மூளையின் திறனை அதிகரிக்க வழிகாட்டும் விஞ்ஞானிகள்


மூளையின் திறனை அதிகரிக்க வழிகாட்டும் விஞ்ஞானிகள்
x
தினத்தந்தி 19 Aug 2017 12:00 PM GMT (Updated: 19 Aug 2017 7:57 AM GMT)

நமது மூளையின் திறனை அதிகரிப்பது எப்படி என்று விஞ்ஞானிகள் வழிகாட்டுகின்றனர்.

மது மூளையின் திறனை அதிகரிப்பது எப்படி என்று விஞ்ஞானிகள் வழிகாட்டுகின்றனர்.

வழக்கமாக, மூளைக்குப் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகள், மூளையின் நலத்துக்கு அளிப்பதாகக் கருதப்படும் அளவைவிட குறைவான பலன்களையே அளிக்கக்கூடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இளம் வயதிலேயே மூளையைத் தூண்டும் செயல்களில் ஈடுபடுவோரின் மூளை அவர்களின் வயதான காலத்தில் நன்றாகச் செயல்படுமாம்.

மூளையின் செயல்பாடுகளைத் தூண்டும், இசைக் கருவிகளைக் கற்றல், பூத்தையல் வடிவமைப்பு அல்லது தோட்டக் கலைப் பணி போன்ற செயல்களில் ஈடுபடலாம் என்று மூளை நலத்துக்கான உலகளாவிய கவுன்சிலின் அறிக்கை பரிந்துரைக்கிறது.

எவ்வளவு இளம் வயதில் ஒருவர் இந்தச் செயல்களில் ஈடுபடத் தொடங்குகிறாரோ, அந்த அளவுக்கு முதுமையில் அவர்களின் மூளை நன்றாகச் செயல்படும் என்று கூறப்படுகிறது.

புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள, எந்த வயதும் தாமதமானதல்ல என்று ‘ஏஜ் யூ.கே.’ என்ற அமைப்பு கூறுகிறது.

சர்வதேச அறிவியல் நிபுணர்கள், சுகாதாரத் துறையினர் மற்றும் அரசாங்கங்களின் கொள்கை முடிவுகளை வகுப்போர் ஆகியோரை உள்ளடக்கிய அந்த அமைப்பு, மூளைத் திறனைத் தூண்டுவதற்கும், அறிவாற்றல் குறைவதைத் தடுக்கவும் சிறந்த வழிமுறைகளைக் கொண்டு அந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது.

மூளைத் திறனை அதிகரிக்க, புதிர்கள் மற்றும் மூளை விளையாட்டுகள் உள்ளிட்டவற்றை இணையதளத்தில் விளையாடுவது மிகவும் முக்கியமானது என்று பலரும் நம்பினாலும், அவற்றால் உண்டாகும் பலன்கள் மிகவும் சாதாரணமாக அல்லது பலன்களே இல்லாமல் உள்ளன.

“மூளைத்திறன் விளையாட்டுகளை மனிதர்கள் விளையாடினால், அந்த விளையாட்டில் அவர்கள் முன்னேறலாம். ஆனால் அந்த விளையாட்டில் உண்டாகும் முன்னேற்றத்தால் அவர்களின் தினசரி அறிவுசார் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டதற்கான உறுதியான முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

உதாரணமாக, சுடோகு விளையாடுவதால் ஒருவரின் நிதி நிர்வாகத் திறன் வளர்ந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை, நாம் சிந்தனை செய்யும் முறைகளை கேள்விக்கு உள்ளாக்கும் புதிய செயல்களைச் செய்யப் பரிந்துரைப்பதுடன், சமூகத்தோடு இணைந்து செயல்பட்டு, ஆரோக்கியமான வாழ்க்கைமுறைகளைப் பின்பற்றவும் சொல்கிறது.

உதாரணமாக, தற்காப்புப் பயிற்சி செய்வது, உங்கள் முந்தைய தலைமுறைகள் பற்றி ஆய்வு செய்வது, புகைப்படம் எடுக்கும் பயிற்சி, சமையல் செய்வது, தோட்டக் கலை, புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வது, படைப்புத்திறனுடன் எழுதுவது, கலைப் பணிகளில் ஈடுபடுவது, தன்னார்வத் தொண்டுப் பணிகளில் ஈடுபடுவது ஆகியவை பலன் கொடுக்குமாம்.

மூளை நலத்துக்கான உலகளாவிய கவுன்சில் அமைப்பை நிறுவ உதவிய ஏஜ் யூ.கே.யின் தலைமை விஞ்ஞானி ஜேம்ஸ் குட்வின், மூளைத்திறன் குறைவதைத் தடுக்க முடியும் என்கிறார்.

“உங்களுக்குப் புதிதாக உள்ள, கவனத்தைக் குவிக்க வேண்டிய, மூளையின் நலனுக்குப் பலனளிக்கக்கூடிய பல செயல்களை இன்றே நாம் தொடங்கலாம்” என்று கூறும் குட்வின், “நீங்கள் தொடர்ந்து உங்கள் அன்றாட வாழ்வில் செய்யக்கூடிய, குழந்தைகளுடன் விளையாடுவது, தோட்டத்தைப் பராமரிப்பது போன்றவையாகவும் அந்தச் செயல்கள் இருக்கலாம்” என்று அவர் கூறுகிறார்.

“புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள கால தாமதம் என்று எதுவும் இல்லை என்றாலும், இந்த அறிக்கை கூறும் முக்கியமான செய்தி, உங்களின் மூளையின் நலனைப் பாதுகாப்பதற்கு உங்கள் கடைசிக் காலம் வரை காத்திருக்க வேண்டியதில்லை என்பதுதான்” என்கிறார், ஜேம்ஸ் குட்வின்.

Next Story