பெருந்துறை அருகே கோவில் முன்பு குவிக்கப்பட்ட மண்ணில் முட்டையிட்டு அடைகாத்த நாகப்பாம்பு


பெருந்துறை அருகே கோவில் முன்பு குவிக்கப்பட்ட மண்ணில் முட்டையிட்டு அடைகாத்த நாகப்பாம்பு
x
தினத்தந்தி 25 July 2017 9:45 PM GMT (Updated: 25 July 2017 7:26 PM GMT)

பெருந்துறை அருகே கோவில் முன்பு குவிக்கப்பட்ட மண்ணில் முட்டையிட்டு அடைகாத்த நாகப்பாம்பை வனத்துறையினர் பிடித்து சென்று காட்டில் விட்டனர்.

பெருந்துறை,

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலத்தில் வீரமாத்தி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில் மேடை அமைப்பதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிராவல் மண் குவிக்கப்பட்டு இருந்தது. மழை பெய்ததால் அந்த மண் நாளடைவில் கெட்டியாகியது. அந்த மண்ணில் எலிகள் துளை போட்டு இருந்தது. அந்த வழியாக ஊர்ந்து வந்த பாம்பு அடைக்கலம் தேடி பொந்துக்குள் சென்று இருந்து கொண்டது. மண் கெட்டியாகி பாம்பு புற்றுபோன்ற தோற்றத்துடன் காணப்பட்டது. இதனால் அந்த பாம்பும் அந்த இடத்தை தனக்கு புகலிடமாக்கிக்கொண்டது.

இந்த நிலையில் நேற்று காலை கோவிலுக்கு அம்மனை தரிசனம் செய்ய பக்தர்கள் வந்தனர். ஆட்கள் சத்தம் கேட்டதும் மண்ணின் துவாரத்துக்குள் இருந்த பாம்பு உஷ், உஷ் என சீறியது. அப்போது அங்கு மண் குவியலில் உள்ள பொந்துக்குள் பாம்பு சுருண்டு கிடந்ததை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி உடனடியாக ஈரோடு வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வனக்காப்பாளர் குணசேகரன் மற்றும் வனத்துறையினர் அங்கு வந்தனர். அப்போது மண்ணின் துவாரத்துக்குள் சுருண்டு கிடந்தது நாகப்பாம்பு என்பதும், அது தான் புகலிடம் தேடிய இடத்திலேயே முட்டை இட்டு அடைகாத்ததும் தெரிய வந்தது.

ஆட்கள் சத்தத்தை கேட்டதும் பாம்பு படமெடுத்து ஆடியது. இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப்பையில் போட்டனர். பாம்பு முட்டைகளையும் எடுத்தனர். அப்போது அதில் 2 முட்டைகள் உடைந்தன. இதில் 2 குட்டிகள் வெளியே வந்து இறந்தன. அவற்றையும் வனத்துறையினர் எடுத்து சாக்குப்பையில் போட்டனர். பின்னர் 15 முட்டைகளுடன் சேர்த்து நாகப்பாம்பை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.


Next Story