14 வயதில் குழந்தை பெற்ற சிறுமி உறவினர்கள் கண்டித்ததால் சாலையோரம் வீசி சென்ற பரிதாபம்


14 வயதில் குழந்தை பெற்ற சிறுமி உறவினர்கள் கண்டித்ததால் சாலையோரம் வீசி சென்ற பரிதாபம்
x
தினத்தந்தி 25 July 2017 12:00 AM GMT (Updated: 24 July 2017 11:06 PM GMT)

தாரமங்கலம் அருகே 14 வயதில் குழந்தை பெற்ற சிறுமியை, உறவினர்கள் கண்டித்ததால் அந்த குழந்தையை சாலையோரம் வைத்து விட்டு அந்த சிறுமி தலைமறைவாகி உள்ளாள்.

தாரமங்கலம்,

சேலம் மாவட்டம், தாரமங்கலம் காந்தி சிலை பின்புறம் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது பிறந்து 7 மாதமே ஆன பெண் குழந்தை ஒன்று புத்தாடை அணிவிக்கப்பட்டு அனாதையாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த குழந்தையின் அருகே 4 புதிய ஆடைகளும் வைக்கப்பட்டு இருந்தன.

இந்த தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த தாரமங்கலம் போலீசார் அந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே அன்று இரவு தாரமங்கலம் அருகே உள்ள ஆரூர்பட்டியை சேர்ந்த பெண் ஒருவர் தாரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.

அவர் அந்த குழந்தை தனது மகள் வழி பேத்தி என்றும், 14 வயதில் குழந்தை பெற்றதை உறவினர்களும், நானும் கண்டித்ததால் அவள் குழந்தையை சாலையோரம் வீசிச் சென்று இருக்கிறாள் என்றும் கூறினார்.

இதனை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது தொடர்பாக அந்த பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த பெண் அளித்த விவரம் வருமாறு:–

எனது கணவர் இறந்து 10 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு 17 மற்றும் 15 வயதில் 2 மகள்களும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 13 வயதில் எனது இரண்டாவது மகள் திடீரென காணாமல் போனாள். அவளை பல்வேறு இடங்களில் தேடியும் அவள் கிடைக்கவில்லை. இதனிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு எனது மகள் 7 மாத பெண் குழந்தையுடன் வீட்டுக்கு வந்தாள். இதை பார்த்த எனது உறவினர்கள், 13 வயதில் ஓடிப்போய் 14 வயதில் யாரிடமோ ஏமாந்து குழந்தை பெற்றுக்கொண்டு வந்துள்ளாயே என்று அவளை கண்டித்தனர்.

நானும் அவளையும், அவளது கைக்குழந்தையும் வீட்டில் சேர்க்க மறுத்தேன். கடந்த 2 நாட்களாக எனது வீட்டின் முன்பு காத்து கிடந்த அவள், திடீரென குழந்தையுடன் வந்த தன்னை யாரும் ஆதரிக்கவில்லையே என்று கவலை அடைந்து, தனது குழந்தையுடன் அங்கிருந்து சென்று விட்டாள்.

இதனிடையே கடந்த 2 நாட்களாக வீட்டின் அருகே காத்திருந்த மகள் திடீரென காணாமல் போனதால் சந்தேகத்தின் பேரில் தாரமங்கலத்திற்கு வந்தேன். அங்கு நள்ளிரவு நேரத்தில் கைக்குழந்தையுடன் சிறுமி காந்தி சிலை பகுதியில் சென்றதாக கூறினார்கள். உடனே அங்கு சென்று விசாரித்த போது போலீசார் அந்த குழந்தையை மீட்டு கொண்டு வந்த விவரம் தெரியவந்து போலீஸ் நிலையத்திற்கு வந்ததாக அந்த பெண் தெரிவித்தார்.

இதையடுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற குழந்தையை அதன் பாட்டியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



Next Story