கரும்புக்கான நிலுவைத்தொகை ரூ.2,413 கோடியை பெற்றுத்தர வேண்டும் விவசாயிகள் மாநாட்டில் வலியுறுத்தல்


கரும்புக்கான நிலுவைத்தொகை ரூ.2,413 கோடியை பெற்றுத்தர வேண்டும் விவசாயிகள் மாநாட்டில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Aug 2017 11:00 PM GMT (Updated: 21 Aug 2017 9:19 PM GMT)

கரும்புக்கான நிலுவைத்தொகை சுமார் ரூ.2,413 கோடியை ஆலை நிர்வாகத்திடம் இருந்து மாநில அரசு பெற்றுத் தர வேண்டும் என்று திருவண்ணாமலையில் நடந்த விவசாயிகள் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

திருவண்ணாமலை,

கரும்பு விவசாயிகள், நுகர்வோர் சங்கம் மற்றும் விவசாயிகள் சங்க மாவட்ட மாநாடு திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் ஆ.வெங்கடேசன் தலைமை தாங்கினார். திராவிட விவசாயிகள் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் பழனிசாமி, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்ட பொது செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த விவசாயிகள் உரிமை மீட்பு சங்க மாவட்ட செயலாளர் சரவணன் வரவேற்றார்.

இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் தேசிய தலைவர் கிரி, கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் ராஜேந்திரன், பிச்சாண்டி எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.

4 வருட கரும்பு நிலுவைத்தொகை சுமார் ரூ.2,413 கோடியை ஆலை நிர்வாகத்திடம் இருந்து மாநில அரசு உடனே பெற்றுத் தர வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வீதம் நடப்பு பருவத்திற்கு விலையாக அறிவிக்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரும்புக்கு இன்சூரன்ஸ் தொகை ரூ.2,400 ஆக வசூலிப்பதை மாற்றி, விழுப்புரத்தில் கரும்புக்கு இன்சூரன்ஸ் தொகை ரூ.1,440 வசூலிப்பது போல் பிடித்தம் செய்ய வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் போன்ற திட்டங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும்.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ரேணு, பொது செயலாளர் சுந்தரம், மாவட்டத் தலைவர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story