தகவல் பரிமாற்றங்களால் அந்த கடிதப் போக்குவரத்து கொஞ்சம் கொஞ்ச மாக குறைந்து போனது.

ந்திய மக்கள் வாழ்க்கையில் ‘கடிதம்’ ஒரு முக்கிய இடத்தை பிடித்திருந்த காலம் ஒன்று இருந்தது. நவீன தொழில்நுட்ப தகவல் பரிமாற்றங்களால் அந்த கடிதப் போக்குவரத்து கொஞ்சம் கொஞ்ச மாக குறைந்து போனது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கடிதம் எழுதி அனுப்புவதை தொழிலாக செய்து சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது ஒரு நிறுவனம். ஆர்டர் கொடுப்பவர்களுக்காக வலைத்தளத்தில் கடிதம் எழுதி, யாருக்கு போய் சேரவேண்டுமோ அவர்களுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஒரியா, மராத்தி, பெங்காலி, உருது என்று இந்திய மொழிகள் அனைத்திலும் கடிதம் எழுதித்தருகிறார்கள்.

அந்த கடிதங்கள் கம்ப்யூட்டரில் டைப் செய்யப்படுவதில்லை. கையாலே எழுதித் தரப்படுகிறது. 100 வார்த்தைக்கு 99 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள்.

இந்திய மொழிகள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு மொழிகளிலும் கடிதம் எழுதித் தரப்படுகிறது. இந்த வலைத்தள நிறுவனத்தை தொடங்கியவர்கள் அங்கித் அனுபவ் மற்றும் ஜஸ்வந்த் என்ற இரு நண்பர்கள்.

“கடிதங்கள் எழுதித்தரும் எங்கள் வலைத்தளத்திற்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது. வெகுசிறப்பாக இந்த திட்டம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நிறைய பேர் கடிதம் எழுதித்தர கேட்கிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள் கேட்பது, காதல் கடிதங்கள்” என்கிறார் அங்கித்.

“பேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவை தகவல் தொடர்பில் முக்கிய இடங்களை பிடித்துவிட்டன. ஆனால் அவைகளில் அவசர கதியில் அன்பை பரிமாறிக் கொள்கிறார்கள். நவீன தொழில்நுட்பம் இதயங்களை சுருக்கி விட்டது. ஒரு சிறிய மெசேஜில் பெரிதாக முக்கியமான தகவல்களை பரிமாறிக்கொள்ள முடிவதில்லை. எந்த நவீன தொழில்நுட்பம் என்றாலும் அது கடிதம் எழுதுவது போன்ற நிறைவினைத் தருவதில்லை. தங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்ள மனதில் உள்ளதை வார்த்தைகளால் வெளிப்படுத்த கடிதம் எழுதுவதுதான் சிறந்தது.

இன்றைய தலைமுறைக்கு கடிதம் எழுதும் வழக்கமே இல்லை. கடிதம் என்பது அன்பின் அடையாளம். ஆழ்மனதி லிருந்து வெளிவரும் வார்த்தைகளை சுமந்த கடிதங்கள் மனிதர்களை பரவசப்படுத்தும். மீண்டும் மீண்டும் படிக்கும் போதெல்லாம் அந்த பரவசம் கிடைக்கும். அதனால்தான் கடிதங்கள் காலங்காலமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கடிதங்கள் தரும் உணர்வுபூர்வமான நெகிழ்ச்சியை வேறு எதுவாலும் தர முடிவதில்லை. நான் அவசரமாக என் அப்பாவிற்கு பல மெசேஜ்களை அனுப்பி வைப்பேன். என்றாவது ஒரு கடிதம் எழுதுவேன். என் அப்பா உடனே போன் செய்து ‘மகனே உன் கடிதம் வந்தது. ரொம்ப சந்தோஷம்’ என்று சொல்வார். அப்போது அவருக்கு கிடைக்கும் மகிழ்ச்சி என்னிடமும் எதிரொலிக்கும்.

இன்றைய இளைஞர்களுக்கு கடிதம் எழுத ஆசைதான். ஆனால் பழக்கம் இல்லாத காரணத்தால் அந்த வாய்ப்பினை தவறவிட்டுவிடுகிறார்கள்.

காதல்கடிதங்களை தாய்மொழியில் எழுதினால் அது உணர்வு பூர்வமாக இதயத்தை தொட்டுவிடும். பிரபல நடிகர் திலீப்குமார் எழுதிய கடிதங்களை சாய்ராபானு இன்றும் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார். அந்தகால நட்சத்திரங்களுக்கு ரசிகர்களும் கடிதங்கள் மூலம் பாராட்டையும், உற்சாகத்தையும் வழங்கிவந்தார்கள். இந்த கால நடிகர், நடிகைகளுக்கு அந்த வாய்ப்பு அரிதாகி விட்டது” என்கிறார், ஜஸ்வந்த்.

கடிதத்திற்கென்று ஒரு சக்தி இருக்கிறது. எப்போதும் நின்று பேசும். ஊருக்குப் போய் கடிதம் போடுகிறேன் என்பார்கள். அந்த கடிதம் வரும்வரை காத்திருப்பதில் ஒரு அலாதி சுகம் இருக்கும். பெண்ணை பார்த்துவிட்டு கிளம்பும்போது, ‘போய் கடிதம் போடுகிறேன்!’ என்பார்கள். அந்தக் காத்திருப்பில் ஒரு தவிப்பு இருக்கும். வெளியூருக்கு சென்ற மகளிடமிருந்து வரும் கடிதத்தில் ஒரு மகிழ்ச்சி இருக்கும். அதெல்லாம் இப்போது இல்லை. கடிதம் எழுதுவது ஒரு வெட்டிவேலையாகப் பார்க்கப்பட்டது. இப்போது அது மறுபடியும் துளிர்விட்டிருக்கிறது.

நவீன தொழில்நுட்ப செய்திப் பரிமாற்றம் தவறு இல்லை. ஆனால் கடிதம் என்ற ஒரு உணர்வுபூர்வமான விஷயம் அழிந்து விடக்கூடாது.

“உலகம் முழுக்க எங்கள் நிறுவனம் கடிதம் எழுதி, அனுப்பி வைக்கும் சேவையை செய்து வருகிறது. பிரான்ஸ், ரஷியா, கொரியா போன்ற நாடுகளிலிருந்து பலர் ‘நாங்கள் எங்கள் மொழியில் கடிதம் எழுதித் தருகிறோம்’ என்று, எங்கள் நிறுவனத்தில் வேலை செய்ய சம்மதிக்கிறார்கள்.

இந்தியாவில் உள்ள எங்கள் அலுவலகத்திலும் சிலர் வேலைபார்க்கிறார்கள். கடிதம் எழுத சொல்கிறவர்களிடம் உணர்வுபூர்வமான தகவலைகேட்டு அதற்கு தக்கபடி கடிதம் எழுதிக்கொடுக்கிறோம். குறிப்பாக காதல் கடிதங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. எழுதியதை ஒரு முறை ஈமெயிலில் அனுப்பிவைப்போம். ஏதாவது மாற்றவேண்டும் அல்லது சேர்க்க வேண்டும் என்றால் அதையும் செய்து இறுதிவடிவம் கொடுப்போம். அனுப்பி விடலாம் என்று சொன்னதும் சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பிவைப்போம். கடிதத்தை எழுதி மட்டும் கேட்டாலும், எழுதிக்கொடுப்போம். எல்லா கடிதமும் கையெழுத்துப் பிரதிதான்” என்கிறார், அங்கித்.

இவர்களது கடித சேவையை பலரும் பலவிதமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். தனியாக வசிக்கும் இளைஞர்கள் பண்டிகைக்கு ஊருக்கு போக முடியா விட்டால் அம்மா-அப்பாவை சமாதானப்படுத்தி கடிதம் எழுதச் சொல்கிறார்களாம். ‘நிச்சயமாக அடுத்த பண்டிகைக்கு வந்து, உங்களுடன் சேர்ந்து கொண்டாடுவேன்’ என்ற ரீதியில் இருக்குமாம் அந்த கடிதம்.

“தனியாக விடுதியில் தங்கிப் படிக்கும் ஒரு மாணவி வெளியூரில் வேலை செய்து கொண்டிருக்கும் அம்மாவிற்கு, பெற்றோர் தினவிழாவில் கலந்து கொள்ள வரும்படி கடிதம் எழுதி இருந்தாள். இதுநாள் வரை வராத அம்மா அந்த கடிதத்தைப் பார்த்ததும் விழாவிற்கு வந்து விட்டார். அது அந்த மாணவிக்கும், எங்களுக்கும் கிடைத்த பெருமை.

ஒருவரின் தனிப்பட்ட கடிதம் மற்றவருக்குத் தெரியாது. நாங்கள் எந்த ரகசியத்தையும் வெளியிடுவதில்லை. இது தொழில் தர்மம். எங்கள் கடிதம் எத்தனையோ பிரிந்துபோன கணவன்-மனைவியை சேர்த்திருக்கிறது” என்று பெருமைப்படுகிறார், ஜஸ்வந்த்.

சரி.. இதை படித்து முடித்த உடனே யாருக்காவது ஒரு கடிதம் எழுதி, உங்கள் அன்பை வெளிப்படுத்துங்களேன்! 

Next Story