தமிழகத்தில் தேர்தல் நடந்தால் ஸ்டாலின் முதல்-அமைச்சராக வாய்ப்பு உள்ளது சீமான் பேட்டி


தமிழகத்தில் தேர்தல் நடந்தால் ஸ்டாலின் முதல்-அமைச்சராக வாய்ப்பு உள்ளது சீமான் பேட்டி
x
தினத்தந்தி 17 Aug 2017 11:15 PM GMT (Updated: 17 Aug 2017 9:58 PM GMT)

தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் நடந்தால் ஸ்டாலின் முதல்-அமைச்சராக வாய்ப்பு உள்ளது என்று சீமான் கூறினார்.

ராமநாதபுரம்,

ராமேசுவரத்தில் கடந்த 2008-ம் ஆண்டு தமிழ் திரையுலகத்தின் சார்பில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திரைப்பட இயக்குனர் அமீர் ஆகியோர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கியூ பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். ராமேசுவரம் கோர்ட்டில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை பின்னர் ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று சீமான், அமீர் ஆகியோர் கூடுதல் மாவட்ட நீதிபதி லிங்கேஸ்வரன் முன்னிலையில் நேரில் ஆஜரானார்கள். வழக்கு விசாரணை வருகிற 30-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக ராமநாதபுரம் கோர்ட்டுக்கு வந்த சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க.வின் சின்னத்தை முடக்கி கட்சியை மூன்றாக பிரித்து பா.ஜ.க. தான் ஆட்சியை முழுமையாக நடத்திக் கொண்டிருக்கிறது. மற்ற மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியது போன்று தமிழகத்தில் பா.ஜ.க.வால் ஆட்சியை கைப்பற்ற முடியாது. மத்தியில் வலுவான ஆட்சி இருப்பதால் தமிழகத்தை கைப்பற்றி விடலாம் என்று பா.ஜ.க. எண்ணிக்கொண்டிருக்கிறது. அது ஒருபோதும் நடக்காது.

பதவிக்காக போட்டி போட்டுக்கொண்டிருக்கும் அ.தி.மு.க.வினர் ஒன்றாக சேர்ந்தாலும் நாளை தேர்தல் நடந்தால் யார் முதல்-அமைச்சர் என்பதில் அவர்களுக்குள் சண்டை வரும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் குற்றச்சாட்டு கூறும் நடிகர் கமல், ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு சென்ற போது ஜெயலலிதாவை பதவி விலக கூறாதது ஏன்? கலைஞரின் குடும்பம் சிறையில் இருந்தபோது அவர்களையும் பதவி விலக கூறவில்லை.

எடப்பாடி முதல்-அமைச்சரான பின்னர்தான் ஊழல் நடப்பதாக கமல் கூறுவது தவறு. கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் ஊழல் நடந்து வருகிறது. அதிலும் ஸ்டாலினுக்கு பக்கத்தில் இருந்து கொண்டு ஊழலை பற்றி கமல் பேசுவது கேலிக்குரியது.

ஊழலுக்கு எதிரான கமலின் குரலுக்கு வலுசேர்க்க நாங்கள் வருகிறோம். ஆனால், 7 ஆண்டுகளாக ஊழலுக்கு எதிராக நாங்கள் குரல் கொடுத்த போது கமல் உள்பட யாரும் வரவில்லை.

தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றால் ஸ்டாலின் முதல்-அமைச்சராக வாய்ப்பு உள்ளது. இதற்காகத்தான் ஸ்டாலின் முயற்சி மேற்கொள்கிறார். வைகோ தனது கட்சி தொண்டர்களை, தலைவர்களை திருப்திப்படுத்த தேர்தலில் வெற்றி பெற வேண்டிய நிலை உள்ளது. இதற்கு பா.ஜ.க.விடம் சரணாகதி அடைந்துவிட்ட அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க முடியாது என்பதால் வைகோ தனது கருத்து தத்துவத்துடன் ஒத்துப்போகின்ற தி.மு.க.வுடன் சேர்ந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை.

தினகரன் கட்சி, ஆட்சி தொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும் பயனில்லை. அ.தி.மு.க. என்பது பதவிக்கான கட்சி என்பதால் பதவி எங்கு உள்ளதோ அங்குதான் கட்சி இருக்கும்.

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து போட்டியிடும். 2019-ம் ஆண்டு வரை தமிழகத்தில் ஆட்சிக்கு பாதிப்பு வராது. ஆட்சியை கலைக்க தினகரன் முயன்றால் அன்னிய செலாவணி வழக்கில் பா.ஜ.க. நெருக்கடி கொடுக்கும்.

நீட் தேர்வில் மாணவர்கள் பாதிப்பிற்காக ஓராண்டு விலக்களித்தால் அடுத்த ஆண்டும் அதே பாதிப்பு இருக்கும் என்பதால் நிரந்தர விலக்கு வேண்டும்.

தமிழகத்தில் ஜெயலலிதாவிற்குபின் பிராமண தலைமை தேவைப்படுவதால் பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், தமிழிசை ஆகியோரைத் தவிர்த்து நிர்மலா சீதாராமனை பா.ஜ.க. தமிழகத்தில் அனைத்து விஷயங்களிலும் முன்நிறுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Tags :
Next Story