கல்வித்துறையை போல் விளையாட்டு துறையிலும் மிக விரைவில் பெரிய மாற்றங்கள் வரும்


கல்வித்துறையை போல் விளையாட்டு துறையிலும் மிக விரைவில் பெரிய மாற்றங்கள் வரும்
x
தினத்தந்தி 26 Jun 2017 11:00 PM GMT (Updated: 26 Jun 2017 6:10 PM GMT)

கல்வித்துறையை போல் விளையாட்டு துறையிலும் மிக விரைவில் பெரிய மாற்றங்கள் வரும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு

ஈரோடு மாநகராட்சி சூரியம்பாளையம் மண்டலத்துக்கு உள்பட்ட தண்ணீர்பந்தல்பாளையம் செங்குந்தர் நகர் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புரட்சித்தலைவி அம்மா கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடந்தது. போட்டிகளை முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 62 அணிகள் போட்டியில் கலந்து கொண்டன. டென்னிஸ் பந்தில் தலா 6 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக இது நடந்தது. பகல் ஒளி மற்றும் மின்னொளியில் 3 நாட்கள் நடந்த இந்த போட்டிகளுக்கான இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

விழாவுக்கு ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, இறுதி போட்டியை தொடங்கி வைத்தார்.

கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ., சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற மேட்டூர் அணிக்கு புரட்சித்தலைவி அம்மா கோப்பை மற்றும் பரிசுத்தொகையை தமிழக பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது–

சிறப்பு திட்டங்கள்

மற்ற எல்லாவற்றையும் விட விளையாட்டுக்கு என்று ஒரு சிறப்பு உண்டு. அது வெற்றி–தோல்வி இரண்டையும் சமநிலையில் பார்க்க வைக்கும். வெற்றி பெற்றவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். வெற்றி வாய்ப்பை தவற விட்டவர்கள், அடுத்து வெற்றியை பெற கடுமையாக உழைப்பார்கள். தமிழக அரசு விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றன. தொடர்ந்து தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்து வரும் அரசு, விளையாட்டு வீரர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து வருகிறது.

கடந்த வாரம் விளையாட்டு வீரர்களுக்கு ரூ.4 கோடியே 30 லட்சம் மதிப்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. தற்போது பள்ளிக்கல்வித்துறையில் எப்படிப்பட்ட மாற்றங்கள் வந்து கொண்டிருக்கிறதோ, அதுபோல் விளையாட்டு துறையிலும் மிகப்பெரிய மாற்றங்கள் விரைவில் வரும். எனவே தமிழக விளையாட்டு வீரர்கள் உலக அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப்பதக்கங்கள் பெற்று வரும் அளவுக்கு ஆக்கத்தையும், ஊக்கத்தையும் இந்த அரசு தரும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

பரிசுத்தொகை

2–ம் இடம் பிடித்த ஈரோடு கன்னிமார் நகர் ஏ.சி.சி. பாய்ஸ் அணிக்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பரிசுக்கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கி பேசினார். 3–ம் பரிசை பெற்ற கடம்பூர் அணி, 4–ம் பரிசு பெற்ற செங்குந்தர் நகர் புதுக்காலனி வாரியர்ஸ் அணிகளுக்கும் அமைச்சர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.

விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் உறுப்பினர் ஏ.கே.பழனிச்சாமி, பகுதி செயலாளர்கள் முருகு சேகர், ஜெகதீசன், கோவிந்தராஜ், தமிழ்நாடு கூட்டுறவு துணி நூல் துறை மாநில தலைவர் எம்.ஜி.பழனிச்சாமி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக முன்னாள் துணைமேயர் கே.சி.பழனிச்சாமி வரவேற்றார்.

போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பெரியசேமூர் பகுதி ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் என்.நந்தகோபால், வார்டு செயலாளர் ஆர்.துரைசாமி ஆகியோர் செய்து இருந்தனர்.


Next Story