புளியந்தோப்பில் ஆட்டோவில் மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது


புளியந்தோப்பில் ஆட்டோவில் மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது
x
தினத்தந்தி 22 Aug 2017 12:15 AM GMT (Updated: 21 Aug 2017 7:24 PM GMT)

புளியந்தோப்பில் ஆட்டோவில் மதுபாட்டில்கள் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர்,

சென்னை புளியந்தோப்பு ஆட்டுதொட்டி பகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை தடுத்து நிறுத்த முயன்றபோது, அது நிற்காமல் வேகமாக சென்றது.

இதனை தொடர்ந்து போலீசார் தங்களது வாகனங்களில் அந்த ஆட்டோவை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து சோதனை நடத்தினார்கள். அப்போது அதில் 325 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

3 பேர் கைது

ஆட்டோவில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஆனந்த்(வயது 26), கார்த்திக்(29) மற்றும் பாருலேக்கர்(30) என தெரியவந்தது.

டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு முன்பாகவே புளியந்தோப்பு மற்றும் ஓட்டேரி பகுதிகளில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்ததாகவும், அதற்காக மதுபாட்டில்களை கடத்தி சென்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஆட்டோவையும், 325 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

143 புதுப்பட சி.டி.க்கள்

* தேனாம்பேட்டை ராயலாநகரில் புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சங்கர்(22), அஜய்(25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

* ராயபுரத்தை சேர்ந்த காசி குடும்பத்துடன் கர்நாடக மாநிலத்திற்கு சுற்றுலா செல்வதற்காக தி.நகரில் உள்ள ஒரு கிளப் நிறுவனத்தில் ரூ.18 ஆயிரம் செலுத்தினார். ஆனால் சுற்றுலா சென்ற இடத்தில் அந்த கிளப் நிறுவனம் ரூ.34 ஆயிரம் வாங்கி மோசடி செய்து விட்டதாக அவர் பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

* தரமணியில் வேலையில்லா பட்டதாரி 2 உள்பட புதுப்படங்களின் சி.டி.க்களை விற்பனை செய்த குமார்(30) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 143 புதுப்பட சி.டி.க்களை பறிமுதல் செய்தனர்.

ஆந்திர பெண் பலி

* சி.ஐ.டி. நகரை சேர்ந்தவர் தொழிலாளி ஹரிகரன்(19) கடந்த 18-ந்தேதி வால்டாக்ஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது லாரி உரசியதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த அவர் நேற்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

* ஆந்திர மாநிலத்தை சேர்ந்த லட்சுமி வேளச்சேரியில் உள்ள தனது மகனை பார்ப்பதற்காக தனது கணவருடன் ரெயில் மூலம் சென்டிரல் வந்தார். அங்கு இருந்து பூங்கா நகர் பறக்கும் ரெயில் நிலையம் நோக்கி செல்லும் வழியில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது மின்சார ரெயில் மோதி லட்சுமி இறந்தார்.

* கொருக்குப்பேட்டை அண்ணாநகரில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட வேலு(49), சதீஷ்குமார்(29), கார்த்திக்(24), ஆனந்த்(39) உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story