மதுக்கடையை மூடக்கோரி மாணவ–மாணவிகள் மறியல், போக்குவரத்து பாதிப்பு


மதுக்கடையை மூடக்கோரி மாணவ–மாணவிகள் மறியல், போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 27 Jun 2017 11:00 PM GMT (Updated: 27 Jun 2017 10:24 PM GMT)

கோவிலம்பாக்கத்தில் மதுக்கடையை மூடக்கோரி வகுப்புகளை புறக்கணித்து மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் சுண்ணாம்பு கொளத்தூரில் குடியிருப்புகள் உள்ள பகுதியில் ஒரு டாஸ்மாக் மதுக்கடையும், அரசு உயர்நிலைப்பள்ளி அருகே மற்றொரு மதுக்கடையும் இயங்கி வருகின்றன. இந்த மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் 500–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் நேற்று காலை திடீரென வகுப்புகளை புறக்கணித்தனர்.

சாலை மறியல்

பின்னர், பள்ளியின் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் முன்னாள் அ.தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் கோவிலம்பாக்கம் மணிமாறன், மாணவர்களின் பெற்றோர்களும், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், பொது நலச்சங்கத்தினரும் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தகவல் அறிந்ததும் மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமி‌ஷனர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் 2 மதுக்கடையையும் மூடும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று அனைவரும் தெரிவித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதனையடுத்து சோழிங்கநல்லூர் தாசில்தார் ஜெயபிரகாஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ‘மதுக்கடையை மூடுவதற்கு உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். ஆனால் உடனடியாக மதுக்கடையை மூடினால் தான் கலைந்து செல்வோம் என்று மாணவ, மாணவிகள் உறுதியாக தெரிவித்து விட்டனர்.

சுமார் 3 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் பள்ளி அருகே உள்ள மதுக்கடை உடனடியாக மூடப்படும் என தாசில்தார் அறிவித்தார். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story