பயிர்க் காப்பீட்டு தொகை அறிவித்ததில் குளறுபடி கலெக்டரிடம் விவசாயிகள் முறையீடு


பயிர்க் காப்பீட்டு தொகை அறிவித்ததில் குளறுபடி கலெக்டரிடம் விவசாயிகள் முறையீடு
x
தினத்தந்தி 21 Aug 2017 11:00 PM GMT (Updated: 21 Aug 2017 8:56 PM GMT)

முழுமையாக பாதித்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு இல்லை. பயிர்க் காப்பீட்டு தொகை அறிவித்ததில் குளறுபடி உள்ளதாக கலெக்டரிடம் விவசாயிகள் முறையிட்டனர். குறைதீர்க்கும் கூட்டம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். இதில் பூதலூர் தாலுகா வீரமரசன்பேட்டை பகுதியை சேர்ந்த விவசாயிகள் 25–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:–

எங்கள் பகுதியில் கடந்த 2016–17–ம் ஆண்டில் 130 எக்டேர் பரப்பளவில் சம்பா நெல் நடவு செய்தோம். காவிரியில் தொடர்ந்து தண்ணீர் வராததாலும், மழை பெய்யாததாலும் எங்களது நிலங்களில் நடவு செய்த நெற்பயிர்கள் கருகிவிட்டன. நாங்கள் அனைவரும் பயிர்க் காப்பீடு செய்திருந்தோம். வறட்சியால் பாதிக்கப்பட்ட காப்பீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளுக்கு காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்பட உள்ள இழப்பீடு விவரங்கள் வந்துள்ளது. அதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. வறட்சியால் முழுமையாக பாதிக்கப்பட்ட எங்கள் பகுதியை 2.65 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வயலுக்கு அருகில் உள்ள ஆவாரம்பட்டி கிராமத்தில் 83.52 சதவீதமும், நந்தனம்பட்டி கிராமத்தில் 70.44 சதவீதமும், தொண்டராயன்பாடி கிராமத்தில் 81.25 சதவீதமும் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பயிர் பாதிப்பு குறித்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் குளறுபடி இருப்பதால் நாங்கள் மிகுந்த மனஉளைச்சலில் உள்ளோம். எனவே எங்களது நியாயமான கோரிக்கையை ஏற்று பயிர்க் காப்பீட்டு நிறுவனத்தின் தவறுதலான கணக்கெடுப்பு விவரங்களை தள்ளுபடி செய்துவிட்டு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள எங்கள் பகுதிக்கு முறையாக பயிர்க் காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டிருந்தது.

தஞ்சையை அடுத்த புதுப்பட்டினம் ஊராட்சியை சேர்ந்த விவசாயிகள் 20–க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுவில், நாங்கள் 2016–17–ம் ஆண்டிற்கான பயிர்க் காப்பீட்டு தொகையை செலுத்தியுள்ளோம். நெற்பயிருக்கு போதுமான தண்ணீர் இல்லாததால் பயிர்கள் முழுவதும் கருகி வீணானது. இதை மத்திய, மாநில குழுவினர் பார்வையிட்டனர். ஆனால் புதுப்பட்டினம் பகுதியில் குறைவான அளவு நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், சூரக்கோட்டை, ஒரத்தநாடு பகுதியில் அதிகஅளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்யாமல் இருக்கையில் அமர்ந்தே கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர். நேரடியாக சென்று ஆய்வு செய்து இருந்தால் உண்மை நிலவரம் தெரிந்து இருக்கும். எனவே சூரக்கோட்டையை போல் புதுப்பட்டினத்திற்கும் அதிகஅளவு பாதிப்பு ஏற்பட்டதாக அறிவித்து பயிர்க் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல ராயந்தூர், சித்தாயல், விண்ணமங்கலம் போன்ற பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகளும், பயிர் பாதிப்பு கணக்கெடுப்பில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும், எனவே பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பயிர்க் காப்பீட்டு தொகை வழங்க கோரி கோரிக்கை மனு அளித்தனர்.


Next Story