சென்னை விமானநிலையத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.4½ கோடி தங்க கட்டிகள்


சென்னை விமானநிலையத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.4½ கோடி தங்க கட்டிகள்
x
தினத்தந்தி 22 Aug 2017 2:00 AM GMT (Updated: 21 Aug 2017 7:18 PM GMT)

சென்னை விமானநிலையத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.4 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள 16½ கிலோ தங்க கட்டிகள் மற்றும் நகைகளை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், இதுதொடர்பாக விமானநிலைய தற்காலிக ஊழியர்கள் 2 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், விமானநிலையத்தில் உள்நாட்டு முனையத்தில் விமானங்கள் நிறுத்தப்படும் நடைமேடை பகுதியில் நேற்று கேட்பாரற்று ஒரு மர்ம பை நீண்ட நேரமாக கிடந்தது. இதை கண்ட விமானநிலைய பாதுகாப்பு படையினர், அதில் வெடிகுண்டு இருக்குமோ என்று கருதினார்கள். இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் அங்கு வந்து மர்ம பையை சோதனை செய்தனர். அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரியவந்தது.

16½ கிலோ தங்க கட்டிகள்

பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் அந்த பையை பிரித்து பார்த்தபோது, அதில் தங்க கட்டிகள், நகைகள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, சுங்க இலாகா அதிகாரிகள் வந்து மர்ம பையில் இருந்த ரூ.4 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள 16½ கிலோ தங்க கட்டிகள் மற்றும் தங்க நகைகளை கைப்பற்றினார்கள்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சுங்க இலாகா அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

2 பேரை பிடித்து விசாரணை

அப்போது, அந்த தங்க கட்டிகள் மற்றும் தங்க நகைகள் இருந்த பை சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் கொண்டு வரப்பட்டது என்றும், அதை 2 பேர் டிராலியில் வைத்து உள்நாட்டு முனையம் பகுதிக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, பயணிகளின் உடைமைகளை டிராலியில் எடுத்துச் செல்லும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த தற்காலிக ஊழியர்களான குமார் (வயது 30), விஸ்கான் (32) ஆகிய இருவரை சுங்க இலாகா அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடத்தி வந்தது யார்?

சிங்கப்பூரில் இருந்து தங்க கட்டிகள், நகைகளை கடத்தி வந்து, டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டு செல்ல முயன்ற நபர் யார்? என்பது பற்றி சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விமானநிலையத்தில் ரூ.4 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள், நகைகள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story