என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு 1058 விரிவுரையாளர் பணி


என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு 1058 விரிவுரையாளர் பணி
x
தினத்தந்தி 26 Jun 2017 7:20 AM GMT (Updated: 26 Jun 2017 7:20 AM GMT)

என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 1058 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தமிழக அரசின் ஆசிரியர் பணி ஆட்தேர்வு வாரியம் சுருக்கமாக டி.ஆர்.பி. என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு தமிழக அரசு பள்ளிகள் - கல்லூரிகளில் ஏற்படும் இளநிலை - முதுநிலை ஆசிரியர் மற்றும் விரிவுரையாளர் போன்ற பணியிடங்களை நிரப்பும் அமைப்பாக செயல்படுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு எனும் எழுத்துத் தேர்வு நடத்தி தகுதியானவர்களை பணிக்கு நியமனம் செய்து வருகிறது.

தற்போது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் பாலிடெக்னிக் கல்லூரி களில் 2017-18-ம் ஆண்டுக்கான விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப டி.ஆர்.பி. அமைப்பு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 1058 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

பாடப்பிரிவு வாரியான பணியிட விவரம் : சிவில் என்ஜினீயரிங் -112, மெக்கானிக்கல் - 219, எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் - 91, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் - 118, இன்ஸ்ட்ரு மென்டேசன் அண்ட் கண்ட்ரோல் - 3, கம்ப்யூட்டர் சயின்ஸ் - 134, இன்பர்மேசன் டெக்னாலஜி - 6, புரொடக்சன் என்ஜினீயரிங் - 6, டெக்ஸ்டைல் - 3, பிரிண்டிங் டெக்னாலஜி - 6, ஆங்கிலம் - 88, கணிதம் - 88, இயற்பியல் - 83, வேதியியல்-84, மாடர்ன் ஆபீஸ் பிராக்டிஸ்-17.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 1-7-2017-ந் தேதியில் 57 வயதுக்கு உட்பட்டவர் களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

பணியிடங்கள் உள்ள பாடப்பிரிவில் இளநிலை என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் என்ஜினீயரிங் தொடர்பான பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். என்ஜினீயரிங் சாராத மொழி மற்றும் அறிவியல் பாடப்பிரிவு பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அந்தந்த பாடப் பிரிவுகளில் முதுநிலை படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:


எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப் படுவார்கள்.

கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் ரூ.600 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.ஏ. எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.300 கட்டணம் செலுத்தினால் போதுமானது. கட்டணத்தை இணையதளம் வழியே நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகிய முறைகளில் செலுத்த முடியும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் 7-7-2017-ந் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும். இறுதியாக விண்ணப்பம் சமர்ப்பித்ததும், பூர்த்தியான விண்ணப்பத்தை பிற்கால உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்து பாதுகாத்துக் கொள்ளவும். இதற்கான எழுத்துத் தேர்வு 13-8-2017 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.trb.tn.nic.in, www.trbonlineexams.in ஆகிய இணையதள பக்கங்களைப் பார்க்கலாம். 

Next Story