டாக்டர் முத்துலட்சுமி: ஆணாதிக்க வீழ்ச்சியின் தொடக்கம்!


டாக்டர் முத்துலட்சுமி: ஆணாதிக்க வீழ்ச்சியின் தொடக்கம்!
x
தினத்தந்தி 19 Aug 2017 9:00 AM GMT (Updated: 19 Aug 2017 7:16 AM GMT)

அறிந்த ஆளுமைகளின் வாழ்வில் மறைந்து கிடக்கும் பக்கங்களைப் புரட்டி வரும் இந்தத்தொடரில் இதுவரை பெரோஸ் காந்தியைப் பற்றி பார்த்தோம்.

றிந்த ஆளுமைகளின் வாழ்வில் மறைந்து கிடக்கும் பக்கங்களைப் புரட்டி வரும் இந்தத்தொடரில் இதுவரை பெரோஸ் காந்தியைப் பற்றி பார்த்தோம். இந்தவாரம், இந்திய பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமியைப் பற்றிய தகவல்களை காண இருக்கிறோம்.

கூண்டு வண்டியில் இருந்து திரை விலகாதா என்று ஊரே வேடிக்கை பார்க்கும். அதிலும் பையன்களிடம் கூடுதல் குறுகுறுப்பும் ஆர்வமும் கொப்பளிக்கும். மூச்சிரைக்க ஓடிப்போய் முன்னால் நின்று கொண்டு, வண்டியில் இருந்து இறங்கும் பெண்ணைக் காணாததைக் கண்டதைப் போல பார்ப்பார்கள்.

உண்மைதான், அதற்கு முன் அந்த ஊர் அப்படியொரு காட்சியைக் கண்டதில்லை. ஆண்கள் படிப்பதே அரிதாக இருந்த போது பெண்கள் படிப்பதை எல்லாம் கனவில் கூட நினைக்க முடியாத காலம் அது.

‘படிப்பது பெண்களுக்குத் தேவையில்லாதது’ என்ற எண்ணம் மக்களின் பொதுப்புத்தியில் ஊறிப்போய் இருந்தது. அதற்கும் ஒரு படி மேலாக போய், ‘பெண் படிப்பதே தவறு அல்லது தவறு செய்ய நினைக்கும் பெண்தான் படிப்பாள்’ என்று ஏகத்திற்கும் தப்பெண்ணங்களில் சமூகம் திளைத்திருந்தது.

‘ஏழெட்டு வயதிலேயே திருமணம் செய்து வைத்து விட வேண்டும்; பருவம் அடைந்தவுடன் அவர்கள் பிள்ளை பெறும் எந்திரமாகிட வேண்டும்; அதற்குதான் பெண் பிறவி’ என்பதே நடைமுறையில் இருந்தது.

அப்படிப்பட்ட காலத்தில் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, பள்ளிக்கூடம் போனார் சிறுமி முத்துலட்சுமி. நாள்தோறும் அவர் பள்ளிக்குச் செல்வதை அந்த ஊரே வெறித்துப் பார்த்தது. அதனால்தான் கூண்டு வண்டியில் திரை கட்டி மூடிக்கொண்டு பள்ளிக்குச் சென்றார்.

அதைப் பார்த்த பிறகு கோபம் இன்னும் அதிகமாகி அக்கம்பக்கத்தவர்கள் கரித்துக்கொட்டினார்கள். வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசினார்கள். அவரது தாய் சந்திரம்மாவின் சாதியை வம்புக்கு இழுத்தார்கள். அப்பா நாராயணசாமி அய்யரையும் அடாத வார்த்தைகளால் அர்ச்சித்தார்கள்.

இதில் இருந்து தப்பிக்க பல நாட்கள், நடமாட்டம் குறைந்த சந்துகளில் புகுந்து பள்ளிக்குச் செல்ல வேண்டி இருந்தது.

இந்தியா முழுக்க வெள்ளைக்காரன் ஆண்டு கொண்டிருந்த போது புதுக்கோட்டை தனி சமஸ்தானமாக திகழ்ந்தது. அங்கிருந்த மன்னர் கல்லூரியில் முதல்வர், அரசருக்கு ஆலோசகர் போன்ற பதவிகளை வகித்தவர் நாராயணசாமி அய்யர். அரசாங்கத்தில் செல்வாக்கும் மரியாதையும் பெற்றிருந்தார்.

இவரின் முதல் மனைவிக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளும் இறந்துவிட, இரண்டாம் தாரமாக சந்திரம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவரோ, பெண்களைக் கோவில்களில் பொட்டுக்கட்டி தேவதாசிகளாக்கிடும் சமூகத்தைச் சேர்ந்தவர். அந்தப் பெண்களை எல்லாம் போகப்பொருளாக மட்டுமே அன்றைக்கு ஆண்கள் பயன்படுத்தி வந்தனர்.

விருப்பப்பட்ட நேரத்தில் சேர்ந்திருப்பார்களே தவிர, திருமணம் பந்தம் ஏற்படுத்தி முறையான அங்கீகாரம் தரமாட்டார்கள். அப்படியொரு சூழலில் நாராயணசாமி அய்யர் செய்த திருமணம் அவரது சமூகத்தில் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொடுத்தது. ஊரில் பெரிய மனிதராக இருந்தாலும் உறவுகள் அவரை விலக்கி வைத்தன. கிட்டதட்ட சாதி விலக்கம் செய்யப்பட்டார்.

நாராயணசாமிக்கும் சந்திரம்மாவுக்கும் மூத்த மகளாக 1886, ஆகஸ்டு 30-ந் தேதி பிறந்தவர் முத்து லட்சுமி. அப்போது சந்திரம்மாவின் வயது 16. முத்து லட்சுமியுடன் பிறந்தவர்கள் மொத்தம் 7 பேர். அவர்களில் நால்வர் இறந்துவிட்டனர்.

அழகைப் பராமரிப்பதாக நினைத்தோ, அறியாமையாலோ பெற்ற பிள்ளைக்கு ஆள் வைத்து பால் கொடுக்கும் பழக்கம் அப்போது கொஞ்சம் வசதியான குடும்பங்களில் இருந்தது. அப்படிதான் முத்துலட்சுமிக்கும் ஒரு செவிலித்தாய் நியமிக்கப்பட்டார். பெற்றது சந்திரம்மா. பால் கொடுத்தது அந்த செவிலித்தாய்தான்.

முத்துலட்சுமியை நான்கு வயதிலேயே திண்ணைப் பள்ளி ஒன்றில் சேர்த்துவிட்டார் அவரது அப்பா. முதல் நாளில், ‘பால் கணக்கும், சலவைக்குத் துணி போடுகிற கணக்கும் எழுதுகிற அளவுக்கு மகளுக்குக் கற்றுக்கொடுத்தால் போதும்’ என்று ஆசிரியரிடம் சொல்லிவிட்டு வந்தார். பெண்ணுக்கு அவை தெரிந்தாலே அன்றைக்கு பெரிய விஷயம்.

கடிகாரங்கள் புழக்கத்திற்கு வராத காலம் அது. காலையில் சூரியன் உதயமாவதற்கு முன்பே திண்ணைப் பள்ளிக்கூடத்திற்கு வந்துவிட வேண்டும். சூரியன் உச்சிக்கு வருவதற்கு முன்பாக உணவு இடைவேளை விடுவார்கள். பிறகு பகல் பொழுதில் ஒரு இடைவேளை. சூரியன் மறையத் தொடங்கும் நேரத்தில் வீட்டுக்குப் புறப்படலாம்.

சூரியன் இருக்கும் இடத்தை வைத்தோ, மணல் கடிகாரத்தை வைத்தோ நேரத்தைக் கணக்கிடுவார்கள். அமாவாசை, பவுர்ணமி மற்றும் இந்து பண்டிகை நாட்களில் மட்டுமே திண்ணைப் பள்ளிக் கூடத்திற்கு விடுமுறை நாட்கள். ஆசிரியர் ஒரு மண் மேடையில் அமர்ந்து கொண்டு கூரான எழுத்தாணிகளை வைத்து, பனை ஓலைகளில் எழுதி காண்பித்து மாணவர்களுக்கு கற்பிப்பார். அவர்கள் மணலில் கை வைத்து அந்த எழுத்துகளை எழுதி பழக வேண்டும்.

முத்துலட்சுமி ஆசையோடு கற்றுக்கொண்டார். அவரது ஆர்வத்தைப் பார்த்த ஆசிரியர் தமிழ், கணக்கு இவற்றோடு ஆங்கிலத்தையும் பயிற்றுவித்தார். அப்போது வரை பெண்கள் ஆங்கிலம் கற்பது வழக்கம் இல்லை. ஆண்களுக்கு மட்டுமே சொல்லிக் கொடுத்தார்கள்.

‘முதல் பாரம்’ எனப்பட்ட ஆறாம் வகுப்பில் முத்துலட்சுமி தேர்ச்சி பெற்ற பிறகுதான் அவர் ஆங்கிலம் படித்த செய்தி தந்தை நாராயணசாமி அய்யருக்குத் தெரியவந்தது. கல்வியில் மகள் அடைந்த மேன்மை அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அந்த நேரத்தில் புதுக்கோட்டை திவானுக்கும் நாராயணசாமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கல்லூரி முதல்வர் பதவியில் இருந்து வெளியேறினார். முத்துலட்சுமியின் படிப்பும் நிறுத்தப்பட்டது. ஆனால் திண்ணைப் பள்ளிக்கூடத்து ஆசிரியர் பாலையா, வீட்டுக்கே வந்து முத்து லட்சுமியின் அம்மாவிடம் பேசினார். ‘நன்றாக படிக்கக்கூடிய நல்ல மாணவி முத்துலட்சுமி. அவள் படித்து சிறந்து விளங்குவாள்’ என்று சொல்லி பள்ளிக்கு அனுப்ப வற்புறுத்தினார். இதனால் முத்துலட்சுமி மீண்டும் பள்ளி சென்றார். அதையும் 13 வயது வரையே தொடர முடிந்தது. பெரியவளானதும் அவரை பள்ளிக்கு அனுப்ப அம்மா மறுத்துவிட்டார்.

ஆரம்பம் முதலே முத்துலட்சுமியைப் படிக்க வைப்பதற்கு அவரது அம்மாவே பெரும் எதிர்ப்பாளராக இருந்தார். அக்கால வழக்கப்படி ‘சீக்கிரம் பெண்ணை ஒருத்தன் கையில் பிடித்துக் கொடுத்து விட வேண்டும்’ என்பதே அவரது விருப்பமாக இருந்தது.

நன்றாக படித்த மகளை தொடர்ந்து படிக்க வைக்கலாம் என்பது அவரது அப்பாவின் எண்ணம். ஆனாலும் தாயை மீறி அதன் பிறகு முத்து லட்சுமியால் பள்ளிக்கு போகமுடியவில்லை. மாதம் இரண்டு ரூபாய் சம்பளம் கொடுத்து வீட்டுக்கே ஆசிரியரை வரவழைத்தார் நாராயணசாமி. அப்படி ஓராண்டு நான்காவது பாரம் படித்த முத்துலட்சுமிக்கு ஐந்தாவது மற்றும் ஆறாவது பாரத்தை அப்பா நாராயணசாமியே கற்றுக்கொடுத்தார்.

1902-ல் முத்துலட்சுமி மெட்ரிகுலேசன் தேர்வு எழுதினார். அப்போதெல்லாம் அது மிகக்கடினமான தேர்வு. மொத்தம் 100 பேர் எழுதிய தேர்வில் 10 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றார்கள். அதில் ஒரே பெண்ணாக முத்துலட்சுமியும் தேறியிருந்தார். அதுவரை ஏசியவர்கள் எல்லாம் இப்போது அவரைப்பற்றி பேசினார்கள். வாழ்த்துக் கடிதங்கள் குவிந்தன. தொடக்கப்பள்ளி ஒன்றில் இருந்து ஆசிரியர் வேலைக்கான அழைப்பும் வந்தது. தந்தைக்கு பெருமை தாளவில்லை. தாயோ கலக்கமடைந்தாள். ‘எல்லாம் இதோடு போதும்; கல்யாணம் செய்து வைத்துவிடலாம்’ என்றார்.

அந்த நேரத்தில் சென்னையில் இருந்து நாராயண சாமி அய்யருக்கு வந்த பத்திரிகை ஒன்றில் இருந்த புகைப்படம் முத்துலட்சுமியின் மனதிற்குள் புதிய கனவை விதைத்தது. அந்தப் படத்தில் கமலா, கிருஷ்ணம்மா எனும் சகோதரிகள் பட்டம் வாங்கிய அங்கியுடன் காட்சி அளித்தனர். தெலுங்கு பிராமண சமூகத்தைச் சேர்ந்த அவர்கள் இருவரும், கிறித்துவ மதத்திற்கு மாறிய செய்தியும் அதில் பதிவாகி இருந்தது. அதைப் பார்த்தவுடன் தானும் பட்டம் வாங்கி விட வேண்டும் என்ற ஆசை முத்துலட்சுமியின் மனதிற்குள் ஒரே நாளில் மரமாகி வளர்ந்து நின்றது. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலோ, பாளையங்கோட்டை கல்லூரியிலோ தம்மைச் சேர்த்து விடுமாறு தந்தையிடம் கெஞ்சினார்.

அந்நாட்களில் பெண்களுக்கு என்று விடுதிகள் இல்லை. வெளியூரில் படிக்க வைத்தால், தனியாக வீடு பிடித்து தங்க வைக்க வேண்டும். நாராயண சாமிக்கு குடும்பத்தை நகர்த்தும் அளவுக்கே ஓய்வூதிய தொகை வந்தது. அதனால் புதுக்கோட்டை ஆண்கள் கல்லூரியில் தன் மகள் படிக்க இடம் கேட்டு விண்ணப்பித்தார். கல்லூரி நிர்வாகம் அந்த விண்ணப்பத்தை நிராகரித்தது.

புதுக்கோட்டை மன்னரிடம் சென்று உதவி கேட்டார். ‘மெட்ரிகுலேசனில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும், 3 மாதங்களுக்கு பின்பற்றி பரிசோதித்து பார்க்கலாம்’ என்று மன்னர் ஆணையிட்டார்.

புதுக்கோட்டை ஆண்கள் கல்லூரியில் முதன் முறையாக ஒரு பெண்ணான முத்துலட்சுமி நுழைந்தார். அங்கே அவருக்கு கட்டுப்பாடுகள் ஏராளம். மாணவர்களைப் போல பலகை தராமல் தரையில் தனியாக அமர வைக்கப்பட்டார். மாணவர்கள் அவரைப் பார்க்காமல் இருக்க திரை போட்டார்கள். மாணவர்களோடு எதிலும் சேரக்கூடாது என்பதால் வகுப்பு இல்லாத நேரத்தில் உட்காருவதற்காக தனி அறை ஒதுக்கினார்கள். இத்தனைக்குப் பிறகும் சொல்லம்புகள் கன்னாபின்னாவென்று பறந்து வந்தன.

(ரகசியம் தொடரும்)

நின்று போன 10 வயது திருமணம்!

அக்கால வழக்கப்படி முத்துலட்சுமிக்கு 10 வயதாக இருக்கும் போது, அவரைவிட ஒரு வயது குறைவான உறவினருடன் திருமணம் செய்து வைக்க அவரது தாய் சந்திரம்மா முடிவு செய்தார். எல்லாச் சிறுமிகளைப் போல திருமணம் பற்றி ஏதும் அறியாதவராகவே முத்துலட்சுமியும் இருந்தார். அப்போது சந்திரம்மாவின் தங்கை காச நோயால் இறக்கும் நிலையில் இருந்ததால் நல்ல வேளையாக திருமணம் நின்று போனது. அதன் பிறகு படிப்பில் ஏற்பட்ட ஆர்வத்தாலும், தந்தையின் ஆதரவாலும் திருமணத்தை முத்துலட்சுமி தவிர்த்து வந்தார்.

ஊர்ப்பாசம்!

முத்துலட்சுமிக்கு தமது சொந்த ஊரான புதுக்கோட்டை மீது தனி பாசம் உண்டு. ஊரைப் பற்றி நினைத்தாலே தமக்குப் பெருமிதம் உண்டாவதாக அடிக்கடி சொல்வார். தம்முடைய எண்ணங்கள், உயர்வுகள் எல்லாவற்றுக்கும் விதை போட்ட புண்ணிய பூமி என்று வர்ணிப்பார். இதைப் போலவே சிறு குழந்தைகளிடமும் முத்துலட்சுமி அளவு கடந்த நேசம் காட்டுவார்.

Next Story