காய்கறியில் கலைநயம்!


காய்கறியில் கலைநயம்!
x
தினத்தந்தி 19 Aug 2017 11:00 AM GMT (Updated: 19 Aug 2017 8:41 AM GMT)

காய்கறி, கனிகளில் உருவங்களைச் செதுக்கும் ‘வெஜிடபிள் கார்விங்’ கலையில் தனி உயரத்தை எட்டியிருக்கிறார், தேனி இளைஞர் இளஞ்செழியன்.

காய்கறி, கனிகளில் உருவங்களைச் செதுக்கும் ‘வெஜிடபிள் கார்விங்’ கலையில் தனி உயரத்தை எட்டியிருக்கிறார், தேனி இளைஞர் இளஞ்செழியன். புதிய மையக்கருத்துகள் அடிப்படையில் காய், கனிகளை அமைப்பதிலும், அவற்றில் விரும்பிய உருவங் களைச் செதுக்குவதிலும் இளஞ்செழியன் திறமைசாலியாய்த் திகழ்கிறார்.

இவரது சமீபத்திய சாதனை- தர்ப்பூசணியில் அப்துல் கலாம் உருவத்தையும், எம்.ஜி.ஆரின் நூறுவித தோற்றத்தையும் வடித்திருப்பது.

கையால் மட்டுமின்றி, வாயாலும் கத்தியைப் பிடித்து காய்கறிகளில் அழகழகான சிற்பங்களைச் செதுக்கிவிடுகிறார், இளஞ்செழியன்.

அவருடனான சந்திப்பில் இருந்து...

காய்கறிக் கலைக்கு நீங்கள் வந்தது எப்படி?


நான் சமையல்கலை தொழில்நுட்பம் பயின்றவன். அது சார்ந்ததுதான் இந்த ‘வெஜிடபிள் கார்விங்’. நம்மூரில் இந்தக் கலை இன்னும் முழு வளர்ச்சி பெறவில்லை என்றாலும், வெளிநாடுகளில் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நட்சத்திர ஓட்டல்களில் உணவுகளை சுவையாகச் சமைப்பதுடன், அவற்றை அழகாகக் காட்சிப்படுத்துவதும் முக்கியம். அதை நான் மலேசியாவில் உள்ள ஓர் ஓட்டலில் பணிபுரிந்தபோது அறிந்தேன். புதுமையான இந்த காய்கறிக் கலையில் எனது சொந்த ஆர்வத்தாலும், புதுப்புது முயற்சிகளாலும் நிறையக் கற்றுக்கொண்டேன்.

நீங்கள் தர்ப்பூசணியில் கலாம் உருவத்தைப் படைத்தது பற்றிக் கூறுங்கள்...

ராமேசுவரம் அருகே பேய்க்கரும்பில் ‘பாரத ரத்னா’ அப்துல் கலாம் நினைவகத்தை சமீபத்தில் பிரதமர் மோடி திறந்துவைத்தார். அதையொட்டி, கலாம் பவுண்டேஷன் மற்றும் அசிஸ்ட் வேல்டு ரெக்கார்டு அமைப்புகளின் அழைப்பு மற்றும் உதவியின் பேரில் அங்கு சென்று தர்ப்பூசணிகளில் கலாம் உருவத்தை உருவாக்கி காட்சிக்கு வைத்தேன்.

அதற்குக் கிடைத்த வரவேற்பு எப்படி?

மிக நல்ல வரவேற்புக் கிடைத்தது. கலாமின் அண்ணன் முகமது முத்துமீரா லெப்பை மரைக்காயர், பேரன் சலீம் உள்ளிட்ட கலாம் குடும்பத்தினரும், நினைவகத் திறப்புவிழா நிகழ்ச்சிக்கு வந்த அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பல்துறையினரும் தர்ப்பூசணியில் வடிக்கப்பட்ட கலாம் உருவத்தை வியந்து பாராட்டினர். அதிலும் பொதுமக்கள் பலரும், நாங்கள் இதுவரை கலாமை பல்வேறு வித புகைப்படங்கள், வீடியோக்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் கலாமை கனியில் பார்ப்பது இதுவே முதல்முறை என்று கூறி, அதனுடன் படமும் எடுத்துக்கொண்டனர்.

கலாம் உருவத்தை உருவாக்கியது தனிப்பட்ட முறையில் உங்களுக்கு எம்மாதிரியான திருப்தியைத் தந்தது?


உண்மையில் கலாம் ஜனாதிபதியாக இருக்கும்போதே அவரது உருவத்தை பூசணியில் உருவாக்கியிருக்கிறேன். அந்தத் தொடர்பு இன்றும் நீடிப்பதாகவே நினைக்கிறேன். இளைஞர்களின் எழுச்சி நாயகர், இந்தியா உருவாக்கிய இணையற்ற விஞ்ஞானி, கலாம். ‘தூங்கும்போது காண்பது கனவல்ல, உன்னைத் தூங்கவிடாமல் செய்வதுதான் கனவு’ என்று என்னைப் போன்ற எண்ணற்ற இளைஞர்களைப் பார்த்துத்தான் கலாம் சொன்னார். அம்மாமனிதரின் உருவத்தை தர்ப்பூசணியில் படைத்தது, பெருமையும் நிறைவும் தந்த அனுபவம்.

அதற்கடுத்து...?

கலாம் நினைவகத் திறப்புவிழாவைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது நூறு வித தோற்றங்களை தர்ப்பூசணிகளில் வடித்தேன்.

அந்த நிகழ்ச்சி எங்கு, எப்போது நடைபெற்றது?


கடந்த மாத இறுதியில், திருவண்ணாமலையில் நடைபெற்றது. அதில் தோட்டக்கலைத் துறையின் ஆதரவில் நான் எம்.ஜி.ஆர். உருவங்களை உருவாக்கினேன். அரசு விழா என்பதாலும், ஒவ்வொரு உருவத்துக்கும் தெளிவாக வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதாலும், நான் சுமார் 40 மணி நேரம் தொடர்ந்து, தூக்கம் மறந்து உழைத்தேன். மணிமாறன் என்ற ஒரு நண்பர் மட்டுமே துணைக்கு உதவியாக இருந்தார். ஆனால் கடைசியில் கிடைத்த பாராட்டு, எல்லா கஷ்டத்தையும் மறக்கச் செய்துவிட்டது. எனக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேடையில் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு. வடநேரேயும் புகழ்ந்து கூறினார்.



நீங்கள் புரிந்த வேறு சாதனைகள்...?

கிருஷ்ணகிரியில், ஐ.நா. உலக அமைதித் தூதுவராக உள்ள ஜைனத் துறவி வசந்த் குருதேவ்ஜியின் ஏற்பாட்டின் பேரில், உலக அமைதியை வலியுறுத்தும்விதமாக அந்தக் கருத்தின் அடிப்படையில் 10 ஆயிரம் கிலோ காய்கறி, கனிகளை தரையில் பிரம்மாண்டமாக அலங்கரித்திருந்தோம். ‘உலக அமைதி’ என்ற வார்த்தையையும் 50 மொழிகளில் பொறித்திருந்தோம். அது கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதிவானது. அந்த நிகழ்வுக்கு வந்திருந்த கின்னஸ் அலுவலர்களிடம், நான் கின்னஸ் ‘லோகோ’வையும் காய்கறியில் வடிவமைத்துப் பரிசளித்தபோது அவர்கள் பெரிதும் மகிழ்ந்தார்கள்.

காய்கறி கலைப் பயணத்தில் நீங்கள் பெருமைப்படும் விஷயம்?


காந்தி, காமராஜர், பாரதியார், தியாகராஜர், பென்னிகுயிக் என்று பல பெருமக்களையும் நான் காய்கறியில் உருவாக்கியிருக்கிறேன். எனது காய்கறிக் கலை முயற்சிகள், பேஸ்புக் மூலமாக உலகளவிலும் சென்று சேர்ந்திருக்கிறது. அதிலும், கடந்த 2015-ம் ஆண்டு தைவான் தலைநகர் தைபேயில் நடைபெற்ற சர்வதேச காய்கறிக் கலை நிகழ்ச்சியில் பங்கேற்கவும், நடுவராகச் செயல்படவும் அந்நாட்டு அரசு என்னை அழைத்திருந்தது. ஆஸ்திரேலியா, தாய்லாந்து, ஜப்பான் என்று பல்வேறு நாட்டினரும் பங்கேற்ற அந்நிகழ்வில், நான் வாயால் காய்கறி, கனிகளில் சிற்பங்களைச் செதுக்கியது பலரையும் வியப்புக்குள்ளாக்கியது. அது அந்நாட்டு ஊடகங்களிலும் வெளியானது மறக்கமுடியாதது. தைபே நகர மேயர் என்னைத் தனிப்பட்ட முறையில் பாராட்டியது, மகிழ்வளித்தது.

காய்கறி சிற்பக் கலை இன்று எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது?


நான் இதில் இறங்கிய காலத்துடன் ஒப்பிடும்போது, தற்போது இக்கலை வெகுவாக வளர்ந்திருக்கிறது. இதில் ஆர்வம் கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. திருமணம் போன்ற நிகழ்வுகளில் காய்கறிக் கலை அலங்காரம் செய்ய மக்கள் அதிக விருப்பம் காட்டுகிறார்கள். புதுமையான இக்கலை, மக்கள் மனதில் எளிதில் பதியும், கவரும். எனவே, பொதுநலன் சார்ந்த விஷயங்கள், விழிப்புணர்வுக் கருத்துகள் ஆகியவற்றை காய்கறிக் கலை மூலம் சொன்னால் மக்கள் மத்தியில் எளிதில் சென்று சேரும். நான் அரசு தோட்டக் கலைத்துறை சார்பிலான மலர், காய்கறிக் கண்காட்சிகளில் பங்கேற்றிருக்கிறேன். அந்த அனுபவத்தின் அடிப்படையில் இதைக் கூறுகிறேன்.

கல்வி கற்பித்தலிலும் இக்கலையைப் பயன்படுத்த முடியுமா?

நிச்சயமாக. இன்று படைப்புத்திறனை வளர்க்கும், சுயசிந்தனை சார்ந்த படிப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. காய்கறிக் கலை அதற்கு நிச்சயம் உதவும். அதனால்தான் நானே பள்ளி மாணவர் களுக்கு வாரம் இருமுறை இக்கலை வகுப்புகளை நடத்துகிறேன். தேனியில் உள்ள எனது, யாழ் காய்கறி சிற்பக்கலைக்கூடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்கிறேன். நமது கலை ஆர்வத்துக்குத் தீனி போடுவதுடன், ஒரு நியாயமான வருவாய் வாய்ப்பையும் ஏற்படுத்தக்கூடியது, காய்கறி சிற்பக் கலை.

உங்கள் முயற்சிகளில் உறுதுணையாக இருப்பவர்கள் யார்?

எனது குடும்பத்தினர், நண்பர்களும், பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் எனக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

காய்கறி சிற்பக் கலையில் உங்களின் லட்சியம் என்ன?


ஒடிசா மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் எப்படி அந்தக் கலையில் பெருமை பெற்றிருக்கிறாரே, அதேபோல இக்கலையைப் பிரபலப்படுத்தி, அதன் மூலம் நானும் உரிய அங்கீகாரம் பெற எண்ணுகிறேன். நான் முன்பே கூறியபடி, எந்த மையக் கருத்தின் அடிப்படையிலும் இக்கலையைப் படைக்கலாம். அதற்கு, அரசு, தனியாரின் ஆதரவு இருந்தால் போதும்!

இளஞ்செழியன் இன்னும் பல புதுமைகளைப் படைக்கட்டும்.

Next Story