சலுகை விலையில் துணி, பொருட்கள் வாங்குவதற்கு தியாகராயநகரில் அலைமோதிய கூட்டம்


சலுகை விலையில் துணி, பொருட்கள் வாங்குவதற்கு தியாகராயநகரில் அலைமோதிய கூட்டம்
x
தினத்தந்தி 24 July 2017 1:30 AM GMT (Updated: 23 July 2017 8:24 PM GMT)

சலுகை விலையில் துணி மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு தியாகராயநகரில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

சென்னை,

ஆடி மாதத்தில் நடைபெறும் கோவில் திருவிழாக்களின்போது உடுத்துவதற்காக, புதிய துணிமணிகளை பொதுமக்கள் வாங்குவது வழக்கம். இதனை கருத்தில்கொண்டு தள்ளுபடி விலையில் ‘ஆடி கழிவு’ முறையை ஜவுளி வியாபாரிகள் கொண்டுவந்தனர். கடந்த காலங்களில் ஜவுளி வியாபாரிகள் வீடு, வீடாக சென்று துணிமணிகளை விற்பனை செய்தனர்.

காலப்போக்கில் இந்த நடைமுறைகள் மாறி போனாலும், தள்ளுபடி அறிவித்து, ஆடி கழிவு என்ற முறை மட்டும் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த ஆண்டு ஆடி மாதம் கடந்த 17-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி வியாபாரிகள் போட்டிப்போட்டு சலுகைகளை அறிவித்தனர்.

ஜவுளி வகைகள் ரகத்திற்கு ஏற்ப 5 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல பர்னிச்சர்கள், செல்போன்கள், வீட்டு உபயோக பொருட்கள், பாத்திரங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உள்ளிட்டவையும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

சலுகை விலையில் பொருட்கள் கிடைப்பதால் அதனை வாங்குவதற்கு மக்கள் இடையே ஆர்வம் அதிகமாக காணப்படுகிறது. வழக்கமான நாட்களை விடவும் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் ஆடி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, பல்வேறு கடைகளில் கூட்டம் அலைமோதியது.

சென்னையின் முக்கிய வணிக தலமாக கருதப்படும் தியாகராயநகர், பெரம்பூர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் கூட்டம் அலைமோதியது.

ஒரே துணியை முந்தியடித்துக்கொண்டு பலரும் தேர்வு செய்வதால், தள்ளுமுள்ளு ஏற்படுவதோடு, காரசார விவாதம் ஏற்படுவதையும் காணமுடிகிறது. தள்ளுபடி விலையில் கிடைக்கும் துணிமணிகளை பொதுமக்கள் ஆர்வத்தோடு வாங்கி செல்கின்றனர். சிலர் தீபாவளி பண்டிகைக்கு இப்போதே துணிமணிகளை வாங்கி வைக்க தொடங்கியுள்ளனர்.

தீபாவளி பண்டிகை காலத்தில் துணிமணிகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதுவதால், இப்போதே வாங்கி வைப்பதாக பொதுமக்கள் சிலர் கருத்து தெரிவித்தனர். பெரிய கடைகளுக்கு நிகராக சிறிய அளவிலான கடைகளும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தள்ளுபடி விலைகளை அறிவித்துள்ளன.

சில கடைகளில் ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) வரி அமல்படுத்துவதற்கு முன்பு உள்ள கட்டணத்தின் அடிப்படையில் துணி மற்றும் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடைகளிலும் வழக்கத்தை விடவும் அதிகமான கூட்டம் காணப்பட்டது. 

Next Story