அ.தி.மு.க. கோஷ்டி மோதலால் அரசு நிர்வாகம் செயலற்று கிடக்கிறது ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு


அ.தி.மு.க. கோஷ்டி மோதலால் அரசு நிர்வாகம் செயலற்று கிடக்கிறது ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 19 Aug 2017 11:45 PM GMT (Updated: 19 Aug 2017 7:43 PM GMT)

அ.தி.மு.க.வில் நிலவும் கோஷ்டி மோதலால் அரசு நிர்வாகம் செயலற்று கிடப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக மக்கள் சந்திப்பு பிரசாரம் நேற்று நடைபெற்றது.

இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பிரசாரத்தை தொடங்கி வைத்து துண்டு பிரசுரம் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசை கண்டித்து...

மத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை பொதுமக்களிடம் 10 ஆயிரம் குழுக்கள் அமைத்து பிரசாரம் செய்து வருகிறோம்.

ஜி.எஸ்.டி. வரிக்கு எதிராக, மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தக்கூடிய ஆர்.எஸ்.எஸ். வகுப்புவாதத்தை எதிர்த்து, ‘நீட்’ தேர்வுக்கு விதி விலக்கு பெற்றுத்தராத மத்திய அரசை கண்டித்து, ஒட்டு மொத்தமாக மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை எதிர்த்து இந்த பிரசார இயக்கம் நடைபெற்று வருகிறது.

செயலற்று கிடக்கிறது

மாநில அரசை பொறுத்தவரை ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர், சசிகலா, பன்னீர்செல்வம் என 2 கோஷ்டிகளாக பிளவுபட்ட அ.தி.மு.க. தற்போது மூன்றாக பிரிந்து இருக்கிறது. தமிழக மக்கள் பல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலுக்கு பலர் பலியாகி உள்ளனர் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க. வில் நிலவும் கோஷ்டி மோதலால் அரசு நிர்வாகம் செயலற்று கிடக்கிறது.

பதவியை கைப்பற்ற, ஆட்சியை கைப்பற்ற அ.தி.மு.க.வினர் 3 கோஷ்டிகளாக மோதிக்கொண்டு இருக்கிறார்கள். இதனை பயன்படுத்தி பா.ஜ.க. தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கிறது. 2 கோஷ்டிகள் இணைவதாக செய்தி வந்தது. தற்போது இழுபறி நீடிப்பதாக சொல்கிறார்கள். அனைத்திற்கும் பின்னால் பா.ஜ.க இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார். 

Next Story