கோபி அருகே பேராசிரியை கொலை: நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றேன் கைதான கணவர் வாக்குமூலம்


கோபி அருகே பேராசிரியை கொலை: நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றேன் கைதான கணவர் வாக்குமூலம்
x
தினத்தந்தி 21 Aug 2017 10:45 PM GMT (Updated: 21 Aug 2017 8:46 PM GMT)

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றேன் என்று கோபி அருகே நடந்த பேராசிரியை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவருடைய கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த குருமந்தூர் ஆயிபாளையத்தை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன் (வயது 28). கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மஞ்சுளா (25). இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியையாக வேலை செய்து வந்தார். 2 பேரும் காதலித்து கடந்த 2015–ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சதானாஸ்ரீ என்ற 8 மாத பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த 18–ந் தேதி சுடிதார் துப்பட்டாவால் வீட்டில் தூக்குப்போட்ட நிலையில் மஞ்சுளா பிணமாக கிடந்தார். இதுபற்றி அறிந்ததும் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கோபி போலீசார் இதை தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதுமட்டுமின்றி மஞ்சுளாவுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் இந்த சம்பவம் குறித்து கோபி ஆர்.டி.ஓ. கோவிந்தராஜ் மேல் விசாரணை நடத்தி வந்தார். இதற்கிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தை இறுக்கி மஞ்சுளா படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மஞ்சுளா தற்கொலை வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர்.

இந்த நிலையில் குருமந்தூர் கிராம நிர்வாக அதிகாரி ராம்ஜியிடம், மஞ்சுளாவை கொலை செய்ததாக அவருடைய கணவர் லிங்கேஸ்வரன், சரண் அடைந்தார். உடனே லிங்கேஸ்வரனை கோபி போலீசாரிடம் ராம்ஜி ஒப்படைத்தார்.

இதைத்தொடர்ந்து லிங்கேஸ்வரனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:–

நானும், என்னுடைய மனைவி மஞ்சுளாவும் எம்.இ. படித்து உள்ளோம். 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு 8 மாத பெண் குழந்தை உள்ளது. திருமணம் ஆன தொடக்கத்தில் இருந்தே மஞ்சுளாவின் நடவடிக்கையில் சந்தேகம் இருந்து வந்தது. இதன்காரணமாக நான் குடிப்பழக்கத்துக்கு அடிமையானேன். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்தாலும் போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் ‘ரிக்’ தொழில் செய்ய விரும்பினேன்.

இதற்காக என்னுடைய மனைவியின் நகைகளை அடமானம் வைத்து தொழில் தொடங்க எண்ணினேன். எனவே அடமானம் வைக்க மஞ்சுளாவின் நகைகளை அவரிடம் கேட்டேன். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததுடன், நகைகளை அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டார். மேலும் மஞ்சுளாவின் பெற்றோர் என்னை தரக்குறைவாக நடத்தினர். இதனால் மஞ்சுளா மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக கடந்த 18–ந் தேதி எங்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான், வீட்டில் இருந்த இஸ்திரி பெட்டியின் வயரால் அவருடைய கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர் கொலை செய்தது தெரியாமல் இருப்பதற்காக சுடிதார் துப்பட்டாவால் விட்டத்தில் மஞ்சுளா தற்கொலை செய்து கொண்டார் என அக்கம் பக்கத்தினரிடம் நாடகம் ஆடினேன். இதற்கு உடந்தையாக என்னுடைய தாய் கண்ணம்மாவும் இருந்தார். இதற்கிடையே மஞ்சுளா கொலை செய்யப்பட்டு உள்ளார் என்பதை போலீசார் கண்டுபிடித்து விட்டனர். இதனால் நான் கிராம நிர்வாக அதிகாரியிடம் சரண் அடைந்தேன்.

இவ்வாறு அவர் தன்னுடைய வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து லிங்கேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.


Next Story