கல்லூரி மாணவர்கள் மோதல்; மாநகர பஸ் கண்ணாடி உடைப்பு மாணவர் கைது


கல்லூரி மாணவர்கள் மோதல்; மாநகர பஸ் கண்ணாடி உடைப்பு மாணவர் கைது
x
தினத்தந்தி 19 Aug 2017 11:15 PM GMT (Updated: 19 Aug 2017 7:39 PM GMT)

வியாசர்பாடியில் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் மாநகர பஸ் கண்ணாடியை கல்வீசி உடைத்தனர். இது தொடர்பாக கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர்,

சென்னை பாரிமுனையில் இருந்து பெரியபாளையத்துக்கு நேற்று முன்தினம் மாலை மாநகர பஸ் (தடம் எண் 592 ஏ) சென்று கொண்டிருந்தது. அதில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் இருந்தனர்.

வியாசர்பாடி சர்மா நகர் நிறுத்தத்தில் பஸ் நின்று, பயணிகள் கீழே இறங்கி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மாநில கல்லூரி மாணவர்கள் சிலர், பஸ்சுக்குள் ஏறி, பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். இதனால் இரு கல்லூரி மாணவர்களும் மோதலில் ஈடுபட்டனர்.

கத்தியுடன் துரத்தி ஓட்டம்

அப்போது மாநகர பஸ் மீது கல்வீசி தாக்கியதில், பஸ்சின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடி நொறுங்கியது. இதையடுத்து சில மாணவர்கள் பஸ்சில் இருந்து கீழே இறங்கி ஓடினார்கள். அவர்களை துரத்தியபடி மற்றொரு தரப்பு மாணவர்கள் கையில் கத்தியுடன் சாலையில் ஓடினார் கள். இதை பார்த்த பொதுமக்கள் மற்றும் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்து ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் எம்.கே.பி.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அதற்குள் மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

மாணவர் கைது

இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கல்லூரி மாணவர்கள் கையில் கத்தியுடன் சாலையில் ஓடும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி மாநகர பஸ் கண்டக்டர் பாஸ்கர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு மாநகர பஸ் கண்ணாடி மீது கல் வீசியதாக பச்சையப்பன் கல்லூரி மாணவரான சோழவரத்தை அடுத்த திருநிலை கிராமத்தைச் சேர்ந்த ஜெயசூர்யா (வயது 19) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்கனவே உள்ள முன்விரோதம் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதுபற்றி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர். 

Next Story