தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்திய 66 பேர் கைது


தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்திய 66 பேர் கைது
x
தினத்தந்தி 21 Aug 2017 10:30 PM GMT (Updated: 21 Aug 2017 9:25 PM GMT)

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்திய நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தினர் 66 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டரின் தடை உத்தரவை மீறி தொடர்ந்து நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு நிலத்தடி நீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் முறைகேடாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதால் புதுக்கோட்டை, சாயர்புரம், சேர்வைக்காரன்மடம், மங்கலக்குறிச்சி, வாகைகுளம், வல்லநாடு, கருங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் நிலத்தடி நீர் உறிஞ்சுவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.முற்றுகை போராட்டம்

இந்த நிலையில் நிலத்தடி நீர் முறைகேடாக உறிஞ்சப்படுவதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வலியுறுத்தி நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடந்தது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமை தாங்கினார். நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜா முன்னிலை வகித்தார். போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி குணசீலன், சமூக ஆர்வலர் பாத்திமா பாபு, அமைப்பு சாரா தொழிலாளர் சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நாம்தமிழர் கட்சி மண்டல செயலாளர் இசக்கிதுரை, இளைஞர் அணி நிர்வாகி வேல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

66 பேர் கைது

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒரு பிரிவினர் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கு அருகே சென்று கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த தூத்துக்குடி புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு சீமைச்சாமி, இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி மற்றும் போலீசார் முற்றுகை போராட்டம் நடத்திய 66 பேர்களை கைது செய்து வேனில் ஏற்றினார்கள்.


Next Story