ஆகாயத்திலும், ஆழ்கடலிலும் அசத்தும் ‘பலே ராணி’


ஆகாயத்திலும், ஆழ்கடலிலும் அசத்தும் ‘பலே ராணி’
x
தினத்தந்தி 19 Aug 2017 8:00 AM GMT (Updated: 19 Aug 2017 6:17 AM GMT)

கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரை தொடர்ந்து விண்வெளியில் கால்பதிக்க தயாராகிவரும் மூன்றாவது இந்திய வம்சாவளிப் பெண், ‘ஷாவ்னா பாண்டியா’!

ல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரை தொடர்ந்து விண்வெளியில் கால்பதிக்க தயாராகிவரும் மூன்றாவது இந்திய வம்சாவளிப் பெண், ‘ஷாவ்னா பாண்டியா’! கனடா வாழ் இந்தியரான ஷாவ்னா, 2018-ல் விண்வெளிக்கு பறக்க இருக்கிறார். பொது மருத்துவரான ஷாவ்னா, ‘சிட்டிசன் சயின்ஸ் ஆஸ்ட்ரோநெட்டிக்ஸ்’ நிகழ்வில் கலந்துகொண்ட 3 ஆயிரத்து 200 நபர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இருவருள் ஒருவர். இவரோடு 8 வானியலாளர்களும் பயணிக்கிறார்கள். விண்வெளி பயணத்திற்காக தயாராகி வரும் ஷாவ்னாவிடம் பேசினோம். அவர் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

உங்களை பற்றி?

பொது மருத்துவர், நரம்பியல் வல்லுநர், ஆழ் கடல் ஆராய்ச்சியாளர், பருவநிலை ஆராய்ச்சியாளர், பாராசூட் டைவர், விமானி... என பல அடையாளங்கள் எனக்கு உண்டு. சுருக்கமாக சொல்வதென்றால், நான் ஒரு ‘மல்டி டாஸ்கிங் ராணி’!

கனடாவின் ஆல்பெர்டா பல்கலைக்கழகத்தில் நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றியபடியே, மருத்துவ மேற்படிப்புகளை பயின்று வருகிறேன். ரஷியன், ஸ்பானீஷ், பிரெஞ்ச், சைனீஸ், இந்தி... போன்ற மொழிகள் எனக்கு தெரியும். அத்துடன் தற்காப்பு கலைகளிலும் கெட்டிக்காரி. ‘மொய்தாய்’ கலையில் பிளாக் பெல்ட், இன்டர்நேஷனல் தேக்வாண்டோ தற்காப்புக் கலையில் சாம்பியன் பட்டம், ‘சீல்’ எனும் அமெரிக்க கடற்படையின் கடும் பயிற்சியையும் முடித்திருக் கிறேன். இத்தனை வேலைகளுக்கு நடுவே, புத்தகம் எழுதும் பழக்கமும் இருக்கிறது.

மருத்துவரான உங்களுக்கு, விண்வெளி சென்று வர எப்படி வாய்ப்பு கிடைத்தது?

விண்ணை தொடும் ஆசை 10 வயதிலேயே ஏற்பட்டுவிட்டது. கனவாக இருந்த ஆசையை நிஜமாக்க கடுமையாக போராடினேன். மருத்துவம் படித்தாலும் விண்வெளி சம்பந்தமான படிப்புகளை படித்து கொண்டிருந்தேன். அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ‘இண்டர்ன்ஷிப்’பாக பணியாற்றினேன். விண்வெளியில் மிதக்கும் ஆசையோடு ‘கனடியன் ஸ்பேஸ் சொசைட்டி’யில் பகுதி நேரமாக பணியாற்றினேன். ‘ஆஸ்ட்ரோநாட் 4 ஹையர்’, ‘இண்டர்நேஷனல் ஸ்பேஸ் டெவலெப்மெண்ட்’, ‘லூனார் அப்சர்வேட்டரி அசோசியேஷன்’ போன்ற விண்வெளி அமைப்புகளில் சேர்ந்து, விண்வெளி அறிவை வளர்த்துக் கொண்டேன். உலக அளவில் நடைபெறும் விண்வெளி கலந்தாய்வு கூட்டங்களில் என்னுடைய பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். விண்வெளி ஆர்வமும், விமானி அனுபவமும் என்னை விண்வெளிக்கு அழைத்து செல்ல இருக்கிறது.

விண்வெளிக்கு செல்ல எப்படி தேர்வானீர்கள்? எதற்காக தேர்வாகி இருக்கிறீர்கள்?

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, பல வழிகளிலும் விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. விண்வெளி பயணத்தின் முக்கிய துறைகளில் மட்டும் கவனம் செலுத்தும் நாசா... மற்ற துறைகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்திருக்கிறது. அதில் ‘போஸ்சோம்’ எனப்படும் துருவப்பகுதிகளின் சூழல் மாறுபாடு குறித்த விண்வெளி ஆய்வுகளும் ஒன்று. நாசாவின் மேற்பார்வையில் நடைபெறும் ‘போஸ்சோம்’ ஆராய்ச்சி பணிகளில் வானியலாளர்களு டன் பொதுமக்களும் கலந்து கொள்ளலாம். இதற்காக ‘சிட்டிசன் சயின்ஸ் ஆஸ்ட்ரோநெட்டிக்ஸ்’ என்ற தேர்வு நடத்தி, விண்வெளி ஆராய்ச்சிகளில் ஆர்வமிக்கவர்களை தேர்ந்தெடுக் கிறார்கள். அவர்களுக்கு விண்வெளி பயண பயிற்சி, மிதக்கும் பயிற்சி, ஆராய்ச்சி பணிகள், விண்வெளியில் தாக்குபிடிக்கும் பயிற்சி என ஒரு வருட பயிற்சிக்கு பின்னர்... விண்வெளிக்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்தவகையில் 2018-ம் ஆண்டிற்கான விண்வெளி பயணக்குழுவில் நான் இடம் பிடித்திருக்கிறேன். பயிற்சிகள் தொடங்கிவிட்ட நிலையில் விண்வெளி பயணத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.

விண்வெளி பயிற்சிகளில் கடினமானது எது?

செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கும் மிதவை அறையில் மிதப்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன். ஏனெனில் ஆரஞ்சு நிற விண்வெளி உடையை அணிந்து கொண்டு நடப்பதே கடினம். அப்படி இருக்கையில் அதை அணிந்து கொண்டு மிதக்க சொன்னார்கள். விண்வெளி உடையின்றி நன்றாக மிதந்த எனக்கு, உடையுடன் மிதக்க சிரமமாக இருந்தது. குறிப்பாக நம்முடன் பயணிக்கும் வானியலாளர்களுடன் மிதந்து பழக வேண்டும். இதனால் பல முறை முட்டி மோதிக் கொண்டோம். கடினமான பயிற்சியாக இருந்தாலும், அதில் காமெடியும் கலந்திருந்தது.

விண்வெளி பயணத்தில் உங்களுடைய வேலை?


துருவப்பகுதிகளில் ஏற் படும் காலநிலை மாற்றங்களை குறிப்பு எடுப்பதும், அதை தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைப்பதுமே என்னுடைய வேலை.

அடுத்தக்கட்ட முயற்சி?


‘போஸ்சோம்’ விண்வெளி பயணத்தை போன்றே, ‘போஸிடான்’ என்ற ஆழ் கடல் ஆராய்ச்சி பணிகளுக்கு தேர்வாகி இருக்கிறேன். புளோரிடாவில் உள்ள உலகின் முதல் ஆழ்கடல் ஆய்வகத்தில் ‘போஸிடான்’ ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 100 நாட்கள் ஆழ்கடலில் தங்கியிருந்து கடல் வளம், நீரின் தன்மை, கடல் குதிரை, அரிய வகை உயிரினங்கள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இருக்கிறேன். அதற்கான பயிற்சிகள் முடிவடைந்துவிட்டதால் வெகு விரைவில் ஆழ்கடலுக்குள் பயணிக்க இருக்கிறேன். விண்வெளி பயிற்சிகளுக்கு நேரம் ஒதுக்குவதை போன்றே, ஆழ்கடல் ஆராய்ச்சிகளுக்கும் இட மளித்து வருகிறேன்.

விண்வெளி பயிற்சி, ஆழ்கடல் பயிற்சி என ஓய்வின்றி சுழல்கிறீர்கள். இது சலிப்பை உண்டாக்குகிறதா?


நிச்சயமாக இல்லை. ஏனெனில் இதைதவிர எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. அதிகாலையிலேயே ‘மொய்தாய்’, ‘தேக்வாண்டோ’ தற்காப்பு பயிற்சிகள் ஆரம்பித்துவிடும். இதற்கு பிறகு ஆல்பெர்டா மருத்துவமனையில் மருத்துவர் பணி. ஓரிரு அறுவை சிகிச்சைகள். மதிய வேளையில் விண்வெளி பயண பயிற்சி, மாலையில் ஆழ்கடல் ஆராய்ச்சிகளுக்கான பயிற்சி, இரவு நேரத்தில் விமானி ஓட்டுநர் பயிற்சி... இவை அனைத்தையும் முடித்துவிட்டு செல்வதற்குள் இரவு 10 மணி ஆகிவிடும். அதற்கு மேல் பருவநிலை மாற்றம் சம்பந்தமான குறிப்புகளை எடுப்பதற்குள் தூக்கம் கண்ணை கட்டிவிடும். இப்படியே நாட்கள் நகர்கிறது.

உங்களுக்கு பிடித்த வேலை எது?


அறுவை சிகிச்சை. நோயாளிகளின் வலியை குணப்படுத்திய மனநிறைவு வேறு எந்த துறையிலும் கிடைக்காது.

நிலவிற்கும், செவ்வாய் கிரகத்திற்கும் செல்ல வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள்?

நிலவிலும், செவ்வாய் கிரகத்திலும் இலவச மருத்துவமனைகளை கட்ட ஆசைப்படுகிறேன். மீதம் இருக்கும் பணத்தில் ‘மொய்தாய்’ மற்றும் ‘தேக்வாண்டோ’ பயிற்சி மையங்களை ஏற்படுத்து வேன்.

தற்காப்பு கலையில் அதீத ஆர்வம் காட்டுகிறீர்கள். விண்வெளி பயணத்தில் தற்காப்பு பயிற்சிகளை மேற்கொள்வீர்களா?


நிச்சயமாக மேற்கொள்வேன். என்னுடன் பயணிக்க இருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு அதற் கான பயிற்சிகளை வழங்கி வருகிறேன். விண்வெளி பயணத்தில் கிடைக்கும் ஓய்வை, மிதக்கும் சண்டை காட்சிகளாக படம் பிடிக்க இருக்கிறோம்.

விண்வெளி பயணங்களில் பங்குகொள்ள என்ன செய்யவேண்டும்?


விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் திறமையானவர்களை தேடிக் கொண்டிருக்கிறது. கருத் தரங்கம், ஆராய்ச்சி கட்டுரைகள், கண்டுபிடிப்புகள்...  என பல தலைப்புகளில் தேர்வுகளை நடத்தி வருகிறார்கள். இதுபோன்ற தேர்வுகளில் தவறாமல் கலந்துகொள்ளுங்கள். இத்தகைய போட்டிகளில் நீங்கள் யார்?, எந்த நாட்டவர்?, சிவப்பா-கருப்பா..? என்பதை எல்லாம் ஒதுக்கிவிட்டு, உங்களுக்குள் என்ன திறமை இருக்கிறது என்பதை மட்டுமே ஒப்பிடுவார்கள். அதனால் சர்வ தேச விண்வெளி போட்டிகளை முன்னேற்றத்தின் படிக்கட்டாக நினைத்து கொண்டு பங்கு கொள்ளுங்கள். ஒரு துறையில் வளர்ச்சி அடைவதை விட... பல துறைகளில் உங்களை வலுப்படுத்தி கொள்ளுங்கள். அப்போது தான் பல திசைகளில் இருந்து பல கதவுகள் திறக்கும்.

Next Story