லஞ்சப்புகார்: மாநகராட்சி என்ஜினீயருக்கு 2 ஆண்டு சிறை சென்னை கோர்ட்டு உத்தரவு


லஞ்சப்புகார்: மாநகராட்சி என்ஜினீயருக்கு 2 ஆண்டு சிறை சென்னை கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 15 Aug 2017 9:49 PM GMT (Updated: 15 Aug 2017 9:49 PM GMT)

சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை பிரிவு என்ஜினீயருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை கோர்ட்டு உத்தரவு.

சென்னை,

சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை பிரிவில் 2007-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை நிர்வாக என்ஜினீயராக பணியாற்றி வந்தவர் மகாலிங்கம். கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய இடங்களில் உள்ள குப்பைக்கிடங்கில் பயன்படுத்திய பொக்லைன் எந்திரத்துக்காக ராஜசேகர் என்பவருக்கு மாநகராட்சி நிர்வாகம் 4 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டியது இருந்தது. இந்த தொகையை அனுமதிக்க கடந்த 2010-ம் ஆண்டு என்ஜினீயர் மகாலிங்கம், ராஜசேகரிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதுகுறித்து ராஜசேகர் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

இதன்பின்பு, லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரூ.25 ஆயிரம் லஞ்சப்பணத்தை ராஜசேகர், என்ஜினீயர் மகாலிங்கத்திடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், மகாலிங்கத்தை கையும், களவுமாக பிடித்தனர். இதைதொடர்ந்து அவரது வீட்டில் சோதனை செய்தபோது கணக்கில் காட்டப்படாமல் 4 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரியவந்தது. இந்த பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா, குற்றம்சாட்டப்பட்ட என்ஜினீயர் மகாலிங்கத்துக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்த பணம் சம்பந்தமாக எந்த ஆதாரத்தையும் என்ஜினீயர் மகாலிங்கம் அளிக்காததால் அந்த பணத்தை இந்த வழக்கின் மேல்முறையீடு முடிவடைந்ததும் அரசு கணக்கில் சேர்க்க நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story