அ.தி.மு.க. 2 அணிகள் இணைப்பில் பா. ஜனதா தலையீடு இல்லை மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் பேட்டி


அ.தி.மு.க. 2 அணிகள் இணைப்பில் பா. ஜனதா தலையீடு இல்லை மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் பேட்டி
x
தினத்தந்தி 22 Aug 2017 1:15 AM GMT (Updated: 21 Aug 2017 7:15 PM GMT)

அ.தி.மு.க.வின் 2 அணிகள் இணைப்பில் பா.ஜனதாவின் தலையீடு இல்லை என்று அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் கூறினார்.

ஆலந்தூர்,

தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

அமித்ஷா வருகை ஒத்திவைப்பு

பா.ஜனதாவின் தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழக வருகை தற்போது ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அவருடைய அலுவல் காரணமாக இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. அவர் மீண்டும் தமிழகம் வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

அமித்ஷா வருகையின்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் சந்திப்பு நடக்குமா என்பது குறித்து தெரியவில்லை. அ.தி.மு.க.வை பாரதீய ஜனதா கட்சி இயக்குவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுவதில் எந்த உண்மையும் இல்லை. அது முட்டாள் தனமானது.

தலையீடு இல்லை

தமிழகம் மட்டுமல்ல எந்த ஒரு மாநிலத்திலும் மாநில கட்சிகளின் உள் பிரச்சினைகளில் பா. ஜனதா தலையிட வேண்டிய அவசியமில்லை. அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவது என்பது அவர்களது தொண்டர்களின் விருப்பம். இதில் பா.ஜனதாவின் தலையீடு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story