உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 20 Aug 2017 10:30 AM GMT (Updated: 20 Aug 2017 7:34 AM GMT)

அவர் பலரும் அறிந்த பிரபலமாக வலம் வருபவர். எல்லா துறையை சார்ந்தவர் களையும் தனது நட்பு வளையத்திற்குள் வைத்திருப்பவர்.

வர் பலரும் அறிந்த பிரபலமாக வலம் வருபவர். எல்லா துறையை சார்ந்தவர் களையும் தனது நட்பு வளையத்திற்குள் வைத்திருப்பவர். அதனால் பெரும்புள்ளிகள் பலர் தங்கள் வேலைகளை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி விரைந்து முடிக்க அவரை நாடுவார்கள். காதும்காதும் வைத்தது போல் வேலைகளை கச்சிதமாக முடித்துக்கொடுக்கும் அவர், அதற்கு பெருந்தொகையை ‘சன்மானமாக’ பெற்றுக்கொள்வார்.

வாங்கும் பணத்தை அப்படியே வங்கியில் போட்டால் கணக்கு சொல்லவேண்டிய திருக்கும் என்பதால், அதனை சிற்சில லட்சங்களாகப் பிரித்து மஞ்சள் பையில் கட்டி, பழைய சாமான்கள் அடைந்து கிடக்கும் அறையில் போட்டுவைப்பார். எங்கேயாவது முதலீடு செய்யும்போதோ, நிலபுலன்கள் வாங்கும்போதோ கட்டுக்கட்டாக இருக்கும் அந்த பணம் கைமாறும்.

பழைய சாமான் அறையில் அவர் பைகளில் பணத்தை கட்டிவைத்திருப்பது அவரது மனைவிக்கு மட்டும் தெரியும். எத்தனை பைகளில், எத்தனை லட்சம் இருக்கிறது என்பதை சங்கேத குறியீடுகள் மூலம் தனது செல்போனில் பதிவு செய்துவைத்திருப்பார்.

அவரது நெருக்கமான நண்பர்களில் ஒருவர் பெரும் முதலீட்டில் புதிய நிறுவனம் ஒன்றை தொடங்க இருந்தார். அதில் பார்ட்னராக சேர விரும்பிய அவர், பழைய சாமான் அறைக்கு சென்று பணப்பைகளை ஒவ்வொன்றாக தேடத்தொடங்கினார். சிறிது நேரத்திலே அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மூன்று பைகளை காணவில்லை. அதில் 15 லட்சம் ரூபாய் இருந்தது.

அவர் இப்படி பணப்பைகளை சேர்க்க ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிவிட்டன. இதுவரை இப்படி எதுவும் காணாமல் போனதில்லை. அதிலும் ஒரு பை என்றால் மறதி என்று நினைத்து விட்டிருப்பார். மூன்று பைகள் காணாமல் போனதால் அதில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதாக அவருக்கு தெரிந்தது.

அவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும். மகன் வெளிநாட்டில் படித்துக்கொண்டிருக்கிறான். மகள், அருகில் உள்ள பெருநகரத்தில் பெண்கள் கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கிப் படிக்கிறாள்.

பணப்பை காணாமல் போனதும் அவர், தான் பணம் பதுக்கும் ரகசியம் மனைவிக்கு மட்டுமே தெரியும் என்பதால் அவள் மீது சந்தேகம்கொண்டார். ‘மனைவி பணத்தை ஏன் எடுத்தாள்? யாரிடம் கொடுத்தாள்? வேறுதொடர்புகள் ஏதேனும் இருக்குமோ?’ என்ற கோணத்தில் சிந்தித்து மிகுந்த மனக்குழப்பம் அடைந்தார். மனைவிதான் பைகளை எடுத்திருப்பார் என்ற முடிவுக்கும் அவரால் வர முடியவில்லை.

இறுதியில் அவர் தனது நண்பரான ஒரு போலீஸ் அதிகாரியிடம் ரகசியமாக துப்புதுலக்க கேட்டுக்கொண்டார். அவரது விசாரணையின் முடிவு அதிர்ச்சி ரகம். பணப்பைகளை திருடியது, அவரது மகளின் நண்பர்கள். அதற்கான வழிமுறைகளை வகுத்து, வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுத்தது மகளேதான்.

மகளுக்கு தேவையற்ற நட்புகளும், போதைப்பொருள் பழக்கமும் இருந்தது தந்தைக்கு தெரிந்திருக்கவில்லை. மாதந்தோறும் அவர் அனுப்பிக்கொடுத்த ஆயிரங்கள் அவளுக்கு போதாது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. எங்கேயிருந்து, எப்படி பணத்தை புரட்டுவது என்று யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில், தாயார் மூலமாக தந்தையின் பணப்பை ரகசியம் தெரியவந்திருக்கிறது.

பெற்றோர் இருவரும் ஊரில் இல்லாத நாள் பார்த்து, டூப்ளிகேட் சாவியை சக நண்பர்களிடம் கொடுத்து, பைகளை தூக்கிவரச் செய்திருக்கிறாள்!

பணத்தை கைப்பற்றுவது நடக்காத காரியம் என்பதால், மகளை அந்த நண்பர் களிடம் இருந்தும்- போதைப் பழக்கத்தில் இருந்தும் மீட்க அவர் அதிரடியான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்.

- உஷாரு வரும். 

Next Story