திருச்செங்கோடு ஒன்றிய பகுதிகளில் ரூ.1.23 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்


திருச்செங்கோடு ஒன்றிய பகுதிகளில் ரூ.1.23 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்
x
தினத்தந்தி 25 Aug 2017 10:30 PM GMT (Updated: 25 Aug 2017 8:45 PM GMT)

திருச்செங்கோடு ஒன்றிய பகுதிகளில் ரூ.1.23 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல்,

திருச்செங்கோடு ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு செய்தார். கருவேப்பம்பட்டி ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வரும் அம்மா உடற்பயிற்சி கூடம் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வரும் அம்மா பூங்காவின் பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டார். சீனிவாசன்பாளையத்தில் ரூ.24 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில் ஏரி தூர் வாரும் பணி நடந்து வருவதையும், புதுப்பாளையத்தில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு மற்றும் மின் மோட்டார் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வரும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து தேவனாங்குறிச்சி ஊராட்சி, கந்தசாமி நகரில் ரூ.7 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய ரேஷன்கடை கட்டிட பணியையும் கலெக்டர் பார்வையிட்டார்.

திருச்செங்கோடு ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் ரூ.1 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வரும் 15-க்கும் மேற்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், அந்த பணிகளை தரமாகவும், துரிதமாகவும், குறிப்பிட்ட காலத்தில் செய்து முடித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது கலெக்டர் கூறுகையில், கடந்த மூன்று நிதியாண்டுகளில் திருச்செங்கோடு ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ரூ.31 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் 8 ஆயிரத்து 796 பணிகள் எடுக்கப்பட்டு, 6 ஆயிரத்து 809 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளதாகவும், மீதமுள்ள 1,987 பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், திருச்செங்கோடு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடாசலம், பாலமுருகன், உதவி பொறியாளர்கள் பழனிவேல், பாண்டியன் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் மீனா, சசிகலா ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story