பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் பண பரிவர்த்தனை பாதிப்பு


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் பண பரிவர்த்தனை பாதிப்பு
x
தினத்தந்தி 22 Aug 2017 11:00 PM GMT (Updated: 22 Aug 2017 8:41 PM GMT)

நீலகிரி மாவட்டம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.250 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

ஊட்டி,

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து நீலகிரி மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. ஊட்டி ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் கஜேந்திரன், லோகேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தின்போது, பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் ஊட்டி தாலுகாவில் உள்ள பல்வேறு வங்கிகளை சேர்ந்த வங்கி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

வேலைநிறுத்தம் காரணமாக வங்கிகளுக்கு ஊழியர்கள் யாரும் வரவில்லை என்பதால், அனைத்தும் வங்கிகளும் நேற்று மூடப்பட்டன. இதனால் வங்கிகளில் பண பரிவர்த்தனை செய்வதற்காக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதேபோல் கூடலூரில் உள்ள அனைத்து வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். மாவட்டம் முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ்குமார் கூறியதாவது:–

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ள மத்திய அரசை கண்டித்து மாவட்டம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. பொதுத்துறை வங்கிகளை இணைக்கக்கூடாது, வாராக்கடன் வசூலிப்பதை துரிதப்படுத்த வேண்டும், வாராக்கடன் கட்டாதவர்கள் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும், வாராக்கடன் கட்டாதவர்களின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும். வசதி வாய்ப்புகள் இருந்தும் கடன் கட்டாத நபர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

வேலைநிறுத்த போராட்டம் காரணமாக பொதுத்துறை வங்கி ஊழியர்கள் பணிக்கு செல்லாததால் வங்கிகள் வெறிச்சோடின. வேலைநிறுத்தத்தால் மாவட்டம் முழுவதும் வங்கி மூலம் நடைபெறும் பண பரிவர்த்தனை ரூ.150 கோடியும், காசோலை பண பரிவர்த்தனை ரூ.100 கோடியும் என மொத்தம் ரூ.250 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருந்தனர். ஆனால் தனியார் வங்கிகள் வழக்கம்போல் இயங்கின.


Next Story