பொறியியல் மாணவர்கள் வேலைவாய்ப்புப் பெறுவது சுலபம்


பொறியியல் மாணவர்கள் வேலைவாய்ப்புப் பெறுவது சுலபம்
x
தினத்தந்தி 19 Aug 2017 10:00 AM GMT (Updated: 19 Aug 2017 8:15 AM GMT)

பொறியியல் படிப்பில் வேலைவாய்ப்பு குறைவு என சமீப காலமாக கருத்து நிலவுகிறது. அது முற்றிலும் தவறான கருத்து.

பொறியியல் படிப்பில் வேலைவாய்ப்பு குறைவு என சமீப காலமாக கருத்து நிலவுகிறது. அது முற்றிலும் தவறான கருத்து.

அதிகமான வேலைவாய்ப்பு உள்ள துறை பொறியியல் துறைதான். ஏறத்தாழ 70 சதவீதம் தொழில் நிறுவனங்கள் பொறியியல் துறை சார்ந்தவை.

பொறியியல் கல்வி பயிலும் மாணவர் களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாத காரணத்தால் வேலைவாய்ப்புக்கான திறன்களைப் பெறவில்லை. வேலைவாய்ப்பு என்று வரும்போது, மதிப்பெண்கள் முக்கியமா? திறன்கள் முக்கியமா? என்று எடுத்துக்கொண்டால் திறன்கள்தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அனைத்து நிறுவனங்களும் புதிதாக வேலைக்குச் சேரும் பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்க விரும்புவது இல்லை. எந்த பட்டதாரி பயிற்சியுடன் வருகிறாரோ அவரை விரும்பித் தேர்ந்தெடுக்கிறார்கள்.

அவசரமான போட்டி நிறைந்த உலகில் நிறுவனங்களும் தங்களின் வளர்ச்சியை விரைவில் அடைய விரும்புகிறார்கள். இதை பொறியியல் கல்வி பயிலும் மாணவர்கள் புரிந்து கொண்டால் வேலைவாய்ப்பு மிகவும் சுலபம்.

பொறியியல் படிப்பு முடித்த கையுடன் வேலைவாய்ப்புப் பெறவேண்டும் என்றால் மாணவர்கள் முதலாமாண்டு முதலே தங்களின் திறன்களை மேம்படுத்த முயற்சி எடுக்க வேண்டும். நீங்கள் எந்தத் துறையை தேர்ந்தெடுத்து படிக்கிறீர்களோ, அந்தத் துறையில் உள்ள பாடங்களில் எது இன்றைய காலகட்டத்தில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருகிறது என்று தெரிந்து கொண்டு அந்தப் பாடத்தில் அடிப்படையான விஷயங்கள் முதல் நவீன தொழில்நுட்பம் வரை தெரிந்துகொள்ள வேண்டும்.

இரண்டாமாண்டு முதலே இந்த பாடம் ரீதியான ‘மினி புராஜக்ட்’ செய்ய வேண்டும். அது சம்பந்தமான ஆய்வு கட்டுரைகளை கல்லூரிகளில் நடைபெறும் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு சமர்ப்பிக்க வேண்டும். இறுதி ஆண்டு வரும்போது அதை பிரதான மெயின் புராஜக்டாக உருவாக்கி சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்தத் துறை ரீதியான கண்டுபிடிப்புகளை உருவாக்கும்போது மாணவர்களின் திறன் வெளிப்படுகிறது.

அதுமட்டுமல்ல, அந்தத் துறை சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் புரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது. கல்லூரியில் மாணவர்கள் படிக்கும் காலத்தில் இருக்கும் சூழ்நிலையும், வேலைபார்க்கும் போது நிறுவனங் களில் இருக்கும் சூழ்நிலையும் முற்றிலும் மாறுபட்டு இருக்கும்.

எனவே மாணவர்கள் இதை தெரிந்து கொள்ள ஒவ்வொரு வருடமும் தங்களது செமஸ்டர் தேர்வு முடிந்தவுடன் நிறுவனங் களுக்கு சென்று ‘இன்டர்ன்ஷிப்’ எனப்படும் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பயிற்சி எடுக்கும்போது நிறுவனங்களை பற்றியும், பணியாளர்களின் திறன்களை பற்றியும் மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது.

இதை ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் கடைப்பிடிக்கும் போது நிறுவனங்களை பற்றிய முழுமையான அறிவை பெற்று விடுவார்கள். அதுமட்டுமல்ல, கல்லூரி படிப்பின் போதே வேலைவாய்ப்புக்கு ஏற்ற திறன்களை வளர்த்துக் கொண்டால்தான் சாதாரண மாணவர்களும் சாதனை மாணவர் களாக உருவாக முடியும் என்பதை பெற்றோரும், மாணவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

படிக்கும் போதே ஆங்கில உரையாடல் திறன், ஆளுமை பண்பு, பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறன், குழு கலந்துரையாடல் உள்ளிட்ட திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் மதிப்பெண்களைவிட திறன்களை வளர்த்துக் கொண்டால்தான் வேலை பெற முடியும் என்ற மாற்றம் உண்மையிலே வரவேற்கத்தக்கது. எல்லா மாணவர்களிடமும் திறன்களும், திறமைகளும் உள்ளன. அதை வெளிக்கொண்டு வரும் பொறுப்பு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உள்ளது.

இஸ்ரேல் போன்ற நாடுகளில் கல்வியில் திறன்களுக்கும், திறமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்ததால்தான் மிகப் பெரிய நோபல் பரிசு பெற்றவர்களும் ஆராய்ச்சியாளர்களும் அந்த நாட்டைச் சார்ந்தவர்களாக உள்ளார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

நம் நாடும் வளர்ச்சிப் பாதையை அடைய வேண்டும் என்றால் திறன் உடைய பட்டதாரிகளால்தான் முடியும் என்ற ஆரோக்கியமான நிலை உருவாவதை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும்.

Next Story