கார்-பஸ் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம் டிரைவர் கைது


கார்-பஸ் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம் டிரைவர் கைது
x
தினத்தந்தி 20 Aug 2017 11:00 PM GMT (Updated: 20 Aug 2017 7:53 PM GMT)

கார்-பஸ் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம் டிரைவர் கைது

வேடசந்தூர்,

நெல்லை மாவட்டம் புளியரையை சேர்ந்தவர் சரவணன். இவர் வனத்துறை அலுவலராக உள்ளார். இவருடைய மகன்கள் வேல்ராம் (வயது 18), அருண்லட்சுமணன் (18). இருவரும் இரட்டையர்கள் ஆவார்கள். இவர்கள் இருவரையும் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்ப்பதற்காக சரவணன் மற்றும் அவருடைய மனைவி உமாமகேஸ்வரி (37), சரவணனின் தாயார் வாசுகியம்மாள் (80) ஆகியோர் காரில் புறப்பட்டனர். காரை அதே பகுதியை சேர்ந்த பாட்சா (35) என்பவர் ஓட்டினார். திண்டுக்கல்-வேடசந்தூர் நான்கு வழிச்சாலையில் தாடிக்கொம்புபை அடுத்த சத்திரப்பட்டி பிரிவு அருகே சென்ற போது, அந்த வழியாக வந்த தனியார் பஸ் திடீரென சாலையின் குறுக்காக திரும்பியது. அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக பஸ் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. பஸ்சின் நடுப்பகுதியும் சேதமடைந்தது.

விபத்தில் சரவணன், அவருடைய மனைவி உமாமகேஸ்வரி, அருண்லட்சுமணன், வாசுகியம்மாள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மற்ற 2 பேரும் காயமின்றி தப்பினர். படுகாயமடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிவரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாலையூரை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story